2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பின் சல்மான் மீதான விமர்சனங்கள் ‘சிவப்புக் கோடு’

Editorial   / 2018 நவம்பர் 23 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டமை தொடர்பில், சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், அவர் மீதான விமர்சனங்கள், “சிவப்புக் கோடுகள்” என, சவூதி அரேபியா எச்சரித்துள்ளது. முடிக்குரிய இளவரசரையும் சவூதியையும் நியாயப்படுத்தும் வகையில் அமைந்த, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அறிக்கையின் பின்னர், சவூதியின் இக்கருத்து வெளிவந்துள்ளது.

கஷோக்ஜியின் கொலை தொடர்பில், முடிக்குரிய இளவரசர் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்படும் கோரிக்கைகள், சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என, சவூதியின் வெளிநாட்டு அமைச்சர் அடெல் அல்-ஜுபைர் தெரிவித்துள்ளார்.

“சவூதி அரேபியாவில், எங்கள் தலைமைத்துவம் தான் சிவப்புக் கோடாகும். புனித மசூதிகள் இரண்டினது காவலரும் (மன்னர்) முடிக்குரிய இளவரசரும், சிவப்புக் கோடாகும்” என, அவர் தெரிவித்தார்.

மன்னரும் முடிக்குரிய இளவரசரும், சவூதியின் ஒவ்வொரு பிரஜையையும் பிரதிநிதித்துவப் -படுத்துகின்றனர் எனத் தெரிவித்த அவர், அவர்களைத் தரங்குறைக்கும் வகையிலான எந்தவிதமான கலந்துரையாடல்களையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

கஷோக்ஜியின் கொலை காரணமாக, சவூதி மீது அண்மைக்காலத்தில் எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஜனாதிபதி ட்ரம்ப்பால், சவூதியை நியாயப்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கை, முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவரது அறிக்கை மூலம், சவூதியின் பக்கமே அவர் உள்ளாரென்பதை அவர் வெளியிட்டுள்ள நிலையில், அதன் பின்னர் இவ்வறிக்கை வெளியிடப்பட்டமை, அந்த அறிக்கையால் ஏற்பட்ட திடமான உணர்வால் தான் என, விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X