2025 ஜூலை 05, சனிக்கிழமை

வீதியோட்டப் போட்டியில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர முதலிடம்

George   / 2015 ஜூன் 12 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன் 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தால் முதன்முறையாக நடத்தப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான வீதியோட்ட சுற்றுப்போட்டியில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உடற்கல்வி அலகின் பணிப்பாளர் க.கணேசநாதன், வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.  

இந்த வீதியோட்ட நிகழ்வில் 12 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 78 போட்டியாளர்கள் பங்குபற்றினர். புன்னாலைக்கட்டுவன் வடக்குச் சந்தியில் இருந்து ஆரம்பமாகி பலாலி வீதியூடாக திருநெல்வேலி சந்தியை அடைந்து ஆடியபாதம் வீதி, வளாக வீதியூடாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானம் வரையில் வீதியோட்டம் நடைபெற்றது. 

இந்த வீதியோட்டப் போட்டியில் முதலிடத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டபிள்யு.பி.ஜி.பி.விஜயசிங்க தட்டிச்சென்றார். சப்ரகமுவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த என்.எம்.சி.சி.நவசிங்க இரண்டாமிடத்தையும், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆர்.எம்.சி.எஸ்.ரத்நாயக்க மூன்றாமிடத்தையும், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டி.எம்.பி.சாந்தரூவன் நான்காமிடத்தையும், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எம்.வி.எஸ்.எல்.பிரியங்கார ஐந்தாமிடத்தையும் கைப்பற்றினர். 

யாழ்ப்பாணப் பல்கலைகழத்தைச் சேர்ந்த ஏ.ஜே.எட்வின் ஜோசப் 6ஆவது இடத்தையும், எஸ்.யோகராஜ் 10ஆவது இடத்தையும் பெற்றனர். 

வீதியோட்டத்தில் வெற்றிபெற்றவர்களை பல்கலைக்கழக வரிசையில் பார்க்கும் போது, ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் முதலாமிடத்தைப் பெற்றது. பேராதனைப் பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும் பெற்றன. 

இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளரும், இலங்கைப்பல்கலைக்கழக விளையாட்டுச் சங்கத்தின் தலைவரும், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு ஆலோசனை சபையின் தலைவருமாகிய வைத்திய கலாநிதி செ.கண்ணதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .