2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தடுமாறும் யாழ்.மத்தி: வெற்றிக்காக காத்திருக்கும் சென்.ஜோன்ஸ்

Thipaan   / 2015 மார்ச் 07 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 - குணசேகரன் சுரேன்

வடக்கின் மாபெரும் போரின் 109ஆவது கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்டம், பந்துவீச்சில் சோபிக்காத யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தடுமாறி வருகையில், வெற்றியை தமதாக்குவதற்கு சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினர் காத்திருக்கின்றனர்.

வடக்கின் மாபெரும் போர் கிரிக்கெட் போட்டி கடந்த வியாழக்கிழமை (05) முதல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. 3 நாட்களைக் கொண்ட ஒவ்வொரு நாளும் 90 ஓவர்கள் வீசப்படவேண்டும் என்ற நியதிகளுடன் இந்தப் போட்டி நடைபெற்று வருகின்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அணித்தலைவர் பத்திநாதன் நிரோஜன் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய, முதலில் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 90 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றவேளை தமது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டனர். செபமாலைப்பிள்ளை ஜெனி பிளமிங் 107, சஜீந்திரன் கபில்ராஜ் 50, பரமானந்தம் துவாரகசீலன் 33, அருள்நந்தன் கானாமிர்தன் 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக, சிவராசா மதுசன் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, முதல்நாள் ஆட்ட நேரமுடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றபோது, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.

சிவபாலசுந்தரம் அலன்ராஜ் அணியை தூக்கி நிறுத்த போராடிய போதும் (41 ஓட்டங்கள்) அது பயனளிக்கவில்லை. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 80.4 ஓவர்களில் 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் சிவபாலசுந்தரம் அலன்ராஜ் 41, சிறிஸ்கந்தராஜா கௌதமன் 41, சுரேஸ் கார்த்தீபன் 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக ரவீந்திரன் லோகதீஸ்வரன் 31 ஓவர்கள் பந்துவீசி 74 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்களையும், ஜெயக்குமார் கிசாந்துஜன் 8 ஓவர்கள் பந்துவீசி 5 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும், துவாரகசீலன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

136 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இனிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 25.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அருள்நந்தன் கானாமிர்தன் 24, எம்.சிந்துர்ஜன் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சார்பாக, சிறிஸ்கந்தராஜா கௌதமன், சிவராசா மதுசன் ஆகியோர் 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள். 2 ஆம் நாள் முடிவில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 239 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

மூன்றாவது இறுதியும் நாள் ஆட்டம் இன்று சனிக்கிழமை (07) நடைபெற்றுவருகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .