2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

தென்மேற்கு நகரங்களை இழந்தது எதிரணி

Editorial   / 2018 ஜூலை 01 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுமையான குண்டுத் தாக்குதல்களில், சிரியாவின் தென்மேற்கில் எதிரணியின் நிலைகள் தகர்ந்துள்ள நிலையில், எதிரணியின் கட்டுப்பாட்டிலிருந்த நகரங்களும் கிராமங்களும் அரசாங்க ஆட்சியை நேற்று ஏற்றுக் கொண்டுள்ளன. குறித்த குண்டுத் தாக்குதல்களில் 160,000 பேர் இடம்பெயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டிக்கெதிராக ஆரம்பத்தில் கிளர்ச்சி ஏற்பட்ட இடங்களில் சிரியாவின் தென்மேற்கும் ஒன்று என்ற நிலையில், இங்கும் எதிரணி தோல்வியைத் தளுவினால், இட்லிப் மாகாணத்தை சூழவுள்ள வட மேற்கே துருக்கியை எல்லையாகக் கொண்ட பகுதி மட்டுமே எதிரணியிடம் மிஞ்சும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான சிரியாவின் தென்மேற்கு பகுதி அடங்கியுள்ள டெரா மாகாணத்துக்கான சமாதான உடன்பாடுகள் தொடர்பில் ரஷ்ய பேரம்பேசுநர்களை எதிரணி நேற்றுச் சந்தித்தபோதும் குறித்த பேச்சுவார்த்தைகள் தகர்ந்திருந்தன.

இந்நிலையில், கடுமையான விமானத் தாக்குதல்களையடுத்து, அண்மைய நாட்களில் சிரிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பல நகரங்களிலுள்ள உள்ளூர்க் குழுக்கள், பிரதான எதிரணி நடவடிக்கைகளிலிருந்து சுயாதீனமாக தங்களது சரணடையும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தன.

இதேவேளை, இராணுவத்திடமிருந்து சில நகரங்களையும் கிராமங்களையும் நேற்று முன்தினம் மீளக் கைப்பற்றியதாக எதிரணியினர் தெரிவிக்கின்றபோதும் ஒட்டுமொத்தமாக குறிப்பிடத்தக்களவு பகுதிகளை எதிரணி இழந்துள்ளது.

இந்நிலையில், டயேல், அல்-காரியா, அல்-கார்பியா நகரங்களுக்குள் அசாட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியதை சிரிய அரச தொலைக்காட்ட்சி காண்பித்திருந்தது.

இதேவேளை, குறித்த நகரங்களை விட வேறு நகரங்களும் கிராமங்களும் அசாட்டின் ஆட்சியின் கீழ் மீண்டும் வருவதற்கு இணங்கியுள்ளதாக, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகமும் சிரிய அரசாங்கத்தின் ஆதரவாளரான ஹிஸ்புல்லாவின் ஊடகப் பிரிவும் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், ஜோர்டானிய எல்லைக்கருகேயுள்ள டெரா நகரத்தைச் சுற்றி கடும் மோதல் தொடருவதாகக் கூறப்பட்டுள்ளது. அங்குள்ள விமானத் தளத்தைக் கைப்பற்ற சிரிய இராணுவம் மீண்டும் தவறியுள்ளதாக எதிரணி தெரிவித்துள்ளது. இது தவிர, டெரா மாகாணத்தின் வடமேற்கு பகுதி இன்னும் எதிரணியின் கட்டுப்பாட்டிலேயே காணப்படுகிறது.

இந்நிலையில், டெராவுக்கு கிழக்காகவுள்ள அல்-சஹ்வா நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஐந்து சிறுவர்கள் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் 19ஆம் திகதி மோதல் அதிகரித்ததிலிருந்து 126 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X