2025 ஜூலை 09, புதன்கிழமை

வடக்கில் உருவாகும் ஆணழகன்கள்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 22 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


ஆணழகன் என்றவுடன் உடனே ஞாபகம் வருவது அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட உலக ஆணழகன் போட்டிகளில் தடம்பதித்த ஆர்னோல்ட் சுவாஸினேகர் தான்.

ஆணழகனை நாங்கள் வெளியிடங்களில் தேடுகின்றோம். இருந்தும் எமது பிரதேசங்களிலும் ஆணழகன் போட்டிக்கு பங்குபற்றக்கூடிய தகுதியுள்ள, தங்களை ஆணழகன் போட்டிக்கு தயார்ப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பலரை கவனிக்காமல் விட்டுவிட்டோம்.

அழகிகள் போட்டிகள் போன்று தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஆணழகன் போட்டிகளும் வலுப்பெற்று வருகின்றன. 

இலங்கையின் வடமாகாணத்திலும் உடற்பயிற்சி கூடங்கள் நிறையவே இருக்கின்றன. 'ஜிம் சென்று உடலை மெருகூட்டி பெண்களை கவருதல்' என்ற நினைப்புடனேயே பலரும் இந்த உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்கின்றனர்.

இருந்தும், சிலர் அதனையும் தாண்டி பளுதூக்கல் போட்டிகள், ஆணழகன் போட்டிகள் ஆகிவற்றுக்கு தயார்ப்படுத்தும் நடவடிக்கையில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். உடற்பயிற்சி கூடங்கள் சென்று பளுதூக்கல் போட்டியில் பங்குபற்ற முடியும் என்பது மட்டுமே பலருக்கு தெரியும். அதற்கு நியாயமான காரணமுள்ளது.

வடமாகாணத்தில் ஆணழகன் போட்டிகள் நடைபெறுவது இல்லை. பாடசாலை மட்டத்திலோ அல்லது கழங்கள் ரீதியிலோ போட்டிகள் இதற்கான போட்டிகள் நடத்தப்படுவதுமில்லை. இதனால் ஆணழகன் போட்டி பற்றி எவரும் அக்கறைகொள்வதில்லை.

ஆனால், பளுதூக்கல் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் உண்டு. அதற்கான அக்கறை செலுத்தியும் வருகின்றனர். பளுதூக்கல் போட்டிகளில், பாடசாலை மட்டம் மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் வடமாகாண வீரர்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 16ஆம் திகதி அறநாயக்க டிபிற்றியா ராஜகிரிய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற பாடசாலை வீர, வீராங்கனைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில், வடமாகாணம் 4 முதலிடங்களையும் 7 இரண்டாமிடங்களையும் 7 மூன்றாமிடங்களையும் பெற்று தடம் பதித்துள்ளது.
 
இது இவ்வாறிருக்க, ஆணழகன் போட்டிகளுக்கு தயார்ப்படுத்துதல் என்பது வடமாகாணத்தில் தற்போது வலுபெற்றுள்ளது. ஆணழகன் போட்டிக்கு தயார்ப்படுத்துதல் மிகக்கடினமானதும் சவாலானதுமாகும். எங்கள் உடல்களை எதிர்பார்ப்பிற்கு ஏற்றவிதத்தில் மாற்ற வேண்டும். அதற்கு அனைத்தும் ஒருங்கே அமையவேண்டும். சிறிய தவறுகளும் எங்கள் உடலை வெகுவாக பாதித்துவிடும்.

ஆணழகன் போட்டியொன்றில் பங்குபற்றும் போட்டியாளன் ஒருவர் எவ்வாறு தன்னை தயார்ப்படுத்த வேண்டும் என்று, பருத்தித்துறை பாரதி விளையாட்டுக்கழகம் நடத்திய ஆணழகன் போட்டியில் கிராண் சம்பியன் பட்டம் வென்ற ஜோன் வானேந்திரன் நிவிந்தன் தெரிவித்ததாவது,

ஆணழகன் போட்டிக்கு தன்னை தயார்ப்படுத்தும் ஒருவர், ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்தே தன்னை தயார்ப்படுத்த ஆரம்பிக்க வேண்டும். சாதாரண உடற்பயிற்சிகள் மூலம் தசைகளை விருத்தி செய்யவேண்டும். தசைகள் நன்கு விருத்தி அடைந்தவுடன் கடின உடற்பயிற்சிகள் மூலம் தசைகளை உடைக்கும் (கட்டிங்) நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். தசைகளை உடைப்பதற்கு ஒருவர் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தசைகளை விருத்தி செய்வதற்கான ஊட்டச்சத்துக்கு, மாதாந்தம் 14 ஆயிரம் ரூபாய் வரையில் செலவு செய்ய நேரிடும். தவிர,  உடலில் சக்தியை ஏற்றுவதற்குரிய ஊட்டச்சத்து மாவுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரையில் மாதாந்தம் செலவு செய்ய நேரிடும்.

இதனைவிட, ஆணழகன் போட்டியில் பங்குபற்றும் வீரர் ஒருவருக்கு நாளாந்தம் 1,000 ரூபாவுக்கு உணவுக்கு தேவைப்படுகின்றது. தினமும் 10 முட்டைகளின் வெள்ளைக்கருவை உண்ண வேண்டும். அதனை மூன்று வேளைகளாகப் பிரித்து உண்ண வேண்டும்.

மேலும், புரத சத்துள்ள உணவுகளை கொழுப்பு சேர்க்காமல் உண்ண வேண்டும். கோழி இறைச்சியை நீரில் அவித்து உண்ணவேண்டும்.

மேலும், பெரிய கௌப்பி, பயறு உள்ளிட்ட தானிய வகைகளை அவித்து துவைத்து உண்ண வேண்டும்.  மேலும், பச்சை ஆப்பிள், பாதாம், சலாட், சப்பாத்தி போன்ற உணவுகளையும் தினமும் உண்ண வேண்டும்.

இந்த உணவுப்பழகத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். மாறாக தளரவிடக்கூடாது. போட்டிகள் இடம்பெறும் திகதிகளை ஆகக்குறைந்தது 3 மாதங்களுக்கு முன்னர் அறிந்திருக்க வேண்டும்.

அப்போது தான் வீரர்கள் தங்களை ஆணழகன் போட்டிக்கு தயார்ப்படுத்த முடியும். ஆனால் வடமாகாணத்திலுள்ள வீரர்களுக்கு கிட்டிய திகதிகளில் மட்டுமே போட்டி திகதிகள் கிடைக்கப்பெறுவதால் போட்டிகளுக்கு உடனடியாக தயார் செய்ய முடியாது. இதனால் வடமாகாண வீரர்கள் தேசிய ரீதியில் ஜொலிப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவடைகின்றன.

மேலும், தேசிய மட்ட ஆணழகன் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களுக்கு தனித்தனியான பயிற்றுநர்கள் இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பாக ஒரு பயிற்றுநரும், உடலின் அழகு, மற்றும் கட்டிங் தொடர்பாக பயிற்றுவிக்க ஒரு பயிற்றுவிப்பாளரும், ஊட்டச்சத்து மா வகைகள், உணவுகள் தொடர்பாக கவனிப்பதற்கு உணவுசார் நிபுணர் ஒருவரும், உடல் நலன் தொடர்பாக கவனிக்க தனிப்பட்ட வைத்தியர் ஒருவரும் இருப்பார்.

எல்லாவற்றுக்கும் மேலாக அனுசரணை நிறுவனம் ஒன்று ஒவ்வொரு ஆணழகனுக்கும் இருக்கும். ஆனால், வடமாகாண ஆணழகன்களுக்கு இவ்வாறான எந்தவித வசதிகளும் வாய்ப்புக்களும் இல்லை.

வடமாகாணத்தில் ஆணழகன் போட்டிக்கு தயாராகும் வீரர்கள், சொந்த  செலவிலும் முயற்சியிலும் தங்களைத் தாங்களே தயார்ப்படுத்தி, போட்டிகளின் திகதிகளை தேடி அறிந்து பங்குபற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றனர்.

என்னை பொறுத்தவரையில் எனக்கு குடும்ப ரீதியில் பண வசதிகள் இல்லை. இருந்தும் என் குடும்பம் எனக்கு உறுதுணையாக இருக்கின்றது. இதனால் நானாகவே தயாராகி போட்டிகளில் பங்குபற்ற முடிகின்றது என்று நிவிந்தன் மேலும் கூறினார்.

தேசிய மட்ட ஆணழகன் போட்டிகள் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டிகளில் நிவிந்தனும் பங்குபற்றவுள்ளார்.

வடமாகாண ரீதியில், பருத்தித்துறை பாரதி விளையாட்டுக்கழகம் வருடா வருடம் ஆணழகன் போட்டிகளை நடத்தி வருகின்றது. இதில் 50 கிலோ எடை தொடக்கம் 85 கிலோ எடை வரையுள்ளவர்கள், 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று போட்டிகள் இடம்பெறும்.

தொடர்ந்து 7 பிரிவுகளிலும் முதலிடங்களை பெற்றவர்களுக்கு கிராண் சம்பியன் போட்டி இடம்பெறும். இதில் ஜோன் வானேந்திரன் நிவிந்தன் இவ்வருடம் சம்பியனாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .