2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

’உள்ளங்களை உலுக்கும் உண்மைக் கதைகள்’ - சிநேகபூர்வ காட்சி முன்னோட்டம் ஆரம்பம்

Freelancer   / 2023 மே 10 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-     சிறுவர் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள்ஃஉயிர் பிழைத்தவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாற்றின் கசப்பான உண்மைகளின் தொகுப்பு

-     'விழிகளுக்கு கண்ணீரால் விடைகொடுத்து - உதிர்ந்து போனது வெண் மலர்', வெளியான முதல் கதை

-     16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களுக்காக வெளியிடப்பட்ட 'என்னைக் காயப்படுத்தாதீர்கள் - சிறுவர் துஷ்பிரயோகத்தை நிறுத்துவோம்' என்ற புத்தக முகப்பு அட்டைக்கான நாடளாவிய சித்திரப் போட்டி 26 ஏப்ரல் 2023, கொழும்பு: Stop Child Cruelty Trust (SCC) மற்றும் Child Protection Alliance (CPA)  ஆகியன ஒன்றிணைந்து, இலங்கை முழுவதும் உள்ள சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ஏதுவாக மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை ஆரம்பித்துள்ளன.

2020 முதல் 2022 வரை, பதினேழு சிறுவர்கள் உடல்ரீதியாகஃபாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவும் சிறுவர் பாதுகாப்பு நெருக்கடியைத் தீர்க்க எந்தவொரு அதிகார மட்டமும் அர்த்தமுள்ள எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. 'உள்ளங்களை உலுக்கும் உண்மைக் கதைகள்' என்பது பல்வேறு வடிவங்களிலான சிறுவர் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள்ஃஉயிர் பிழைத்தவர்களின் உண்மைக் கதைகளின் தொகுப்பாகும். அதிகரித்து வரும் நெருக்கடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்படும். இந்த தலைசிறந்த படைப்பின் அறிமுகமாக வெளியான முதல் இதயத்தை நொருங்கச் செய்யும் கதையான 'விழிகளுக்கு கண்ணீரால் விடைகொடுத்து - உதிர்ந்து போனது வெண் மலர்' என்பது காணப்படுகின்றது.

'விழிகளுக்கு கண்ணீரால் விடைகொடுத்து - உதிர்ந்து போனது வெண் மலர்' என்பது பதினாறு வயது நிரம்பிய வருணியின் சோகக் கதையாகும். அவர் தனது சொந்த வாழ்க்கையை போக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில், அதிபரால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உள மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகத்திற்கு ஆளானார். இந்த சம்பவத்தைப் பற்றி SSC இன் தலைவரும், Child Protection Alliance இன் இணை ஏற்பாட்டாளரும், Global End Violence இன் வழிகாட்டியுமான வைத்தியர் துஷ் விக்கிரமநாயக்க அவர்கள் கருத்தினைப் பகிர்ந்து கொள்கையில், 'இந்த புத்தகத்தின் மிகவும் தனித்துவமான விடயம் என்னவென்றால், தேசிய பாடசாலைகளுக்கிடையேயான ‘A Generation’s Appeal 2021 என்ற விவாதப் போட்டியில், சிறந்த பேச்சாளர் விருதை வென்ற இளம் தினிதி குணதிலக அவர்களால் இப்புத்தக்கம் எழுதப்பட்டுள்ளது.

கொழும்பு 7, சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் விவாத அணியின் தலைவியாக தினிதி இருந்தார்,' என்று கூறினார். வைத்தியர் விக்கிரமநாயக்க அவர்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,  'வளர்ந்தவர்களிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படும் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களாக சிறுவர்கள் காணப்படுகின்றனர். துஷ்பிரயோகத்திற்கு எளிதான இலக்காக சிறுவர்கள் இருப்பதால், சிறுவர்கள் தொடர்பான அதிர்ச்சிகரமான சம்பவங்கள் உலாவருவதைப் பார்ப்பது நம்பமுடியாத அளவிற்கு மன தைரியத்திற்கு சவால் விடுகிறது.

வருணியின் கதையின் வெளியீடு, தமது காயங்களை வெளியில் சொல்ல முடியாமலுள்ள பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கும் ஒரு பிரச்சார இயக்கத்தின் தொடக்க களமாக அமையும் என்று நாம் நம்புகிறோம். சிறுவர்களுக்கு வலுவூட்டுவது, பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அறிவூட்டுவதே எமது இறுதி நோக்கம்,' என்று குறிப்பிட்டார்.

'இறுதி வெளியீடு, சிறுவர் உளவியல், பிள்ளை வளர்ப்பு, சட்டம் போன்ற மதிப்புமிக்க மற்றும் நடைமுறை சார்ந்த உடனடி ஆலோசனை வழங்கும் நிபுணர்களைக் கொண்டிருக்கும். நாங்கள் இந்த கதைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம், பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்தவர்கள் இதிலிருந்து மீளுதல் மற்றும் அறிவை வளர்த்தல் ஆகியவற்றுக்கான ஒரு கருவியாக இப்புத்தகத்தை பயன்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

இந்நூல் ஆரம்பத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ளதுடன், அதனை ஏனைய மொழிகளிலும் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். தற்போது ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற இரண்டு பிராந்திய மொழிகளில் இப்புத்தகத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறானதொரு புத்தகம் வெளியிடப்படுவது இதுவே முதல் தடவையாகும்,' என்று வைத்தியர் விக்கிரமநாயக்க அவர்கள் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள், 'கடந்த வருடத்தில் இலங்கையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்களின் மரணங்கள் மற்றும் சம்பவங்களின் எண்ணிக்கையை செவிமடுப்பது திகைப்பூட்டுவதாக உள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் சிறுவர் பாதுகாப்பு நெருக்கடியை ஒரு அரசியலாக்காமல் அதிகாரிகள் தீர்த்து வைக்க வேண்டும். 'உள்ளங்களை உலுக்கும் உண்மைக் கதைகள்' போன்ற புத்தகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றே நான் கூறுவேன். சிறுவர் துஷ்பிரயோகத்தின் ஆபத்துகள் மற்றும் பயங்கரங்கள் குறித்து மக்களுக்கு அறிவூட்ட வேண்டும். பாலியல் துஷ்பிரயோகம் மட்டுமல்ல, சிறுவர்களுக்கு எதிரான வன்முறையும் கூட அவ்வாறு தெளிவுபடுத்தப்படல் வேண்டும். இலங்கையில் தற்போது நிலவும் சிறுவர் பாதுகாப்பு நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில் Stop Child Cruelty Trust மற்றும் Child Protection Alliance ஆகியவற்றின் முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன்,' என்று குறிப்பிட்டார்.

 

சிறுவர் துஷ்பிரயோகத்தின் தாக்கம் குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், புத்தக எழுத்தாளருமான பேராசிரியர் சரத் விஜேசூரிய அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 'சிறுவர்களே எமது தேசத்தின் எதிர்காலம் என்பதால், சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன என்பது குறித்தும், சமூகத்தை சூறையாடுபவர்களால் சிறுவர்கள் இரையாக்கப்படுவதை எவ்வாறு தடுத்து நிறுத்தி, தீர்வு காணலாம் என்பதையும் நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அறிவூட்டுதல் வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகம் என்பது சிறுவர்களை உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக அல்லது உணர்ச்சி ரீதியாக தவறாக நடத்துதல் அல்லது புறக்கணித்தல் என வரையறுக்கப்படுகிறது. சில சமயங்களில் இது தொடர்பான புரிதல் இல்லாமை வேகமாக வளர்ந்து வரும் இந்த சமூக நிகழ்வுக்கு காரணமாக இருக்கக்கூடும். சிறுவர் துஷ்பிரயோகத்தை முறியடிக்க அறிவு ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்க முடியும் என்பதால், இது குறித்து பொது மக்களுக்கு நாம் அறிவூட்ட வேண்டும். இது நிகழ்வது குறித்து மக்கள் எவ்வளவு தூரம் விழிப்புணர்வு பெறுகிறார்களோ, அவ்வளவு தூரம் துஷ்பிரயோகத்தைத் தடுக்க சமூகத்தால் முடியும். துஷ்பிரயோகத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது பற்றிய விபரங்களுடன் அனைத்து மொழிகளிலும் வெளிவந்துள்ள 'உள்ளங்களை உலுக்கும் உண்மைக் கதைகள்' போன்ற புத்தகம் நம் சமூகத்திற்கு இன்றியமையாதது என்று நான் நம்புகிறேன்,' என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு தூதுவர்களான சாரங்க திசசேகர, அபிஷேக பெர்னாண்டோ, தினக்ஷி பிரியசாத், நிரஞ்சனி சண்முகராஜா மற்றும் ஹரித் விஜேரத்ன ஆகியோரால் வாசிக்கப்பட்ட வருணியின் கதையின் சில பகுதிகள் Stagecraft, School of Performance Art இன் காட்சி நடன நிகழ்ச்சியுடன் இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சியில், அவர்கள் 'என்னைக் காயப்படுத்தாதீர்கள் - சிறுவர் துஷ்பிரயோகத்தை நிறுத்துவோம்' என்ற சித்திரப் போட்டியை ஆரம்பித்து வைத்தனர். இது 16 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கானது என்பதுடன், வெற்றியாளரின் கலைப்படைப்பு, சர்வதேச சிறுவர் தினத்தைக் குறிக்கும் வகையில் ஒக்டோபரில் வெளியிடப்படவுள்ள புத்தகத்தின் முகப்பு அட்டையாகப் பயன்படுத்தப்படும்.

இப்போட்டியில் கலந்து கொள்ள உங்கள் நுழைவுகளை A4 அளவுள்ள கென்ட் தாளில் அல்லது வோட்டர்கலர் பேப்பரில், 2023 ஆகஸ்ட் 31 க்கு முன் Stop Child Cruelty Trust, 115 கின்சி வீதி, கொழும்பு 00800 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். நுழைவின் பின்புறத்தில் பின்வரும் தகவல் விபரங்களை உள்ளிடவும்: உங்கள் பெயர், பிறந்த திகதி, முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் பாடசாலையில் கல்வி பயிலும் தரம். 'இந்த ஆக்கத்தினை மேற்கொண்ட சிறுவரின் பெயரை நான் உறுதிப்படுத்துகிறேன்' என்ற சான்றுடன், திகதி மற்றும் வளர்ந்தவரின் முழுப்பெயர் மற்றும் கையொப்பம் என்ற அடிப்படையில் பெற்றோர்ஃபாதுகாவலர் அல்லது பாடசாலை ஆசிரியரின் உறுதிப்படுத்தலுடன் அனுப்பி வைத்தல் வேண்டும். மேலும் தகவல் விபரங்களுக்கு Stop Child Cruelty Trust இனை 0771656867 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது www.stopchildcruelty.com  ஊடாக தொடர்பு கொள்ளவும்.

Stop Child Cruelty Trust, 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதை மையமாகக் கொண்டு, சரீர ரீதியான தண்டனையை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகிறது. 2021 ஆம் ஆண்டில், SCC ஆனது சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் செயல்படும் நம்பகமான சிவில் சமூக அமைப்புகளின் கூட்டணியான Child Protection Alliance ஐ உருவாக்குவதற்குத் தலைமை தாங்கியது.

2022 இல் SCC ஆனது யுனிசெஃப் பாணியில் பிரபலமான சிறுவர் பாதுகாப்பு தூதுவர்களை நியமிப்பதற்கு முன்னோடியாக செயல்பட்டது. 2022 ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மதிப்பாய்வின் 42 வது அமர்வில், இலங்கையின் 5.2 மில்லியன் சிறுவர்களை பாதுகாக்கும் ஒரே பிரதிநிதியாக SCC பங்குபற்றியிருந்தமை அதன் மிகப்பெரிய சாதனையாகும். 2023 பெப்ரவரி 1 ஆம் திகதி, இலங்கை அமர்வுகளில், சரீர ரீதியான தண்டனையை சந்தேகத்திற்கு இடமின்றி தடை செய்தல் உட்பட சிறுவர் உரிமைகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கு பல நாடுகளை உடன்பட வைக்க SCC ஆல் முடிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .