2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பியனாகிய ஐயன்கேணி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு கௌரவிப்பு

Thipaan   / 2015 ஜூன் 15 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் ஐயன்கேணி தமிழ் வித்தியாலய மாணவர்கள் கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகளில் 4 சம்பியன் இடங்களையும் 3 இரண்டாமிடங்களையும் பெற்றுள்ளதை கௌரவிக்கும் முகமாக திங்கட்கிழமை நகர உலா அழைத்து வரப்பட்டனர்.

பாடசாலை அதிபர் எம். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்ப் பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம். பாலசுப்பிரமணியம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மிகவும் பின்தங்கிய அதேவேளை, கடந்த கால யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஐயன்கேணிப் பிரதேச மாணவர்கள், கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகளில் 4 சம்பியன் இடங்களையும் 3 இரண்டாமிடங்களையும் பெற்று தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளனர்.

மாணவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஏறாவூர்ப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம். பாலசுப்பிரமணியம்,

' பின் தங்கிய பிரதேசமாக இருப்பதும் பாதிக்கப்பட்ட பகுதியாக இருப்பதும் மாணவர்கள் தமது ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு ஒருபோதும் தடையாக இருக்க முடியாது என்பதை ஏறாவூர் ஐயன்கேணி மாணவ மாணவிகள் நிரூபித்து விடடிருப்பதோடு, இந்தக் கல்வி வலயத்துக்குத் தேசிய மட்டத்திலும் பெருமையும் புகழையும் தேடித் தந்துள்ளார்கள்.

நகரப் புறங்களிலுள்ள நல்ல வசதி வாய்ப்புகளோடு கூடிய பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுடன் போட்டியிட்டு இந்த சாதனையைப் படைத்திருக்கிறீர்கள்.

நீங்களே எதிர்காலத்தில் இதுபோன்று தேசிய ரீதியிலும் பல சாதனைகளைப் புரிந்து இந்தப் பிரதேசத்துக்குத் தலைமை தாங்கி இந்தப் பிரதேசத்தை வளர்ச்சியுறச் செய்ய வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில், ஏறாவூர்ப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம். பாலசுப்பிரமணியம், பாடசாலை அதிபர் எம். மனோகரன், உடற்கல்வி ஆசிரியர் எஸ். ஸ்ரீமுருகன் உட்பட  மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

செஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் பட்மின்ரன் ஆகிய விளையாட்டுக்களில் இந்த மாணவர்கள் மாகாண சம்பியன் அணிகளாகத் தெரிவாகியுள்ளதோடு அவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .