2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

குறிஞ்சிப்பிட்டி மு.மகா.வி மாணவர் கிரிக்கெட் தொடர்;2006 ஆம் ஆண்டு மகுடம் சூடியது

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 2006 ஆம் ஆண்டு அணியினர் சம்பியன் பட்டத்தை தனதாக்கி அசத்தினர்.

கற்பிட்டி கல்விக் கோட்டத்திற்கு உற்பட்ட சுமார் 67 வருட வரலாற்றைக் கொண்ட குறிஞ்சிப்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் முதலாவது பழைய மாணவர்களுக்கு இடையிலான அணிக்கு 9 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் தொடர் அண்மையில் பாடசாலை அதிபர் நௌபாத் தலைமையில் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பெற்றோர் அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது. 

இதில் சுமார் 16 பழைய மாணவர்களின்  அணிகள் பங்கேற்றிருந்தன. இலங்கையின் பல பிரதேசங்களில் இப்போது வசித்துவரும் இப் பாடசாலையின் பழைய மாணவர்கள் இப் போட்டிக்காக பாடசாலைக்கு வந்து இப் போட்டித் தொடர்களில் பங்கேற்றமை விசேட அம்சமாகும்.

மேலும் இத் தொடரில் பங்கேற்ற 16 அணிகளும் முதல் சுற்று லீக் ஆட்டத்தில் நான்கு அணிகள் வீதம் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடாத்தின. பின்னர் குழு நிலையில் முதல் இடங்களைப் பிடித்த அணிகள் தீர்மானமிக்க அரையிறுதியில் மோதின. 

அதற்கமைய முதல் அரையிறுதியில் 2001 ஆம் ஆண்டு அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது 2006 ஆம் ஆண்டு அணி. பின்னர் இடம்பெற்ற போட்டியில் 2010 ஆம் ஆண்டு அணியை வீழ்த்திய 2014 ஆம் ஆண்டு அணி இறுதிப் போட்டிக்கான தமது வரவை உறுதிப்படுத்தியது. 

இதற்கமைய  ஞாயிற்றுக்கிழமை (14) மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்த தீர்மானமிக்க  இறுதிப் போட்டியில் 2006 மற்றும் 2014 ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. இப்போட்டியில் ரிப்கானின் அதிரடித் துடுப்பாட்டத்தின் மூலம் வெற்றி பெற்ற 2006 ஆம் ஆண்டு அணி முதல் பருவகால குறிஞ்சிப்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பழைய மாணவர் வெற்றி மகுடத்தை வெற்றி கொண்டு அசத்தியது.

மேலும் இந்த பழைய மாணவர்கள் கிரிக்கெட் தொடரின் மூலம் இப் பாடசாலையின் பழைய மாணவர்கள் இப் பாடசாலையின் குறைகளை நிவர்த்தி செய்து கொடுப்பதற்கான நிதி உதவியினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .