Editorial / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், எதிரணிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே செயற்படுவார் என, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையால், கூட்டணித் தலைவர்கள் சிலர் எரிச்சலடைந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.கவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதியின் உருவச்சிலை, நேற்று முன்தினம் (16) மாலை திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுவை முதலமைச்சர் வி. நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்குகொண்டிருந்தனர்.
இதன்போது உரையாற்றிய ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “பிரதமர் நரேந்திர மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில், 15 ஆண்டுகளுக்கு நாடு பின்சென்றுள்ளது. இன்னொரு வாய்ப்பை அவருக்கு வழங்கினால், மேலும் 50 ஆண்டுகளுக்கு நாடு பின்தள்ளப்படும். பிரதமர் மோடி, அரசர் போன்று நடந்துகொள்கிறார். இதனால் தான், ஜனநாயகத்தையும் நாட்டையும் காப்பாற்ற, நாம் இங்கு ஒன்றுசேர்ந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், தமிழக மண்ணிலிருந்து, பிரதமர் வேட்பாளராக, ராகுல் காந்தியை, தான் பிரேரிப்பதாகக் குறிப்பிட்டார். “ராகுல் காந்தியின் வேட்புமனுவை, தமிழகத்திலிருந்து நான் முன்மொழிகிறேன். பாஸிஸ மோடி அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கான திறனை அவர் கொண்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி தலைமையில், மாபெரும் கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், முழுமையான இணக்கப்பாடு இன்னமும் எட்டப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்தமையை, எதிரணிக் கட்சிகள் சில விரும்பவில்லை என்று தெரிகிறது.
தெலுங்கு தேசம் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகியன, ஸ்டாலினின் அறிவிப்புத் தொடர்பில் கவலையடைந்துள்ளன எனக் கூறப்படுகிறது. ஏனைய கட்சிகளும், எவ்வாறான நிலையில் ராகுல் காந்தியை எதிர்கொள்கின்றன என்பது தெரியவில்லை.
ராகுல் காந்தியின் தலைமைத்துவம் தொடர்பாக, சில கட்சிகள் சந்தேகத்தைக் கொண்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற 3 சட்டசபைத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அந்த அழுத்தம் குறைவடைந்துள்ளது எனக் கருதப்படுகிறது.
19 minute ago
21 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago
36 minute ago
2 hours ago