2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

பலஸ்தீன - இஸ்‌ரேல் பிரச்சினைக்கு பலஸ்தீனமின்றி சமாதானத் திட்டம்?

Editorial   / 2018 ஜூன் 26 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் திட்டம், பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸின் பங்களிப்பு இருந்தாலோ, இல்லாவிட்டாலோ வெளியிடப்படும் என, ஐ.அமெரிக்கா அறிவித்துள்ளது. அண்மைக்காலத்தில், ஐ.அமெரிக்காவுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் காட்டுவதாக இது அமைகிறது.

மத்திய கிழக்குக்காக விஜயத்தை மேற்கொண்டு, பலஸ்தீன ஜனாதிபதி தவிர ஏனைய தலைவர்களைச் சந்தித்துவரும், ஐ.அமெரிக்க ஜனாதிபதியின் ஆலோசகரும் அவரின் மருமகனுமான ஜரெட் குஷ்னர், பலஸ்தீனப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே, பலஸ்தீன ஜனாதிபதியின் அங்கிகாரமின்றியும், மத்திய கிழக்குக்கான “சமாதானத் திட்டம்” கொண்டுவரப்படும் என்ற கருத்தை வெளிப்படுத்தினார்.

பேச்சுவார்த்தை மேசைக்கு மீள வருவதற்கு, பலஸ்தீன ஜனாதிபதி விரும்பினால், அவருடன் கலந்துரையாடுவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், அவ்வாறு அவர் வரவில்லையெனில், தமது திட்டத்தைப் பகிரங்கமாக வெளியிடப் போவதாகத் தெரிவித்தார்.

இதன்போது அவர், மத்திய கிழக்குப் பிரச்சினை தொடர்பான தீர்வொன்றைப் பெறுவதற்கு, ஜனாதிபதி அப்பாஸுக்கு விருப்பமோ அல்லது திறனோ உள்ளது என்பது தொடர்பாகத் தனக்கு உறுதியில்லை என்றும் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்குப் பிரச்சினையில், இஸ்‌ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான பிரச்சினையே, பிரதானமாகக் காணப்படுகிறது. ஆனால், ஜெருசலேத்தின் கிழக்குப் பகுதியை, தமது எதிர்கால தேசத்தின் தலைநகராக பலஸ்தீனம் கருதுகின்ற போதிலும், முழு ஜெருசலேத்தையும், இஸ்‌ரேலின் தலைநகராக ஐ.அமெரிக்கா அங்கிகரித்ததைத் தொடர்ந்து, இப்பிரச்சினை மேலும் குழப்பமடைந்துள்ளது.

இஸ்‌ரேல் சார்பான பக்கச்சார்பை ஐ.அமெரிக்கா கொண்டுள்ளது எனத் தெரிவித்து, இப்பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு, ஐ.அமெரிக்காவுக்குத் தகுதியில்லை என, பலஸ்தீனம் தெரிவிக்கிறது. இதனால், மத்திய கிழக்குக்கு விஜயம் செய்த ஐ.அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸைச் சந்திப்பதைக் கூட, பலஸ்தீனத் தலைவர்கள் தவிர்த்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X