2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

தடுமாறுகிறது கேரளா

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , மு.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கேரள மாநிலத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 357ஆக உயர்ந்துள்ளதென, அம்மாநில அதிகாரிகள் நேற்று (19) தெரிவித்தனர். மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஆகியவற்றின் காரணமாக, சுமார் 3 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உட்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.

சுற்றுலாவுக்குப் பெயர் போன கேரளாவில், இவ்வாண்டு மே மாத முடிவிலிருந்து, தொடர்ச்சியாகக் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட மண்சரிவுகள், வெள்ளப்பெருக்குகள் என்பவற்றால், பல கிராமங்களால் இருந்த இடம் தெரியாமல் அழிவடைந்துள்ளன.

மே 29ஆம் திகதியிலிருந்து, 357 பேர் உயிரிழந்தனர் எனக் குறிப்பிட்ட, மாநிலத்தின் தகவல் அதிகாரி, நேற்றுக் காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், 33 பேர் பலியாகினர் எனவும் குறிப்பிட்டார்.

மாநிலம் முழுவதிலும், 353,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், அவர்கள், 3,026 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த அனர்த்தங்கள் காரணமாக, வீதிகளும் பாலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மலைப்பகுதிக் கிராமங்கள், தனித்துவிடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிக நிதியுதவியை எதிர்பார்த்துள்ள கேரள மாநில அரசாங்கம், அதிக ஹெலிகொப்டர்கள், அதிக மோட்டார் படகுகள் என்பவற்றையும் கோரியுள்ளது.

இவற்றுக்கு நடுவில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் (18) கேரளாவுக்கு விஜயம் மேற்கொண்டு, மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். அத்தோடு, உடனடி மானியமாக, 75 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X