2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘சீனாவின் முதலீடுகள் உள்நோக்கமற்றவை’

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபிரிக்கக் கண்டத்தில் சீனாவால் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், அரசியல் உள்நோக்கம் கொண்டவையல்லவென, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கும் வணிகத் தலைவர்களும், நேற்று (03) உறுதியளித்தார். வெளிநாடுகளில் சீனாவால் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், தொடர்ச்சியாக விமர்சிக்கப்படும் நிலையிலேயே, சீன ஜனாதிபதியின் இக்கருத்து வெளியாகியுள்ளது.

இரண்டு நாள்கள் இடம்பெறவுள்ள சீன - ஆபிரிக்க உச்சிமாநாட்டுக்கு முன்னதாகவே, இக்கருத்தை அவர் வெளியிட்டிருந்தார். இம்மாநாட்டில், சீனாவின் “பட்டும் பாதையும்” வேலைத்திட்டம் தொடர்பான கவனமே, அதிகமாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டும் பாதையும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, பல பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன்கள், ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. வீதிகள், ரயில்வே துறை, துறைமுகங்கள், ஏனைய பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியன, இத்திட்டத்தின் கீழ் கவனஞ்செலுத்தப்படுகின்றன. எனினும், சீனாவின் கடன்கள், வளர்ந்துவரும் நாடுகளை, கடன் வலைக்குள் சிக்க வைக்கின்றன என, விமர்சகர்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான விமர்சனங்களுக்குப் பதிலளிப்பது போலவே, சீன ஜனாதிபதியின் கருத்து அமைந்துள்ளது. “ஆபிரிக்காவின் உள்ளக விவகாரங்களில் சீனா தலையிடுவதில்லை. அத்தோடு, தனது சொந்த விருப்பத்தை, ஆபிரிக்கா மீது, சீனா திணிப்பதில்லை” என, ஜனாதிபதி ஸி தெரிவித்தார்.

ஆபிரிக்காவுடனான சீனாவின் இணைந்த அபிவிருத்திச் செயற்பாடுகள், பாரிய அபிவிருத்தியை நோக்கியதாகவே உள்ளன எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி ஸி, ஆடம்பரமான எந்தத் திட்டத்திலும் தமது முதலீடுகள் பயன்படுவதில்லை என்றும், அதிகமாகத் தேவைப்படும் இடங்களிலேயே அவை பயன்படுத்தப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.

ஆனால், சீனாவின் முதலீடுகள், தேவையற்ற இடங்களில் முதலீடு செய்யப்படுவதன் ஊடக, முதலிடப்படும் நாடுகளுக்கு அவை பயனற்றுப் போகின்றன எனவும், அதனால் கடன் சுமை அதிகரிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அக்குற்றச்சாட்டுகளை அங்கிகரிப்பது போல, ஜனாதிபதி ஸி, கருத்துத் தெரிவித்திருந்தார். தங்களது வேலைத்திட்டங்களின் வர்த்தக ரீதியான பயன்தரு நிலையை ஆராய வேண்டியுள்ளதெனக் குறிப்பிட்ட அவர், அதிகமாக நிலைத்திருக்கக்கூடிய முதலீடுகளை மேற்கொள்வது அவசியமெனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X