Editorial / 2018 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் செயற்பட்டுவரும் தொண்டு நிறுவனமான செஞ்சிலுவைச் சங்கத்துக்குத் தம்மால் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தரவாதத்தை விலக்கிக் கொள்வதாக, தலிபான் குழு அறிவித்துள்ளது. இதன்மூலம், செஞ்சிலுவைச் சங்கத்தை இலக்குவைத்து, வெளிப்படையான தாக்குதல்களை அக்குழு மேற்கொள்ளலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் காபூலிலுள்ள புல்-ஈ சார்க்கி சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் கைதிகளை, செஞ்சிலுவைச் சங்கம் புறக்கணித்துவிட்டது எனக் குற்றஞ்சாட்டியே, இம்முடிவை அக்குழு எடுத்துள்ளது. உண்ணாவிரதக் கைதிகளுக்குப் போதுமான மருத்துவப் பராமரிப்பை வழங்குவதற்கு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, சங்கம் அழுத்தம் வழங்கவில்லை என்பது, தலிபான்கள் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டாகும்.
தமது முடிவை அறிவித்த தலிபான் குழு, ஆப்கானிஸ்தானில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, சங்க ஊழியர்களின் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்குமென்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியாது என்று குறிப்பிட்டதோடு, "தமது நடவடிக்கைகளைத் திருத்துவதற்காக அவர்கள், தலிபான்களுடன் இணக்கமொன்றுக்கு வரும்வரை" இந்நிலை தொடருமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், கடந்த திங்கட்கிழமையன்று சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட தாங்கள், மருத்துவப் பராமரிப்புத் தொடர்பாக ஆராய்ந்ததாகவும், இடைக்காலத் தீர்வை வழங்கியதாகவும், செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டது. அத்தோடு, நடுநிலையான அமைப்பு என்ற அடிப்படையில், கைதிகளின் உண்ணாவிரதக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அழுத்தம் வழங்குவதையோ அல்லது உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கைதிகளிடம் கோருவதையோ, செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொள்ளாது என, செஞ்சிலுவைக்கான சர்வதேசச் செயற்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே, தமது ஊழியர் ஒருவர் கடந்தாண்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் தமது நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வதாக, அச்சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago