இலங்கை ஸ்கொஷ் சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்;யப்பட்டுள்ள 25ஆவது தேசிய கனிஷ்ட ஸ்கொஷ் போட்டிகளுக்கு தொடர்ந்து 8ஆவது ஆண்டாக பிரதான அனுசரணை வழங்க ரிட்ஸ்பரி முன்வந்துள்ளது. இலங்கையின் முதன்மையான ஸ்கொஷ் போட்டியாக கருதப்படும் இந் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 18 முதல் 25ஆம் திகதி வரை கொழும்பு தமிழ் யூனியன் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
8 நாட்களுக்கு நடைபெறவுள்ள இப் போட்டியில் 300 கனிஷ்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். 25ஆவது தேசிய கனிஷ்ட ஸ்கொஷ் போட்டியில் 9,11,13,15,17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட வீர, வீராங்கனைகள் 18 போட்டிப் பிரிவுகளில் பங்குபற்றவுள்ளனர். புதிய அனுபவமற்றவர்களுக்கான போட்டிகள் 11,15 மற்றும் 19 வயதுப் பிரிவினருக்கிடையே இடம்பெறவுள்ளது.
இலங்கை ஸ்கொஷ் சம்மேளனத்தின் தலைவர் ரியர் அட்மிரால் பாலித வீரசிங்க ரிட்ஸ்பரியின் தொடர்ச்சியான அனுசரணை குறித்து கருத்து தெரிவிக்கையில், 'தொடர்ந்து 8 ஆவது ஆண்டாகவும் எமது அழைப்பை ஏற்று எவ்வித தயக்கமுமின்றி, இந்த போட்டிக்கு பிரதான அனுசரணை வழங்க CBL நிறுவனம் முன்வந்திருந்தது. இப் போட்டிக்கு பிரதான அனுசரணை வழங்குவதனூடாக இலங்கை பாடசாலைகள் மத்தியில் ஸ்கொஷ் விளையாட்டினை மிக வேகமாக பிரபலமடைந்து செய்வதில் பிரதான பங்காளாராக ரிட்ஸ்பரி விளங்கும்' என்றார்.
இந்த அனுசரணை குறித்து சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் விற்பனை பணிப்பாளர் நிலுபுல் டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான வீர, வீராங்கனைகள் உருவாக்குவதற்கான முதற்படி இந்த கனிஷ்ட ஸ்கொஷ் போட்டிகள் என்பதால், இதற்கு அனுசரணை வழங்க வேண்டியமை எமது தேசிய கடமை என்பதை உணர்ந்துள்ளோம். அதேபோன்று, தடகளம், கரப்பந்தாட்டம், கால்பந்தாட்டம், கிரிக்கெட் போன்ற ஹொக்கி மற்றும் ஸ்கொஷ் போன்ற வேகமாக பிரபலமடைந்து வரும் விளையாட்டுகளுக்கும் அனுசரணை வழங்கி வருகின்றது' என தெரிவித்தார்.
19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவிற்கான போட்டிகளின் வெற்றியாளருக்கு நவீன் பியதிஸ்ஸ சம்பியன் கிண்ணமும், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிற்கான போட்டிகளின்; வெற்றியாளருக்கு நிராஷா குருகே சம்பியன் கிண்ணமும் வழங்கப்படவுள்ளன. 13 போட்டிப் பிரிவுகளில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய வீர, வீராங்கனைகளை பாராட்டும் நிகழ்வுகளும் இம்முறை ரிட்ஸ்பரி கனிஷ்ட ஸ்கொஷ் போட்டிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.