2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மகனின் திருமணத்தை ஒத்திவைத்த நெதன்யாகு

Editorial   / 2025 ஜூன் 16 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரானுடனான மோதல் அதிகரித்து வருவதால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகனின் திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரு​கிறது. இஸ்ரேல் தாக்​குதலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. எண்ணெய் வயல்​கள் நாசமாகின. இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் படுகா​யம் அடைந்தனர்.

இந்த நிலையில், நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகுவுக்கு, அமித் யார்தேனி என்ற பெண்ணுடன் இன்று (ஜூன் 16) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னும் காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையிலும், இஸ்ரேல் - ஈரான் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையிலும் நெதன்யாகு குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக இஸ்ரேல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் விமர்சனம் செய்ததால், தனது மகனின் திருமணத்தை நெதன்யாகு ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமண கொண்டாட்டங்களுக்கு நெதன்யாகு குடும்பம் தயாராகி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் அணுசக்தி தளங்கள், ராணுவ முகாம்கள், ஏவுகணை தளங்களை குறிவைத்து ஒரு மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவியது. இதனால் இஸ்ரேலில் நாடு தழுவிய அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதலுக்கு முன்பே, அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் இஸ்ரேலில் ஏற்கனவே சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. டெல் அவிவ் நகரின் வடக்கே உள்ள கிப்புட்ஸ் யாகுமில் திருமண அரங்குக்கு அருகே சில அரசாங்க எதிர்ப்பு அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.

திருமண நிகழ்வு நடக்கும் இடத்தை சுற்றி இஸ்ரேல் காவல்துறையினர் 100 மீட்டர் சுற்றளவில் இரும்பு சாலைத் தடுப்புகள் மற்றும் முள்வேலிகளை அமைத்துள்ளனர். மேலும், இந்த வார தொடக்கத்தில், போலீஸ் ஹெலிகாப்டர்களை தவிர, மைதானத்தின் 1.5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள வான்வெளி மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகனின் திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X