2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

யேமன் ஹொடெய்டாவில் மோதலில் 84 பேர் பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் ஆதரவுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, யேமனின் செங்கடல் துறைமுக நகரான ஹொடெய்டாவைச் சுற்றி இடம்பெற்ற மோதல்கள், விமானத் தாக்குதல்களில் 84 பேர் இறந்ததாக வைத்தியசாலைத் தகவல் மூலங்கள் நேற்று  தெரிவித்துள்ளன.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, 11 படைவீரர்களும் 73 ஹூதிப் போராளிகளும் கொல்லப்பட்டதாக, ஹூதிகளால் கட்டுப்படுத்தப்படும் ஹொடெய்டா மாகாணத்திலுள்ள தகவல் மூலங்கள் கூறுகின்றன.

இது தவிர, டசின் கணக்கான ஹூதிகளும் குறைந்தது 17 படை வீரர்களும் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உணவு, உதவி உள்ளடங்கலாக யேனனின் 70 சதவீதமான இறக்குமதிகளுக்கான நுழைவு நிலையாகவுலள்ள ஹொடெய்டாவை நெருங்கும் பொருட்டு, சவூதி அரேபிய, ஐக்கிய அரபு அமீரக விமானப் படைகளை உள்ளடக்கிய யேமனிய அரசாங்கத்துக்கு ஆதரவான கூட்டணி, இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில், ஐக்கிய நாடுகளின் ஆதரவுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பொன்றை வழங்கும் பொருட்டு இவ்வாண்டு ஜூலையில் தற்காலிக யுத்தநிறுத்தமொன்றை கூட்டணி அறிவித்திருந்தது.

எனினும், சவூது அரேபியாவின் பரம வைரியான ஈரானுடன் தொடர்புபட்ட ஹூதிகளுக்கும் சவூதி அரேபியாவால் ஆதரவளிக்கப்படும் யேமனின் அரசாங்கத்துக்குமிடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்த ஐக்கிய நாடுகள் எடுத்த முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கைவிடப்பட்டிருந்தன. இதையடுத்து மோதல் உக்கிரமாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

தங்களது காயப்பட்டவர்களை அருகிலுள்ள ஓமானுக்கு கொண்டு செல்வது, தமது பிரதிநிதிகள் சனாவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்களென்ற உறுதி உட்பட தமது நிபந்தனைகளை ஐக்கிய நாடுகள் நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து ஹூதிகள் யேமனை விட்டு வெளியேறி சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவுக்குச் செல்ல மறுத்திருந்தனர்.

இந்நிலையில், ஹூதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள யேமனின் தலைநகரான சனாவை ஹொடெய்டாவுடன் இணைக்கும் பிரதான வீதியைக் கைப்பற்றும் பொருட்டு நேற்று முன்தினம் கூட்டணி தாக்குதலை மேற்கொண்டதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஹூதிகளுக்கான பிரதான விநியோகப் பாதை குறித்த வீதியே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X