2025 மே 14, புதன்கிழமை

காசா போரை நிறுத்த கோரி ஐ.நா. தீர்மானம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 29 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக் கோரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 இஸ்ரேல் - ஹமாஸ் போர் 20 நாட்களைக் கடந்துள்ளது . 

இந்த நிலையில், அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் அரசு ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது. 

தீர்மானத்துக்கு ரஷ்யா, பாகிஸ்தான், மாலத்தீவு, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா உள்பட 40 நாடுகள் உத்தரவாதம் அளித்திருந்தன. 'பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் சட்ட, மனிதாபிமான கடமைகளை கடைப்பிடித்தல்' எனத் தீர்மானத்துக்கு தலைப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. அவுஸ்ரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகளும் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. தீர்மானத்துக்கு ஒட்டுமொத்தமாக 120 நாடுகள் ஆதரவும், 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன. அமெரிக்கா எதிர்த்து வாக்களித்ததோடு தீர்மானத்தில் ஓரிடத்தில் கூட ஹமாஸ் அமைப்பினரை ஊடுருவல்காரர்கள் என்று சுட்டிக்காட்டாததை வன்மையாகக் கண்டித்தது.

இந்தி நிலையில் வாக்கெடுப்பைப் புறக்கணித்தது குறித்து ஐ.நா பொதுச் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜனா படேல் கூறுகையில். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதியன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சி அளித்தன. அவை கண்டனத்துக்குரியவை. பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம். அவர்களை உடனடியாக நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்க வலியுறுத்துகிறோம்.

பயங்ரவாதம் வேகமாகப் பரவக் கூடியது. அதற்கு எல்லைகள் இல்லை. தேச பேதங்கள் இல்லை. இனவேறுபாடுகளும் இல்லை. ஆகையால் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உலகம் எந்தவித நியாயங்களையும் கற்பிக்கக் கூடாது. வேற்றுமைகளை விலக்கிவைப்போம். ஒன்றுபட்டு பயங்கரவாதத்துக்கு எதிரான முறைகளைக் கையாள்வோம்.

அதேவேளையில் மனிதாபிமான சிக்கல்கள் கவனிக்கப்பட வேண்டும். காசாவாசிகளுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யும் பொருட்டு சர்வதேச சமூகம் எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அதற்கு இந்தியாவும் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளது.

போரில் ஈடுபட்டுள்ள இருதரப்புகளும் அமைதிப் பேச்சுக்கான சூழலை உருவாக்க வன்முறையை விடுத்து ஆக்கபூர்வ முன்னெடுப்புகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம். ஐ.நா. பொதுச் சபை பயங்கரவாதம், வன்முறைக்கு எதிராக அழுத்தமான செய்தியைக் கடத்தும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X