2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘மியான்மார் ஜெனரல்களிடம் இனவழிப்பு நோக்கம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

றோகிஞ்சா முஸ்லிம் மக்களிடத்தில், “இனவழிப்பு” நோக்கத்துடன், மியான்மார் இராணுவத்தால் பாரிய கொலைகளும் கூட்டு வன்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டன எனக் குற்றஞ்சாட்டியுள்ள, ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள், அந்நாட்டு இராணுவத் தளபதியும் 5 ஜெனரல்களும், இவ்வாறான குற்றங்களை ஏற்பாடு செய்தமைக்காக சட்டத்தை எதிர்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணையாளர்களின் அறிக்கை, நேற்று (27) வெளியிடப்பட்ட நிலையில், கடந்தாண்டு முதல், மியான்மார் இராணுவம் மீதும் அரசாங்கம் மீதும் முன்வைக்கப்பட்டுவந்த குற்றச்சாட்டுகளை, இவ்வறிக்கை உறுதிப்படுத்துகிறது.

மியான்மாரில் ஆட்சியிலுள்ள, ஆங் சான் சூ கி தலைமையிலான அரசாங்கம், நாட்டில் ஜனநாயகப் பண்புகளைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அப்பணியை ஆற்றுவதில் அவ்வரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. அக்குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவது போல, இவ்வறிக்கையும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

சூ கியின் அரசாங்கம், வெறுப்புப் பேச்சுத் தொடர்ந்தும் பரவ அனுமதித்ததோடு, ஆவணங்களை அழித்துள்ளது எனவும், மனிதத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்தும் போர்க் குற்றங்களிலிருந்தும் சிறுபான்மையின மக்களைப் பாதுகாக்க அவ்வரசாங்கம் தவறிவிட்டது எனவும், இவ்வறிக்கை தெரிவிக்கிறது. இவற்றின் மூலமாக, மோசமான இக்குற்றங்களில், அரசாங்கமும் பங்களித்துள்ளது என, அறிக்கை நேரடியாகவே குற்றஞ்சாட்டுகிறது.

இருபது பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கையில், இனவழிப்பு நோக்கங்கள், குற்றங்கள் தொடர்பாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இராணுவத்தின் கட்டளையிடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான, போதுமான ஆதாரங்கள் உள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி, இராணுவ நிலைகள் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, றோகிஞ்சா மக்கள் வாழ்ந்துவந்த ராக்கைன் மாநிலத்தில், பாரிய இராணுவ நடவடிக்கையை, மியான்மார் இராணுவம் முன்னெடுத்திருந்தது. ஆயுததாரிகளுக்கெதிரான நடவடிக்கை என இராணுவம் குறிப்பிட்டாலும், பொதுமக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர் என, சர்வதேச அமைப்புகள் குறிப்பிட்டிருந்தன.

இவ்விராணுவ நடவடிக்கை காரணமாக, 700,000க்கும் அதிகமான றோகிஞ்சா மக்கள், மியான்மாரிலிருந்து வெளியேறி, அருகேயுள்ள பங்களாதேஷில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்களில் வெகு சிலரைத் தவிர, பெரும்பான்மையான அனைவரும், தொடர்ந்தும் அங்கேயே காணப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X