2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பந்தாடும் ஞானம்

George   / 2014 ஒக்டோபர் 06 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து தேசிய கால்பந்தாட்ட அணிக்குழாமில் இணைந்ததன் மூலம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு தேசிய ரீதியில் அடையாளம் ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளார் கலைப்பீட மாணவன் செபமாலை ஞானரூபன் (ஞானம்).

2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியின் 23 பேர் கொண்ட குழாமில் ஞானம் இடம்பிடித்துள்ளார்.

32 பேர் கொண்ட தேசிய அணியில் இடம்பெற்றிருந்த ஞானம், 23 பேர் கொண்ட குழாமில் தெரிவு செய்யப்படாத நிலையில் இருந்தார். இருந்தும் இவரது தனித்திறன் தொடர்பில் அறிந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர், 23 பேர் கொண்ட அணிக்குழாமில் ஞானத்தை இணைத்து கொண்டதாக கடந்த வாரம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணியின் கடந்த கால பல வெற்றிகளுக்கு பின்னால் ஞானம் என்ற வீரனின் திறமை இருந்தது.
கால்ப்பந்தாட்டத்தில் தன்னை தனித்துவமுள்ளவனாக வளர்த்துக்கொண்ட ஞானம் தொடர்பில் அறிவது முக்கியமானதொன்று.

குடும்ப பின்னணி

இளவாலை பகுதியை சேர்ந்த ஞானரூபன் ஒரு பெரிய குடும்பத்தின் அங்கத்தவர். தந்தை கடற்றொழில் செய்பவர். இவருக்கு 7 சகோதரர்கள் இருக்கின்றனர்.

இவருக்கு மூத்த 4 சகோதரர்கள் திருமணம் முடித்த நிலையில், தற்போது இவரே வீட்டிற்கு மூத்த பிள்ளை போன்று உள்ளார். இதனால் பொறுப்புக்கள் அதிகம். யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தின் நான்காம் வருடத்தில் திட்டமிடல் பிரிவில் பயின்றுவரும் ஞானம் படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் காணப்படுகின்றது. ஏனெனில் தந்தை இயலாத நிலைமையில் இருக்கின்றார்.

ஞானத்தினுடைய இளைய சகோதரரான அன்ரனிராஜ் தற்போது கால்பந்தாட்ட போட்டிகளில் கலக்கி வருகின்றார். 17 வயது கால்ப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ள அவர், தேசிய ஜுனியர் கால்ப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளார்.

கால்பந்தாட்ட பயணம்

ஞானத்தின் மூத்த சகோதரர்கள் கால்பந்தாட்ட வீரர்களாக திகழ்ந்தமை ஞானத்தின் கால்பந்தாட்ட பிரவேசத்துக்கு காரணமாக அமைந்தது.

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் ஞானரூபனின் கால்பந்தாட்ட பயணம் ஆரம்பமாகியது. 15 வயது கால்ப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த ஞானரூபன், தொடர்ந்து 17, 19 வயது பிரிவு அணிகளில் அணித்தலைவராக திகழ்ந்தார்.

கல்லூரியில் 100ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்ட 2007 ஆம் ஆண்டு; கால்பந்தாட்ட அணியின் தலைவராக இருந்தமை ஞானத்தின் சிறப்புகளில் ஒன்று.

வடமாகாண கால்பந்தாட்ட அணியில் இடம்பிடித்து, அவ்வணியிலும் தலைவராக திகழ்ந்த ஞானத்தின் கால்பந்தாட்ட பயணம் அவர் யாழ். பல்கலைக்கழகத்திற்கு தெரியவாகியதும், மேலும் தேர்ச்சி பெற்றது.

பல்கலைக்கழகங்களுக்கிடையில் (மினி ஒலிம்பிக்) நடைபெற்ற கால்ப்பந்தாட்ட போட்டியில், 2013 ஆம் ஆண்டு யாழ். பல்கலை அணி சம்பியனாகியிருந்தது. இதில் ஞானம் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார்.

தொடர்ந்து இவ்வருடம் (2014) பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் தொடர் நாயகன் விருது பெற்றார். இதில் யாழ். பல்கலைக்கழக அணி சம்பியன் ஆவதற்கு ஞானம் இன்றியமையாத வீரராக திகழ்ந்தார்.

தொடர்ந்து, கொத்தலாவ பாதுகாப்பு பிரிவு பல்கலைக்கழகத்தால் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையில் இவ்வருடம் நடத்தப்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணி சம்பியனாகியதுடன் இதிலும் சிறந்த வீரருக்கான விருதை ஞானம்  பெற்றுக்கொண்டார்.

இதன்மூலம், பிறிமியர் லீக் போட்டிகளில் விளையாடும் இலங்கையின் இரண்டாவது பெரிய கால்பந்தாட்ட அணியான அநுராதபுரம் சொலிட் அணியில் இடம்பிடித்தார்.

இதில் இடம்பிடித்தமை ஞானத்தை தேசிய அணியில் வளர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. ஏனெனில் பிறிமியர் லீக் போட்டிகளில் விளையாடும் அணிகளின் நுட்பங்கள் அணுகுமுறைகள், விளையாட்டின் வேகம் என்பன வித்தியாசமானவை.

யாழ். பல்கலைக்கழக அணியில் விளையாடி வரும் ஞானரூபன், இளவாலை யங்ஹென்றிஸ் அணி மற்றும் அநுராதபுரம் சொலிட் அணி ஆகியவற்றிலும் விளையாடுகின்றார்.

பல்கலைக்கழக அணி விளையாடும் போட்டிகளில் ஞானரூபன் தனித்து தென்படுவார். அதற்கு காரணம் ஞானரூபனின் வேகம். முன்கள வீரராக களங்களில் விளையாடும் ஞானம் மிகவும் வேகமாகவும், லாவகமாகவும் விளையாடக்கூடியவர்.

அவரது வேகமே அவரை சிறந்த வீரராக இன்று நிலைநிறுத்தியுள்ளது. 'என்னமா விளையாடுறான்!' என்று மைதானத்தில் இருக்கும் எதிரணி வீரர்களின் இரசிகர்கள் கூறிய வார்த்தைகளை நான்கூட கேட்டிருக்கின்றேன்.

எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் பங்களாதேஷில் இடம்பெறும் பயிற்சி முகாமிற்கு ஞானம் செல்லவுள்ளார். இந்த 2 மாத கால பயிற்சியானது இலங்கை அணியை தெற்காசிய விளையாட்டு போட்டிகளுக்கு தயார்ப்படுத்தும் பயிற்சியாகவிருக்கின்றது.

ஞானம் சொல்கிறார்

வடமாகாணத்தில் இருக்கும் வீரர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள கட்டாயம் பிறிமியர் லீக் அணிகளில் விளையாட வேண்டும். அப்போது தான் தரமான போட்டிகளை விளையாட முடியும். தரமான வீரர்களாக மாற்றமடைந்தால் மட்டுமே மேற்கொண்டு எமது கால்பந்தாட்டத்தை தேசிய ரீதியில் வளர்க்க முடியும் என்கிறார் ஞானம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .