Editorial / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபிய அரச குடும்பத்துக்கு எதிரான விமர்சனங்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளரொருவர் காணாமற்போனமை தொடர்பில், சவூதி அரேபியா மீது தடைகள் விதிக்கப்பட்டால், அவற்றுக்கான பதிலடி வழங்கப்படுமென, சவூதி அரேபியா எச்சரித்துள்ளது. ஊடகவியலாளர் காணாமற்போன விடயம், சவூதி அரேபியப் பங்குச் சந்தையில் தாக்கத்தைச் செலுத்தி, அதில் வீழ்ச்சி ஏற்பட்ட பின்னணியிலேயே, இவ்வெச்சரிக்கையை, சவூதி வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால் கஷோகி, ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்து வருவதோடு, துருக்கியிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துக்குள் சென்ற பின்னர், காணாமற்போயிருந்தார். அவர், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், சவூதி அரேபியா மீதான சர்வதேசக் கண்டனங்கள் அதிகரித்துள்ளதுடன், மிகப்பெரிய முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் ஆகியன, சவூதியில் தமது முதலீடு தொடர்பாக, மீளாய்வு செய்து வருகின்றனர். பல்வேறு நாடுகளும், சவூதி மீது தடைகளை விதிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றன.
“பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலமாகவோ அல்லது அரசியல் அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் ஊடாகவோ, சவூதி அரேபிய இராச்சியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான எந்தவோர் அச்சுறுத்தலையும் முயற்சியையும், இராச்சியம் நிராகரிக்கிறது” எனக் குறிப்பிட்ட அந்நாட்டின் பேச்சாளரொருவர், எந்த நடவடிக்கையையும், அதற்கான மிகப்பெரிய பதிலடியைக் கொண்டு எதிர்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
உலகப் பொருளாதாரத்தில், சவூதி அரேபியா முக்கியமானதும் செயற்றிறன் மிக்கதுமான பங்கை வகிக்கிறத எனக் குறிப்பிட்ட அவ்வதிகாரி, தடைகள் விதிக்கப்பட்டால், பதிலடி வழங்குவதற்காக, 30க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை, சவூதி கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சவூதியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய 3 நாடுகளும் ஒன்றாக இணைந்து, அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளன. அதில், ஊடகவியலாளர் கஷோகி காணாமற்போனமை தொடர்பான விடயத்தை, அதிக கவனத்துடன் ஆராய்ந்து வருவதாக, அந்நாடுகள் தெரிவித்துள்ளன. அத்தோடு, அவருக்கு என்ன நடந்தது என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டுமெனவும், அவர் காணாமற்போனமைக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அந்நாடுகள் வேண்டியுள்ளன.
41 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago
1 hours ago