2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

சர்வதேச சமாதான தினத்தை அனுஷ்டித்த கரித்தாஸ்

Editorial   / 2025 செப்டெம்பர் 25 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சமாதான தினம் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இது உலகளாவிய நீதி சமத்துவம் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை ஊக்குவிப்பதன் மூலம் சமாதான இலட்சியங்களை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும்.

கரித்தாஸ் ஸ்ரீலங்கா செடெக் நிறுவனமானது கரித்தாஸ் மறைமாவட்ட நிலையங்களுடன் இணைந்து செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி 2025 சர்வதேச சமாதான தினத்தை அனுஷ்டித்தது. கரித்தாஸ் ஸ்ரீலங்கா செடெக் நிறுவனத்தின் தேசிய தலைவர் அருட்பணி லூக் நெல்சன் அடிகளார் மற்றும் ஊழியர்கள் மறைமாவட்ட நிலையங்களின் பணிப்பாளர் அருட்தந்தையர்கள் மற்றும் ஊழியர்கள், சர்வமத தலைவர்கள், மறை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அங்கத்தவர்கள், களனி மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் “அகியமொண்டோ” நிறுவனத்தின் ஜேர்மன் நாட்டு ஒருங்கிணைப்பாளர்  தோமஸ் வென்கி உட்பட சுமார் 140 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவரும் களனி பல்கலைக்கழகத்தின் மனிதநேய பீடத்தின் மேலைத்தேய கலாச்சாரம் மற்றும் கிறிஸ்தவ கலாச்சார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளருமான  விஜித ரோஹண பர்னாந்து அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அவர் தனது உரையில் கத்தோலிக்க போதனைகள் மற்றும் தத்துவங்களை உள்ளடக்கியதாக சமாதானத்தின் அவசியம் தொடர்பில் குறிப்பிட்டதுடன், புனித அம்புரோஸை மேற்கோள் காட்டி நீதி மற்றும் மனித பொறுப்புக்கான தேவை தொடர்பில் வலியுறுத்தினார். “நீங்கள் உங்கள் உடைமைகளை ஏழைகளுக்கு பரிசாக வழங்கவில்லை. அவருக்கு சொந்தமானதை அவரிடம் ஒப்படைக்கின்றீர்கள். ஏனெனில் அனைவரதும் பொது பாவனைக்காக வழங்கப்பட்டதை நீங்கள் உடைமையாக்கி உள்ளீர்கள். உலகம் அனைவருக்கும் சொந்தமானது பணக்காரருக்கு மட்டுமல்ல”. என குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் கண்டி மறைமாவட்ட ஆயரும் தேசிய கத்தோலிக்க மறைபரப்பு செயற்பாடுகளுக்கான ஆணைக்குழுவின் தலைவருமான அதிவணக்கத்துக்குரிய வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் “சமாதானம் என்பது நீதியின் விளைவாகும். நீதிக்காக உழைக்காவிடில் சமாதானத்துக்கான எதிர்பார்ப்பு  வெறும் கனவே” என்றார்.

இந்நிகழ்வில் மற்றொரு அம்சமாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அருட்பணி. பெனட் மெல்லவ, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின்  பிரதி பணிப்பாளர் திருமதி. சந்துனி ஆரியவன்ச மற்றும் நாவதன்குலமே மேதானந்த தேரர் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்து கொண்டு சமாதானம் தொடர்பில் தமது கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து புத்தக வெளியீடு இடம்பெற்றது. சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மையப்படுத்தி “ புயலின் பின்னர்” மற்றும் ‘சமாதானத்துக்கான விதைகள்” என்ற நூல்கள் கரித்தாஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டன. இதேவேளை சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற ஓவியம் மற்றும் கவிதை போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவருக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

ஒற்றுமையுடன் செயல்பட்டு அமைதியான உலகத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு வெற்றிகரமாக நிறைவேறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .