2025 நவம்பர் 05, புதன்கிழமை

வான் தாக்குதல்: திரிபோலி அகதிகள் தடுப்பு நிலையத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியத் தலைநகர் திரிபோலியிலுள்ள அகதிகளுக்கான தடுப்பு நிலையமொன்றின் மீதான வான் தாக்குதலொன்றில் 40 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார, அவசரசேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற குறித்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லிபிய அரச அவசர மருத்துவ சேவைகளுக்கான பேச்சாளர் மலெக் மெர்செக் தெரிவித்துள்ளார்.

திரிபோலியின் கிழக்கு புறநகரான தஜூராவிலுள்ள இராணுவ முகாமொன்றுக்கு அடுத்ததாகவுள்ள குறித்த அகதிகள் தடுப்பு நிலையமானது 600க்கு மேற்பட்டோரைக் கொண்டிருந்தநிலையில், தாக்குதலுக்கான இலக்கான பகுதியில் சூடான், எரித்திரியா, சோமாலியா போன்ற ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 150 ஆண் அகதிகள் இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஜெனரல் காலிஃபா ஹஃப்தாரின் லிபிய தேசிய இராணுவத்தை குறித்த தாக்குதலுக்கு தேசிய இணக்க அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேவேளை, லிபிய தேசிய இராணுவத்தின் வான்படைத் தளபதி முஹம்மட் அல்-மன்ஃபூரின் அறிக்கைகளுக்குப் பின்னர் குறித்த தாக்குதல் இடம்பெற்றநிலையில், அவரே இதற்கு பொறுப்பு என உள்நாட்டமைச்சர் ஃபதி பஷக்ஹா, அல்-வஸட் வானொலி அலைவரிசைக்குத் தெரிவித்துள்ளார்.

திரிபோலியை விடுவிப்பதற்கான வழமையான முறைகள் தீர்ந்து போயுள்ளதால் வான் குண்டுத் தாக்குதல் அதிகரிக்கப்படுமெனவும், முரண்பாடான பகுதிகளை விட்டு அங்கிருப்போரை விலகியிருக்குமாறு முஹமட் அல்-மன்ஃபூர் கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தார்.

ஆபிரிக்க, அரேபிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் படகின் மூலம் இத்தாலியை அடைய முயலுவதற்கான முக்கியமான புறப்படுமிடமாக லிபியா காணப்படுகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆதரவளிக்கப்படும் லிபியக் கரையோரக் காவற்படையால் பெரும்பாலோனோர் கைப்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X