2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘கத்தோலிக்கத் திருச்சபையின் பாலியல் குற்றங்கள் மலம் போன்றன’

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கத்தோலிக்கப் பாதிரியார்களால், சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் துன்புறுத்தல்களை நிறுத்துவதற்கு உறுதியுடன் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள பாப்பரசர் பிரான்ஸிஸ், திருச்சபையில் காணப்படும் ஊழல்கள், பாலியல் குற்றங்களை மூடிமறைத்தல் ஆகியவற்றை, மனித மலத்தோடு ஒப்பிட்டார்.

முன்னைய காலங்களில், முக்கியமான கத்தோலிக்க நாடாக இருந்த அயர்லாந்து விஜயம் மேற்கொண்டுள்ள பாப்பரசர், அங்குள்ள மக்களை நேற்று முன்தினமும் (25), நேற்றும் (26) சந்தித்தார். இதில், நேற்று முன்தினமே, இக்கருத்துகளை அவர் வெளியிட்டார்.

அயர்லாந்தில், தேவாலயத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிய சிலரும் பங்குபற்றிய இந்நிகழ்வில், இவ்வாறான குற்றங்களைத் தடுக்க முடியாமை, தேவாலயத்துக்கான அவமானம் என்று குறிப்பிட்ட அவர், அவற்றை இல்லாதொழிப்பதற்காக, மேலும் அதிகரித்த அர்ப்பணிப்புக்கு வலியுறுத்தினார்.

தேவாலயங்களில் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடந்த நாடுகளில் ஒன்றான அயர்லாந்து, அண்மைக்காலத்தில், கத்தோலிக்கத் திருச்சபையின் பிடியிலிருந்து விலகி, முற்போக்கான முடிவுகளை எடுக்கும் வகையில் மாற்றமடைந்து வருகிறது. ஆகவே, 4 தசாப்தங்களின் பின்னர், பாப்பரசர் ஒருவர் அயர்லாந்துக்கு விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பமாக இது இருந்தாலும், கொண்டாட்டங்கள் அல்லது வரவேற்புகளைத் தாண்டி, கோபமும் கேள்விகளும் அதிகரித்த வகையிலேயே, பாப்பரசருக்கான வரவேற்புகள் இருந்தன.

அதன் பின்னர் அவர், பாதிரியார்களாலும் சமய, நிறுவன ரீதியாகப் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகிய 8 பேரோடு, அங்குள்ள வத்திக்கான் தூதரகத்தில் வைத்து, 90 நிமிடங்களாக உரையாடினார். இதன்போதே அவர், பாலியல் குற்றங்களை, மலத்தோடு ஒப்பிட்டார் என, பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகியோருக்கான அமைப்புத் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X