2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘ஹொடெய்டா மோதலில் 59 சிறுவர்களின் உயிர்கள் ஊசலாடுகின்றன’

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனின் துறைமுக நகரமான ஹொடெய்டாவில் இடம்பெற்றுவரும் மோதல்களின் விளைவாக, அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 59 சிறுவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என, ஐக்கிய நாடுகளி சிறுவர் முகவராண்மையான யுனிசெப் தெரிவித்துள்ளது.

தற்போது, ஹூதி ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஹொடெய்டாவை மீளக் கைப்பற்றுவதற்காக, சவூதி அரேபியா தலைமையிலான அரபுக் கூட்டணியின் உதவியோடு, யேமன் அரசாங்கப் படைகள் முயல்கின்றன. ஆனால், இந்தத் தாக்குதல்கள் காரணமாக, பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என, தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையிலேயே, இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள யுனிசெப், தற்போது இடம்பெற்று வரும் மோதல்கள், அல்-தவ்ரா வைத்தியசாலைக்கு, மிக அருகிலேயே நடக்கின்றன எனக் குறிப்பிட்டதோடு, அங்குள்ள 59 சிறுவர்களின் உயிர்களுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது. இவ்வாறு சிக்கியுள்ள 59 சிறுவர்களில் 25 பேர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிவிக்கப்படுகிறது.

ஹொடெய்டா நகரத்தின் துறைமுகமே, இம்மோதல்களின் பிரதான இலக்காக அமைந்துள்ள நிலையில், அத்துறைமுகத்திலிருந்து வெறுமனே 500 மீற்றர் தொலைவில் இவ்வைத்தியசாலை காணப்படுவதோடு, அங்கு பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களும், குண்டு வெடிப்புகளையும் துப்பாக்கிச் சூடுகளையும் கேட்டனர் எனவும், யுனிசெப் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X