2025 ஜூலை 02, புதன்கிழமை

வர்த்தக வரி விதிப்புக்கான காலக்கெடுவை நீட்டிக்கப்போவதில்லை: - டிரம்ப்

Editorial   / 2025 ஜூலை 01 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் எந்த நாடுகள் வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம். ஆனால் அதற்கு 25% அல்லது 30% அல்லது 50% அல்லது 10% என வரி செலுத்தவேண்டி இருக்கும் என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.

பிற நாடுகள் மீதான வர்த்தக வரி விதிப்புக்கான 90 நாள் காலக்கெடுவை நீட்டிக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே வர்த்தக வரி மாற்றம் குறித்து பேச ஆரம்பித்த டிரம்ப், 57 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீது 25% முதல் 50% வரி விதித்து உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தினார். இதற்கு எதிர்வினையாற்றிய சீனா மீது 125% வரி விதிக்க, அது வர்த்தக போராக பார்க்கப்பட்டது. ஆனால் சீனாவின் அரிய வகை உலோகங்களின் ஏற்றுமதிக்கு அந்நாடு தடை விதிக்கவே, வரியில் சிறு தளர்வை அறிவித்தார் டிரம்ப்.

அமெரிக்கா விதித்திருக்கும் வரி குறித்த ஒப்பந்தங்களில் இந்தியா, சீனா, கனடா உட்பட அனைத்து நாடுகளும் கையெழுத்திடுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்த, 90 நாட்கள் காலக்கெடுவை விதித்திருந்தார். அந்த கெடுவானது வருகிற ஜூலை 9ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இந்த கெடுவானது நீட்டிக்கப்படும் என்று வாஷிங்டன் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், அதற்கான அவசியமில்லை என்று பேட்டியளித்திருக்கிறார் டிரம்ப்.

ஜூன் 27ஆம் திகதியன்று அவர் ஃபாக்ஸ் செய்தி சேனலின் ‘சண்டே மார்னிங் ஃப்யூச்சர்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு முடிவுக்கு வருவதாகவும், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் அந்தந்த நாடுகளுக்கு வர்த்தக அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் காலக்கெடு முடிவடைவதற்கு முன்பே இதுகுறித்த கடிதங்கள் வெளிவரத் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

அந்த பேட்டியில், “எந்தெந்த நாடுகள் எங்களிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பதை பார்ப்போம். குறிப்பாக, நல்லவிதமாக நடந்துகொள்கிறதா அல்லது மோசமாக நடந்துகொள்கிறதா என்பதை பார்த்து அதற்கேற்ப வரியின் அளவையும் நிர்ணயிப்போம். அமெரிக்காவில் எந்த நாடுகள் வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம். ஆனால் அதற்கு 25% அல்லது 30% அல்லது 50% அல்லது 10% என வரி செலுத்தவேண்டி இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, 90 நாட்களில் 90 வர்த்தக ஒப்பந்தங்களை எட்டுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வருவதாக கூறினார். இதனால் 200 நாடுகளிடையே 90 நாட்களில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துவதும், தனித்தனி ஒப்பந்தங்களை உருவாக்குவதும் மிகவும் கடினம் என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

உலக நாடுகளுடனான வர்த்தகம் தவிர, சீனாவுடனான டிக்டாக் ஒப்பந்தம், மற்ற வணிக உறவுகள் குறித்தும், ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்தும், அமெரிக்காவில் பிற நாட்டினர் குடியேறுவதும் குறித்தும் தனது கருத்தை அவர் தெரிவித்தார்.

வர்த்த வரியை பொருத்தவரை இந்தியா மீது 26% வரி விதித்திருக்கிறது அமெரிக்கா. ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு விரைவில் முடிவடையவுள்ள நிலையில், இந்தியா - அமெரிக்க இடையே இதுவரை எந்தவிதமான சமரச பேச்சுவார்த்தைகளோ அல்லது ஒப்பந்த கையெழுத்தோ நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .