2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

பதவிநீக்கப்படும் ஆபத்தில் இத்தாலிய ஜனாதிபதி

Editorial   / 2018 மே 29 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய ஜனாதிபதி சேர்ஜியோ மட்டரெலா, பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கான மனுவை எதிர்கொள்ளும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார். நாட்டின் நிதியமைச்சருக்கான தெரிவை அவர் நிராகரித்ததைத் தொடர்ந்தே, இந்நிலை ஏற்பட்டுள்ளது.

நிதியமைச்சராக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட பவுலோ சவோனா பரிந்துரைக்கப்பட்டிருந்தார். எனினும், முதலீட்டாளர்களிடமிருந்து கிடைத்த எதிர்ப்பைத் தொடர்ந்து, அவரை நியமிக்க முடியாதென, தனது “வீற்றோ” அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி நிராகரித்திருந்தார்.

ஜனாதிபதியின் இம்முடிவைத் தொடர்ந்து, இத்தாலியின் பிரதானமான பரப்புரைவாதக் கட்சிகளும் இணைந்து அமைக்க முன்வந்த கூட்டணிக்கான வாய்ப்பு இல்லாது போனது.

இதனால், மீண்டுமொரு தேர்தல் இடம்பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதுடன், இடைக்காலப் பிரதமரொருவரை, ஜனாதிபதி நேற்று நியமித்தார்.

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மீதான விமர்சனங்கள் அதிகளவில் முன்வைக்கப்படுகின்ற போதிலும், தனது முடிவை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

நிதியமைச்சராகப் பிரேரிக்கப்பட்டவரின் நிலைப்பாடு, இத்தாலிய, வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சப்படுத்தியது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அவரின் நிலைப்பாட்டுடன், அவரைப் பிரேரித்த இரண்டு கட்சிகளின் நிலைப்பாடுகளுமே மோதிக் காணப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இம்முடிவைத் தொடர்ந்து, பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இத்தாலியின் அரசமைப்புப்படி, அமைச்சரொருவரை நிராகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ள போதிலும், அது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச ஊடகங்களின் அடிப்படையில், இதுவரை இதற்கு முன்னர் 3 தடவைகளே இது நடந்துள்ளது எனக் கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X