2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கஷோக்ஜியின் இறுதி வார்த்தைகள்: ‘எனக்கு மூச்சுத் திணறுகிறது’

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபியத் துணைத் தூதரகத்துக்குள் வைத்துக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் இறுதி வார்த்தைகளாக, “எனக்கு மூச்சுத் திணறுகிறது” என்பனவே காணப்பட்டன என, துருக்கி ஊடகவியலாளரொருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

துருக்கியில் அரசாங்கத்துக்கு ஆதரவான பத்திரிகையான சபாவின், புலனாய்வுப் பிரிவுக்குப் பிரிவுக்குப் பொறுப்பான ஊடகவியலாளரான நாஸிப் கரமன், அல் ஜஸீரா ஊடகத்துக்குத் கருத்துத் தெரிவிக்கும் போதே, இதை வெளிப்படுத்தினார்.

கஷோக்ஜியின் கொலை தொடர்பான ஒலிப்பதிவுகளைச் செவிமடுத்ததாகவும், 7 நிமிடங்கள் அவரது கொலை நீடித்ததெனவும், அவர் குறிப்பிட்டார்.

அதன்போது இறுதியாக, “எனக்கு மூச்சுத் திணறுகிறது. இந்தப் பையை, எனது தலையிலிருந்து எடுங்கள். மூடிய இடங்கள் பற்றிய பயம் எனக்குள்ளது” என அவர் சத்தமிட்டுள்ளார்.

இந்த ஒலிப்பதிவின்படி, கஷோக்ஜியின் தலையில், பையொன்று கட்டப்பட்டு, அவர் மூச்சுத் திணற வைக்கப்பட்டே கொலைசெய்யப்பட்டார் என்று கருதப்படுகிறது.

இதேவேளை, கஷோக்ஜியின் கொலை தொடர்பில், சவூதி அரேபியாவின் உயர்நிலைத் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ள நிலையில், “எதிரிகளை” கொல்வது தொடர்பில், சவூதியின் புலனாய்வுப் பிரிவினர், 2017ஆம் ஆண்டில் கலந்துரையாடினர் என, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வணிகத் தலைவர்களைச் சந்தித்த, சவூதியின் முடிக்குரிய இளவரசருக்கு நெருக்கமான புலனாய்வுத் தரப்புகள், ஈரானின் பொருளாதாரத்தைச் சிதைப்பது தொடர்பிலும், “எதிரிகளை” கொல்வது தொடர்பிலும் கலந்துரையாடின என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X