2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

சீனாவுக்கு மீண்டும் சென்றார் கிம்

Editorial   / 2018 ஜூன் 20 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன், சீனாவுக்கான விஜயமொன்றை நேற்று (19) மேற்கொண்டார். ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன், சிங்கப்பூரில் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பாக, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிடம் அவர் விளக்கமளித்தார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவிக்கு வந்த பின்னர், தனது நாட்டுக்குள்ளேயே காணப்பட்ட கிம் ஜொங்-உன், இவ்வாண்டில் மாத்திரம், சீனாவுக்கு மூன்று தடவைகள் விஜயம் செய்துள்ளார். இதைத் தவிர, சிங்கப்பூருக்கான விஜயத்தை, கடந்த வாரம் மேற்கொண்டிருந்ததோடு, தென்கொரிய எல்லைக்குள்ளும் அவர் சென்றிருந்தார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, தென்கொரியாவும் ஐ.அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளும் இராணுவப் பயிற்சிகளை இடைநிறுத்தும் உறுதிமொழி வழங்கப்பட்டிருந்ததோடு, அதற்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு, நேற்றைய தினமே விடுக்கப்பட்ட நிலையில், அவ்வறிவிப்போடு இயைந்ததாக, கிம்மின் சீன விஜயம் அமைந்தது.

இதில் குறிப்பாக, கிம்மின் முன்னைய விஜயங்களின் போது, அவ்விஜயம் இரகசியமானதாக வைக்கப்பட்டிருந்ததோடு, முதலாவது விஜயத்தின் போது, சீனாவை விட்டு அவர் வெளியேறிய பின்னர் மாத்திரமே, அவரது விஜயம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை அவர் விஜயம் செய்வதற்கு முன்பாகவே, அவரது விஜயம் தொடர்பாக, சீன அரச ஊடகங்களில் அறிவிக்கப்பட்டதோடு, அவர் இரண்டு நாட்களுக்குத் தங்கியிருப்பார் என்றும் கூறப்பட்டது.

வடகொரியத் தலைவருக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில், சந்திப்புகள் இடம்பெற்றனவா என்பது தொடர்பாகவும், அவ்வாறான சந்திப்பில் என்ன விடயங்கள் உரையாடப்பட்டன என்பது தொடர்பாகவும், இதுவரை தகவலேதும் வெளியாகியிருக்கவில்லை.

ஆனால், சிங்கப்பூர் சந்திப்பு இடம்பெற்றுச் சில நாட்களிலேயே, வடகொரியாவின் நெருங்கிய இராஜதந்திர நட்பு நாடான சீனாவுக்கு, வடகொரியத் தலைவர் விஜயம் செய்துள்ளமை, முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X