Editorial / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை (12) கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை - ஓமன் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 225 ஓட்டங்களை குவித்தது.
தொடக்க வீரர்களான கமில் மிஷாரா 8 ஓட்டங்களில் ஜெய் ஒடெட்ரா பந்திலும், பதும் நிசங்கா 13 ஓட்டங்களில் சூஃப்யான் மெஹ்மூத் பந்திலும் நடையை கட்டினர்.
இதையடுத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குஷால் மெண்டிஸுடன் இணைந்த பவன் ரத்னாயகே அதிரடியாக விளையாடினார். பவன் ரத்னாயகே தனது முதல் அரை சதத்தை 24 பந்துகளிலும், குஷால் மெண்டிஸ் தனது 19-வது அரை சதத்தை 39 பந்துகளிலும் கடந்தனர்.
50 பந்துகளில், 94 ஓட்டங்கள் குவித்த இந்த ஜோடியை சூஃப்யான் மெஹ்மூத் பிரித்தார். பவன் ரத்னாயகே 28 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜிதேன் ராமானந்தி பந்தில் போல்டானார். இதைத் தொடர்ந்து களமிங்கிய கேப்டன் தசன் ஷனகா, ஓமன் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கி 19 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார்.
இதன் மூலம் சர்வதேச டி 20 அரங்கில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார் தசன் ஷனகா. இதற்கு முன்னர் அவர், கடந்த 2023-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக புனேவில் நடைபெற்ற இருதரப்பு டி 20 தொடரின் ஆட்டத்தில் 20 பந்துகளில் அரை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தனது சாதனையை தற்போது அவரே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஓமன் அணிக்கு எதிராக சாதனை அரை சதம் விளாசிய அடுத்த பந்திலேயே தசன் ஷனகா ஆட்டமிழந்தார். 20 பந்துகளை எதிர்கொண்ட தசன் ஷனகா 5 சிக்ஸர்கள, 2 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்தார். நிதானமாக விளையாடிய குஷால் மெண்டிஸ் 45 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஓட்டங் அவுட் ஆனார்.
இறுதிக் கட்ட ஓவர்களில் கமிந்து மெண்டிஸ் 7 பந்துகளில், 19 ஓட்டங்களும், துனித் வெல்லாலகே 4 பந்துகளில், 6 ஓட்டங்களும் சேர்த்தனர். ஓமன் அணி தரப்பில் ஜிதேன் ராமானந்தி 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 226 ஓட்டங்கள் இலக்குடன் பேட் செய்த ஓமன் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 120 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதிகபட்சமாக முகமது நதீம் 56 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் சேர்த்தார். அவருக்கு அடுத்தபடியாக வசீம் அலி 20 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ஓட்டங்களைஎட்டவில்லை. இலங்கை அணி தரப்பில் தீக்சனா, துஷ்மந்தா ஷமீரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். துனித் வெல்லாலகே, துஷான் ஹேமந்தா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக பவன் ரத்னாயகே தேர்வானார். 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியிருந்தது. 2 வெற்றிகளின் மூலம் இலங்கை 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓமன் அணியின் முகமது நதீம் அரை சதம் அடித்தார். இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை நதீம் பெற்றார். அவருக்கு 43 வயது 161 நாட்கள் ஆகிறது. இதற்கு முன்னர் இலங்கையின் சனத் ஜெயசூர்யா (39 வயது 345 நாட்கள்) கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் அரை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago