Editorial / 2018 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை நேரப்படி நேற்று (22) அதிகாலை, நீதித்துறை மூலமாக, இரட்டை அடிகளைப் பெற்றுக்கொண்டார். அவரது பிரசாரக் குழுவின் தலைவராக இருந்த போல் மனபோர்ட், குற்றவியல் வழக்குகளில் குற்றவாளியாக இனங்காணப்பட்டமை ஒரு பக்கமாகவும், அவரது தனிப்பட்ட சட்டத்தரணி மைக்கல் கோஹன், குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைந்தமையுமே, அவருக்கான பாரிய அடிகளாகக் கருதப்படுகின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யத் தலையீடு காணப்பட்டதா என்பது தொடர்பாகவும், ட்ரம்ப் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டனவா என்பது தொடர்பாகவும், விசேட வழக்குத் தொடுநர் றொபேர்ட் மல்லர் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.
றொபேர்ட் மல்லரின் விசாரணைகளில், இதற்கு முன்னரும் பலர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டிருந்த போதிலும், அவர்களில் அநேகமானோர், அக்குற்றச்சாட்டுகளை ஏற்றிருந்தனர். ஏனையோர், ஐ.அமெரிக்காவுக்கு வெளியே வசிப்பவர்களாக இருந்த நிலையில், ஐ.அமெரிக்க நீதிமன்றங்களின் கட்டமைப்புக்குள் அவர்கள் வந்திருக்கவில்லை.
இந்நிலையில், ஐ.அமெரிக்காவுக்குள் வாழ்ந்தவர்களில் மல்லரால் குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டு, குற்றச்சாட்டை ஏற்காத ஒரே நபராக, போல் மனபோர்ட் மாத்திரமே காணப்பட்டார். எனவே, அவர் மீதான வழக்கு நடவடிக்கைகள், உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன.
அவர் மீதான முதற்கட்டக் குற்றச்சாட்டுகள், ஐ.அமெரிக்காவுக்கு எதிரான சதி, பணச்சலவை, நீதியைத் தடுத்தமை உள்ளிட்ட, பிரசாரக் குழுவில் அவரது நடவடிக்கைகள் தொடர்பான 7 குற்றச்சாட்டுகளாக இருந்தன. ஆனால், இவ்வாண்டு பெப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது கட்டக் குற்றச்சாட்டுகளில், வரி மோசடி, வங்கி மோசடி உள்ளிட்ட, பணம் சம்பந்தமான 18 வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
பெப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள், ஜூரி சபை முன்னிலையில் இடம்பெற்று வந்தது. அதில், அவர் மீதான 8 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என இனங்காணப்பட்டார். ஏனைய 10 குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், ஜூரிகளிடத்தில் ஒருமித்த கருத்துக் காணப்படாமையால், அவை தனித்து விடப்பட்டன. இம்முடிவை அறிவித்த நீதிபதி, தண்டனையை விரைவில் அறிவிக்கப் போவதாகக் குறிப்பிட்டார்.
மனபோர்ட் மீதான குற்றச்சாட்டுகள், ட்ரம்ப் பிரசாரக் குழுவில் அவர் ஆற்றிய பணிகளோடு நேரடியாகத் தொடர்பிலில்லாத போதிலும், தற்போது அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளமை காரணமாக, தனது தண்டனைக் காலத்தைக் குறைப்பதற்காக, வழக்குத் தொடுநர்களோடு அவர் ஒத்துழைக்கக் கூடுமென்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இக்குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளியாக இனங்காணப்படப் போவதில்லை என்ற உச்சபட்ச நம்பிக்கையை மனபோர்ட் கொண்டிருந்தமையின் காரணமாகவே, விசாரணையாளர்களுடன் ஒத்துழைத்து, குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றிருக்கவில்லையெனக் கருதப்படுகிறது.
ஆனால், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனையைக் குறைப்பதற்காக, வேறு வழியின்றி, மல்லரின் குழுவுக்கு அவர் ஒத்துழைக்கக்கூடுமென, தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ஜனாதிபதி ட்ரம்ப் மீதான அதிக அழுத்தங்களை அவர் வழங்கக்கூடுமெனக் கருதப்படுகிறது.
மறுபக்கமாக, விசேட வழக்குத் தொடுநராகப் பொறுப்பேற்ற பின்னர், றொபேர்ட் மல்லரால் கொண்டு நடத்தப்பட்ட முதலாவது வழக்கு விசாரணை என்ற அடிப்படையில், அதில் அவருக்கு வெற்றி கிடைத்திருப்பது, அவர் மீதான அழுத்தங்களைக் குறைவடையச் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மல்லரின் விசாரணை, பாரபட்சமானது எனவும் பொதுமக்களின் பணத்தை வீணடிக்கிறது எனவும் ஒன்றுமில்லாததை ஆராய்ந்து நேரத்தை வீணடிக்கிறார்கள் எனவும், ஜனாதிபதி ட்ரம்ப் கூறிவந்தார். எனவே, மனபோர்ட் மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டிருந்தால், ஜனாதிபதி ட்ரம்ப்பின் விமர்சனங்கள் அதிகரித்திருக்கக்கூடும். ஆனால், மனபோர்ட் மீதான 8 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமை, அரசியல் ரீதியாக, ஜனாதிபதி ட்ரம்ப்புக்கான முக்கியமான அடியாகக் கருதப்படுகிறது.
போல் மனபோர்ட் மீதான குற்றச்சாட்டுகள், அரசியல் ரீதியான அடியை, ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு வழங்கியிருக்கின்றன என்று கருதப்பட்டாலும், மைக்கல் கோஹன் தான், ஜனாதிபதிக்கான மிகப்பெரிய பிரச்சினையாக, இப்போது உருவாகியிருக்கிறார். ஏனெனில், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதோடு மாத்திரமல்லாமல், ஜனாதிபதி ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளையும், நேரடியாக அவர் முன்வைத்திருக்கிறார்.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனிப்பட்ட சட்டத்தரணியாக, ஒரு தசாப்தத்துக்கும் மேலாகப் பணியாற்றிய கோஹன், தனிப்பட்ட ரீதியில், ஜனாதிபதி ட்ரம்ப்போடு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். ஜனாதிபதி ட்ரம்ப்பின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் ஒருவராகக் கருதப்பட்ட கோஹன், கடந்தாண்டு செப்டெம்பரில், அதாவது, வெறுமனே 11 மாதங்களுக்கு முன்னர், “ட்ரம்ப்புக்காக, துப்பாக்கிச் சன்னங்களைக் கூட நான் ஏந்துவேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அந்தளவுக்கு விசுவாசமானவராக, கோஹன் கருதப்பட்டார்.
ஆனால், சாதாரண பிரஜையாக ட்ரம்ப் இருந்தபோது, இரு பெண்களுடன் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பாலியல் தொடர்புகள் தொடர்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அவர்கள் கலந்துரையாடக்கூடாது என்பதற்காக, பணத்தைப் பயன்படுத்தி, அவர்களின் மௌனத்தை விலைக்கு வாங்கிய குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்ட பின்னர், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கெதிரான நிலைப்பாட்டை, கோஹன் வெளிப்படுத்தத் தொடங்கினார்.
கோஹன் மீதான குற்றச்சாட்டுகள், மத்திய கூட்டாட்சிப் பணியகத்தாலேயே (எப்.பி.ஐ) சுமத்தப்பட்டிருந்த போதிலும், தனது விசாரணைகளின் ஓர் அங்கமாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களை, றொபேர்ட் மல்லர் வழங்கியதைத் தொடர்ந்து தான், கோஹன் மீதான விசாரணைகளை, எப்.பி.ஐ ஆரம்பித்திருந்தது. எனவே, மல்லர் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்காவிட்டாலும், கோஹன் மீதான விசாரணைகளுக்கு, மல்லர் தான் காரணம் என்பது வெளிப்படையானது.
இதில், குற்றச்சாட்டுகளை ஏற்ற கோஹன், அப்போதைய வேட்பாளர் ட்ரம்ப்பின் கோரிக்கையின் அடிப்படையில் தான், பெண்களுக்கான பணத்தை வழங்கியதாகக் கூறியிருக்கின்றமை, ஜனாதிபதி ட்ரம்ப் மீதான நேரடியான குற்றச்சாட்டாக இருக்கிறது.
தேர்தல் காலத்தில், தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடாது என்பதற்காக, அப்பெண்களுக்குப் பணம் வழங்கியதாக கோஹன் கூறியுள்ளமையின் அடிப்படையில் பார்க்கும் போது, பிரசாரக் காலச் செலவாகவே இது பார்க்கப்படுகிறது. அப்படியாயின், ஐ.அமெரிக்க பிரசாரச் சட்டங்களை மீறியவர்களாக, கோஹனும் ஜனாதிபதி ட்ரம்ப்பும் மாறுவர்.
ஸ்டோர்மி டானியல்ஸ் என்ற, பாலியல் திரைப்பட நடிகையுடன் கொண்டிருந்ததாகக் கூறப்படும் உறவை மறைப்பதற்காக, 130,000 ஐ.அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டன என்பது, ஏற்கெனவே வெளியாகியிருந்த தகவலாக இருந்தது. குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் கோஹனின் அறிவிப்பில், மற்றைய பெண்ணான கரென் மக்டோகல் தொடர்பில், 150,000 ஐ.அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டிருந்தன. ஆனால், இப்பணம், மக்டோகலுக்கு வழங்கப்படாமல், ட்ரம்ப்புடனான உறவு தொடர்பில் சஞ்சிகையொன்றுக்கு மக்டோகல் வழங்கியிருந்த நேர்காணலைப் பிரசுரிக்காமல் விடுவதற்கு, அச்சஞ்சிகைக்கு, இப்பணம் வழங்கப்பட்டிருந்தது.
31 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
4 hours ago