2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் கண்காட்சி போட்டி

Gavitha   / 2015 மே 09 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி விளையாட்டு அபிவிருத்திக்குழு விளையாட்டு அபிவிருத்தி நிதிக்காக ஒழுங்கு செய்திருந்த 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் கண்காட்சிப் போட்டியில் 20 ஓட்டங்களினால் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அணி வெற்றியீட்டியது.

கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற மேற்படி கிரிக்கெட் கண்காட்சிப் போட்டியில் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அணி போட்டியில் ஈடுபட்டது.

நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் அணி ஸாஹிரா அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. ஸாஹிரா அணி 10 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் அணி   9.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 71 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியினை தழுவிக் கொண்டது.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அணியைச் சேர்ந்த முஹம்மது அப்ரி தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் பிரதம அதிதியாகவும்  இக்கல்லூரியில் கடந்த பல வருடங்களாக ஆசிரியராகவும் பகுதித்தலைவராகவும் கல்லூரியின் இணைப்பாடவிதானத்துக்கு  பொறுப்பான உதவி அதிபராகவும் கடமையாற்றி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு உதவி அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் யு.எல்.எஸ்.ஹமீட் மௌலவி கௌரவ அதிதியாகவும் கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.பி.முஜீன், உயர்தர தொழில்நுட்ப பிரிவு பகுதித்தலைவர் ஏ.ஆதம்பாவா,  தரம் 8 பகுதித்தலைவர் எம்.ஐ.எம்.அஸ்ஹர், கல்லூரியின் விளையாட்டுக்குழு செயலாளர் ஏ.எம்.அன்சார் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இப்போட்டிக்கு நடுவர்களாக கல்லூரி ஆசிரியர்களான எம்.எப்.றிஸ்வி ஹாதிம் மற்றும் ஏ.கே.எம்.சப்ரான் ஆகியோர் கடமையாற்றினார்கள்.

இக்கண்காட்சி கிரிக்கெட் போட்டிக்கான சகல ஏற்பாடுகளையும் கல்லூரியின் உடற்கல்விப் பொறுப்பாசிரியர் அலியார் ஏ பைஸர் மேற்கொண்டிருந்தார்.

கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி கிரிக்கெட் அணி இம்மாதம் 12ஆம் திகதி கிண்ணியாவில் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண மட்டப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .