2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் வெளியேறத் தடை

Editorial   / 2018 மே 30 , மு.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அசாட் துரானி, நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலும் காஷ்மிரிலும், பாகிஸ்தானின் தலையிடுகள் தொடர்பாக, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் அதிகாரியுடன் இணைந்து அவர் எழுதிய புத்தகத்தைத் தொடர்ந்தே, அவருக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் தலைவராக, 1990ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை பணியாற்றிய துரானி, இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான “ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு” அமைப்பின் முன்னாள் தலைவரான ஏ.எஸ். துலாத் என்பவருடன் இணைந்து, இப்புத்தகத்தை எழுதியிருந்தார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், பிரச்சினைக்குரிய விடயங்களாகக் காணப்படும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக, இவர்கள் இருவருக்குமிடையில் காணப்பட்ட கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு, இப்புத்தகம் எழுதப்பட்டிருந்தது.

தலிபான்கள் உட்பட ஆயுதக்குழுக்கள் பலவற்றை, ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் தொடர்ந்தும் ஆதரித்து வருகிறது என, தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. அதேபோல், காஷ்மிரில் பல ஆயுதக்குழுக்களுக்கு, பாகிஸ்தான் தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருகிறது எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

எனவே தான், இவ்விடயம் தொடர்பாக எழுதப்பட்ட புத்தகம், பாகிஸ்தானில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, அல்-கொய்தா ஆயுதக்குழுவின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில் தங்கியிருந்த போதே சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் அவர் தங்கியிருந்தமை, பாகிஸ்தானுக்குத் தெரிந்திருந்தது எனவும், இப்புத்தகத்தில் கூறப்பட்டிருந்தது.

இவற்றைத் தொடர்ந்தே, முன்னாள் புலனாய்வுத் தலைவர், நாட்டிலிருந்து வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இராணுவம் அல்லது புலனாய்வுப் பிரிவுகள் தொடர்பான விமர்சனங்கள், இலகுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதிலும், நாட்டின் ஆட்சியிலும் நிர்வாகத்திலும், இராணுவத்தின் தலையீடு அதிகமாகக் காணப்படுகிறது என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X