2025 நவம்பர் 05, புதன்கிழமை

வான் தாக்குதல்களால் திரிபோலுக்கு அருகே முன்னேறுகின்ற ஹஃப்தாரின் படைகள் இலக்கு வைக்கப்பட்டன

Editorial   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியத் தலைநகர் திரிபோலி மீதான முன்னாள் ஜெனரல் காலிஃபா ஹஃப்தாரின் இராணுவத் தாக்குதலை இடைநிறுத்தும் முகமாக அவரின் கட்டளைக்கு கீழுள்ள படைகளை தாக்குதல் விமானங்கள் இலக்கு வைத்துள்ளன.

அந்தவகையில், திரிபோலியின் புறநகர்ப்பகுதிகளில் நேற்று முன்தினம் மோதல்கள் தொடர்கையில், மோதல்கள் தீவிரமானால் பொதுமக்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகலாம் என மனித உரிமை குழுக்கள் எச்சரித்துள்ளன.

இந்நிலையில், திரிபோலிக்கு 30 கிலோ மீற்றர் தெற்காகவுள்ள திரிபோலியின் முன்னாள் சர்வதேச விமானநிலையத்தைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக அறிக்கையொன்றில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ள காலிஃபா ஹஃப்தாரின் லிபிய தேசிய இராணுவம், திரிபோலியிலுள்ள முக்கிய நிலையங்களைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல் தளமாக பின்னர் அதைப் பயன்படுத்தவுள்ளதாகக் கூறியுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில், விமானநிலையத்தின் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாக தேசிய இணக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுதவிர, திரிபோலியின் புறநகர்ப்பகுதிகளிலிருந்து கஹர்யான் நகரத்தை நோக்கி காலிஃபா ஹஃப்தாரின் படைகளை தாம் பின்தள்ளியுள்ளதாகவும் தேசிய இணக்க அரசாங்கத்தின் அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர். லிபிய தேசிய இராணுவத்தால், திரிபோலிக்கு தெற்காகவுள்ள கஹர்யான் கடந்த வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், விமானநிலையத்தை சூழவும், அதனைச் சூழவுள்ள ஏனைய பகுதிகளிலும் இராணுவத் தரையிறக்கங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே மோதல்களும் அவதானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X