2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் கடும்போக்கு வலதுசாரிக்கு வெற்றி

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் ஜனாதிபதித் தேர்தலில், கடும்போக்கு வலதுசாரியும் முன்னாள் இராணுவக் கப்டனுமாகிய ஜெயர் பொல்சொனாரோ, இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டார். ஆனால், தனது நேரடியான வெற்றியை உறுதிசெய்வதற்குத் தேவையான 50 சதவீத வாக்குகளைப் பெறுவதற்கு அவர் தவறிய நிலையில், இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

பிரேஸிலில் தொடர்ச்சியாக ஆண்டுவந்த அரசாங்கங்கள், ஊழலில் ஈடுபட்டன என்ற குற்றச்சாட்டுத் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே, இடதுசாரிகளைத் தவிர்த்து, கடும்போக்கு வலதுசாரியொருவரை, பிரேஸில் ஏற்றுக் கொண்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்பின் இன்னொரு வடிவம் என அழைக்கப்படும் பொல்சொனாரோ, தேசியவாத நிகழ்ச்சிநிரலைக் கொண்டுள்ளதோடு, நிறுவன ரீதியான அரசியலுக்கு எதிரானவராகத் தன்னை வெளிப்படுத்தினார். அத்தோடு, ஊழலுக்கும் இலஞ்சத்துக்கும் மோசடிகளுக்கும் எதிரான நபராக, தன்னை அவர் வெளிப்படுத்தினார்.

அளிக்கப்பட்ட வாக்குகளில் அவர், 46.3 சதவீத வாக்குகளைப் பெற்றார். இரண்டாவது இடத்தைப் பெற்ற இடதுசாரியான பெர்ணான்டோ ஹடட், 26 சதவீத வாக்குகளையே பெற்றார்.

இதன்படி, இவர்களிருவரும், இம்மாதம் 28ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாங்கட்ட வாக்கெடுப்பில் நேரடியாக மோதவுள்ளனர். இரண்டு தரப்புகளும், கடுமையான விமர்சனங்களையும் வாதங்களையும் முன்வைக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், நாடு மேலும் துருவப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இப்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில், வலதுசாரியான பொல்சொனாரோ, இலகுவாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X