2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘பிரெக்சிற்றின் பின்னர் வளமானதாக எதிர்காலம் இருக்கும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகிய (பிரெக்சிற்) பின்னர், ஐ.இராச்சியத்தின் எதிர்காலம் வளமுள்ளதாக இருக்கும் என்ற வாக்குறுதியை வழங்கியுள்ள அதன் பிரதமர் தெரேசா மே, பிரிந்துபோயுள்ள தமது கட்சியிரை ஒன்றுசேர்ப்பதற்கு, தனது முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஐ.இராச்சியத்தில் ஆளும் பழைமைவாதக் கட்சியின் வருடாந்த 4-நாள் மாநாடு இடம்பெற்று வந்தது. இதன் 4ஆவதும் இறுதியுமான நாள், நேற்றாகும். இதன் இறுதி உரையை, பிரதமர் மே ஆற்றினார்.

பிரெக்சிற் தொடர்பாக, பிரதமர் மே தயாரித்துள்ள திட்டம், கட்சிக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வட அயர்லாந்துக் கட்சியுடன் ஆதரவுடன், மிகச்சிறிய பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் கொண்டுள்ள பிரதமர் மே, கட்சியை ஒற்றுமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்நிலையிலேயே உரையாற்றிய அவர், “எங்களுடைய சிறந்த நாள்கள், எங்களின் எதிர்காலத்தில் உள்ளன எனவும், எங்களுடைய எதிர்காலம், ஏராளமான வாய்ப்புகளை வழங்கக்கூடியதராக இருக்குமெனவும், பேரார்வத்துடன் நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

தன்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்டடே, வேலைகளைப் பாதுகாக்கவும், நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தைக் கொண்டு செல்லவும் வாய்ப்பளிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

ஆனால், இன்னொரு திட்டமொன்றை, தயார் நிலையில் வைத்திருப்பதாக, அதை விரைவில் உருவாக்குவதாகவும், அவர் இதன்போது உறுதியளித்தார்.

பிரதமர் மே தயாரித்த திட்டத்தை, அவரது கட்சியினர் மாத்திரமன்றி, ஐரோப்பிய ஒன்றியமும் நிராகரிக்கின்ற நிலையில், மாற்றுத் திட்டங்களைத் தேட வேண்டிய கட்டாயத்தில், பிரதமர் காணப்படுகிறார்.

அவரது திட்டம் தொடர்பாகக் காணப்படுகின்ற முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்றாக, வட அயர்லாந்துக்கும் ஐ.இராச்சியத்தின் ஏனைய பகுதிகளுக்கும் இடையில், பொருட்களை அனுப்பும் போது, என்னவாறான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே காணப்படுகிறது. இதில், இரண்டு தரப்புகளும் விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாராக இல்லாத நிலையில், பிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைகள், இன்னமும் இழுபட்ட வண்ணமே உள்ளன.

அதிலும், வட அயர்லாந்தைச் சேர்ந்த ஜனநாயக ஒன்றியக் கட்சியின் உதவியுடன் ஆட்சியமைத்துள்ள பிரதமர் மே, அக்கட்சியைக் கோபப்படுத்திக் கொண்டு, எதையும் செய்ய முடியாத நிலையிலுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X