2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பிரேஸிலில் தேசிய அருங்காட்சியகம் எரிந்து நாசமானது

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவிலுள்ள மிகப் பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீ காரணமாக, அது எரிந்து நாசமாகியது. பிரேஸிலின் மிகப் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றான இதில் ஏற்பட்ட அழிவை, “அறிவு, பாரம்பரியம் ஆகியவற்றுக்கு ஏற்பட்ட கவலைதரக்கூடிய இழப்பு” என, ஜனாதிபதி மிஷெல் தெமர் வர்ணித்தார்.

இலங்கை நேரப்படி நேற்று (03) அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட தீ, கட்டுப்படுத்தப்பட முடியாமல் தொடர்ந்து கொளுந்துவிட்டு எரிந்தது. சுமார் 20 தீயணைப்புப் பிரிவுத் தொகுதியினர், தீயைக் கட்டுப்படுத்த முயன்றாலும், அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீ, மிக உயரமாக எரிந்தது.

சுமார் நான்கு மணிநேரப் போராட்டத்தின் பின்னர், ஏற்பட்ட தீயை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்திருந்தாலும், நூற்றுக்கணக்கான அறைகளில் அத்தீ பரவியிருந்து, அவற்றை அழித்துவிட்டது என, அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அரசராக இருந்த ஜோவாவோ என்பவரால், 1818ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்வருங்காட்சியகம், 20 மில்லியனுக்கும் மேற்பட்ட பெறுமதியான பொருட்களைக் கொண்டிருந்ததோடு, பிரேஸில் கலாசாரத்தின் முத்து என வர்ணிக்கப்பட்டது.

கிரேக்க - றோமன் காலங்கள், எகிப்துக் காலங்கள் போன்றவற்றின் கலாசாரப் பொருட்கள்; பிரேஸில் எல்லைக்குள் மீட்கப்பட்ட, மிகப் பழமையான மனித உடல்; பிரேஸிலுக்குள் மீட்கப்பட்ட டைனோசரின் எலும்புக் கூடு போன்றன, அவற்றுள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X