2025 ஜூலை 05, சனிக்கிழமை

தென்கொரியா - இலங்கை நட்புறவுக் கிண்ணத்தை தனதாக்கியது யாழ். லீக்

George   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் அகில இலங்கை கால்;பந்தாட்ட லீக் 19 வயதுப் பிரிவு அணிகளுக்கு இடையே நடைபெற்ற தென்கொரியா - இலங்கை நட்புறவுக் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை (27) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், இறுதிநேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய யாழ்ப்பாண லீக் அணி, சம்பியன் பட்டத்தை வெற்றிகொண்டது.

இறுதிப்போட்டியில் கண்டி கால்பந்தாட்ட லீக் அணியும் யாழ்ப்பாண லீக் அணியும் மோதின. முதற்பாதியாட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய கண்டி அணிக்கு, அவ்வணி வீரன் துஸ்ரா விஸ்வகீதா 26ஆவது நிமிடத்தில் முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார். முதற்பாதியாட்டத்தில் கண்டி அணி முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தின் 3ஆவது நிமிடத்தில் கண்டி அணியின் அங்க பண்டாரா என்பவர் இரண்டாவது கோலைப் பெற்று தமது அணியை வலுப்படுத்தினார்.

சளைக்காமல் விளையாடிய யாழ். அணி, அதன் பின்னர் கடுமையான தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டது. அதன் பயனாக அவ்வணியின் வீரன் எஸ்.றொம்சன் முதலாவது கோலை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

 இரண்டாவது பாதியின் 20ஆவது நிமிடத்தில் யாழ். வீரர் ஒருவரை கண்டி அணி வீரர் காலால் மிதித்தமையால் அவர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு மத்தியஸ்தரால் வெளியேற்றப்பட்டார். இதனால் 10 பேருடன் கண்டி அணி விளையாடியது.

25ஆவது நிமிடத்தில் யாழ். அணி வீரர் உ.சுபோதரன் இரண்டாவது கோலை தனது அணிக்காக பெற்றுக்கொடுக்க ஆட்டம் சூடுபிடித்தது. அதே உற்சாகத்தின் விளையாடிய யாழ். அணிக்கு 39 ஆவது நிமிடத்தில் சுபோதரன் தனது இரண்டாவது கோலை பெற்று, அணியை 3:2 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்படுத்தினார். 

போட்டி முடிவடைய 3 நிமிடங்கள் இருக்கும் தருணத்தில் றொம்சன் மீண்டுமொரு கோலைப் பெற்று, யாழ். அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் யாழ். அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற யாழ். அணிக்கு 1 இலட்சம் ரூபாய் பணப்பரிசில் மற்றும் கேடயமும், இரண்டாமிடம் பெற்ற கண்டி அணிக்கு 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் கேடயமும் வழங்கப்பட்டன.

பரிசில்களையும் கேடயங்களையும் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, இலங்கை கால்;பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அனுர டி சில்வா, செயலாளர் பாலேந்திரா அந்தனி ஆகியோர் வழங்கினர்.

இந்தச் சுற்றுப்போட்டியில் மொத்தம் 60 லீக் அணிகள் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .