2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘நானும் கிம்மும் காதலில்’

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னும் தானும், “காதலில்” விழுந்துள்ளதாக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியத் தலைவரிடமிருந்து கிடைத்த “அழகான கடிதங்கள்” காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார். 

மேற்கு வேர்ஜினியாவில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் நேற்று முன்தினம் (29) உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரியத் தலைவருடனான தனது உறவு குறித்துக் குறிப்பிட்டார். 

“Love” என்பது, காதலையும் அன்பையும் குறித்தும் பொதுவான ஆங்கிலச் சொல் என்ற போதிலும், “fell in love” என ஜனாதிபதி ட்ரம்ப் பயன்படுத்திய சொற்றொடர், காதலில் வீழ்வதைக் குறிப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. 

வடகொரியத் தலைவரின் கடிதங்களை, மிகச்சிறந்த கடிதங்கள் என வர்ணித்த அவர், அதன் மூலமே “காதலில்” வீழ்ந்ததாகக் குறிப்பிட்டார். 

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றும் போதும், வடகொரியத் தலைவர் கிம் மீது, புகழ்ச்சிகரமான விடயங்களையே குறிப்பிட்டிருந்தார். 

அதன் பின்னர், வடகொரியத் தலைவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதத்தைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களும், மீண்டுமொரு சந்திப்பதற்கான வாய்ப்பு எட்டியுள்ளதென அறிவிக்கப்பட்டிருந்தது. 

வடகொரியத் தலைவர் மீதான அவரது இக்கருத்துகள், 12 மாதங்களுக்கு முன்னர், கடந்தாண்டின் பொதுச் சபை அமர்வில், வடகொரியாவை முற்றுமுழுதாக அழித்துவிடப் போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தமைக்கு, முற்றிலும் மாறான கருத்துகளாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X