2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

முதலாவது உலகப் போரின் முடிவு உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலாவது உலகப் போர் முடிவடைந்து நூறாண்டுகள் பூர்த்தியடைந்தமை, பிரான்ஸ் தலைநகர் பரிஸில், நேற்று முன்தினம் (11) நினைவுகூரப்பட்டது. உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு, உணர்வுபூர்வமாக இந்நிகழ்வை நினைவுகூர்ந்தனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதலாவது உலகப் போரில் கொல்லப்பட்ட மில்லியன்கணக்கான படைவீரர்கள் நினைவுகூரப்பட்டனர்.

இந்நிகழ்வில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர், முக்கிய விருந்தினர்களாகக் காணப்பட்டனர்.

அடையாளங்காணப்படாத படைவீரர் ஒருவரின் நினைவிடத்துக்கு அருகிலிருந்து, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், சுமார் 20 நிமிடங்கள் உரையாற்றினார். இதன்போது, உலகெங்கிலும் அதிகரித்து வருவதாகக் கருதப்படும் தேசியவாதத்தை அவர் விமர்சித்தார்.

தேசியவாதத்தை, “நன்னெறி விழுமியங்களை ஏமாற்றும் ஒன்று” என, அவர் வர்ணித்தார். இதன்போது, சில நாள்களுக்கு முன்னர் தான், “நான் தேசியவாதி தான்” என உரையாற்றியிருந்த ஜனாதிபதி ட்ரம்ப், இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தார்.

“தேசியவாதமென்பது, தேச பக்திக்கு முற்றிலும் எதிரானதாகும். தேசியவாதமென்பது, தேச பக்திக்கான துரோகமாகும். ‘எங்களது நலன்கள் முன்னுரிமை பெறுகின்றன, ஏனையோரின் நலன்கள் பற்றிக் கவலையில்லை’ என நாங்கள் கூறும் போது, தேசம் முக்கியமாகக் கொண்டுள்ள, அதற்கு உயிர்ப்பை வழங்குகின்ற, அதை மிகச்சிறந்ததாக ஆக்குகின்ற ஒன்றை, நாம் அழிக்கிறோம்: நன்னெறி விழுமியங்கள் தான் அவை” என, ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்

இந்நிகழ்வைத் தொடர்ந்து, தலைவர்கள் அனைவரும், பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றனர். இவர்களோடு, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸும் இணைந்துகொண்டார். உலகில் தற்போது முக்கிய பிரச்சினைகளாக உள்ள ஈரான், சிரியா, சவூதி அரேபியா, வடகொரியா உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில், “ஆழமானதும் செறிவானதுமான” கலந்துரையாடல் இடம்பெற்றது என, பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X