2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

‘ஸ்டெர்லெட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை’

Editorial   / 2018 மே 29 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடுகளில், 13 பொதுமக்கள் பலியான நிலையில், அவ்வாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்கள், இன்னமும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், அவர்களை நேரில் சென்று அவர், நேற்று (28) பார்வையிட்டார். அவரோடு, அமைச்சர்களான ஜெயக்குமார், கடம்பூர் ராஜு ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர்.

தூத்துக்குடிக்கு முன்னர் சென்ற அமைச்சர் குழாமுக்கு, அங்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், துணை முதலமைச்சரின் இவ்விஜயத்தின் போது, வைத்தியசாலைக்குள் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின்னர் கருத்துத் தெரிவித்த துணை முதலமைச்சர், “தூத்துக்குடியில் நடைபெற்ற இத்துயரச் சம்பவம், அனைவரது நெஞ்சையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. தமிழக அரசாங்கத்தின் சார்பாக, ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரையும், நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறோம். அவர்கள் உடல் நலம் தேறி வருவார்கள்” என்றார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழங்கப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து, அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் உத்தரவின்படி, இந்த ஆலை மூடப்பட்டது என்பதை ஞாபகமூட்டிய அவர், எனினும் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி அது மீண்டும் திறக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

“ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற பொதுமக்களின் முக்கிய கோரிக்கைக்கு ஏற்ப, தற்போது அந்த ஆலை மூடப்பட்டிருக்கிறது. நிரந்தரமாக மூடுவதற்குரிய நடவடிக்கைகளை, தமிழக அரசாங்கம் நிச்சயம் எடுக்கும்” என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X