2025 ஜூலை 09, புதன்கிழமை

முரளி கிண்ணத்தை வென்றது ஆனந்தா கல்லூரி

George   / 2014 நவம்பர் 03 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


2014ஆம் ஆண்டுக்கான முரளி ஒற்றுமை வெற்றிக்கிண்ணத்தை, கொழும்பு ஆனந்தாக் கல்லூரி சுவீகரித்து சம்பியன் பட்டத்தை வென்றது.

றிச்மண்ட் கல்லூரி அணியை 5 இலக்குகளால் வீழ்த்தியே? கொழும்பு ஆனந்தா கல்லூரி இந்த சாதனையை நிலைநாட்டிக் கொண்டது. 

இலங்கையிலுள்ள கிராமப்புறங்களில் விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள துடுப்பாட்ட வீரர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முரளி ஒற்றுமை கிண்ண இருபதுக்கு 20 துடுப்பாட்ட போட்டிகள், வடக்கிலுள்ள மைதானங்களில் கடந்த புதன்கிழமை (29) முதல் ஆரம்பமாகின.

வடக்கு - கிழக்கு அணிகள் உட்பட, நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த பாடசாலைகளின் 16 ஆண்கள் அணிகளும் 8 பெண்கள் அணிகளும் இந்த சுற்றுப்போட்டியில் பங்குபற்றின.

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரி, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம், மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற்றன.

அரையிறுதிப் போட்டிகளில், சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணியை 27 ஓட்டங்களால் கொழும்பு ஆனந்தா கல்லூரி வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவானது. அதேவேளை, அத்துடன், பொலநறுவை பாடசாலைகள் இணைந்த அணியை 73 ஓட்டங்களால் வெற்றிகொண்ட றிச்மண்ட் கல்லூரி அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) பிற்பகல் இடம்பெற்ற இறுதிப்போட்டியின் நாணயச்சுழற்சியில், றிச்மண்ட் கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

றிச்மண்ட் கல்லூரியை இறுதிப்போட்டி வரையில் அழைத்து வர காரணமாக இருந்த அணித்தலைவர் எஸ்.ஜிம்கான் மற்றும் கே.ஐ.சி.அசலங்க ஆகியோர், இறுதிப்போட்டியில் சோபிக்க தவறினார்கள். இருவரும் முறையே 07, 04 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.

றிச்மண்ட் கல்லூரியின் அடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் ஆனந்தா அணியின் எஸ்.எஸ்.டி.ஆராய்ச்சிகேவினுடைய பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 4 பந்துப் பரிமாற்றங்கள் வீசிய ஆராய்ச்சிகே, 15 ஓட்டங்களை கொடுத்து அடுத்தடுத்து 4 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார்.

அதிரடி துடுப்பாட்ட வீரர்களை கொண்ட றிச்மண்ட் கல்லூரியால் 18.5 பந்துப் பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 68 ஓட்டங்களையே பெறமுடிந்தது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாகவும் ஒரேயொரு இரட்டை இலக்க ஓட்டங்களை பி.பிம்சாரா பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் கே.அன்சுல 3, ஏ.சிகேரா 2 இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.

69 என்ற ஓட்ட எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆனந்தா கல்லூரிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் இரண்டு இலக்குகள் வீழ்த்தப்பட்டன. தொடர்ந்து 4 ஓட்டங்கள் பெற்ற நிலையில் 3ஆவது இலக்கும் வீழ்த்தப்பட்டது.

ஐந்தாவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஏ.சிகேரா, என்.ஹக்கல்லவுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றார். சிகேரா 39 ஓட்டங்களை பெற்று இறுதிவரையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹக்கல்ல 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஆனந்தா கல்லூரி அணி 16.3 பந்துப் பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இந்த சுற்றுத்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக றிச்மண்ட் கல்லூரி கே.ஐ.சி.அசங்க, தெரிவானார். சிறந்த பந்துவீச்சாளராக ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த ஏ.சிகேரா தெரிவானார். தொடர் ஆட்டநாயகனாக ஆனந்தா கல்லூரியின் எஸ்.அசானும் (139 ஓட்டங்கள், 10 இலக்குகள்) இறுதிப்போட்டியின் நாயகனாக ஆனந்தா கல்லூரியின் எஸ்.எஸ்.டிஆராய்ச்சிகேவும்  தெரிவு செய்யப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .