2026 மே 13, புதன்கிழமை

ஜித்தாவுக்கான இலங்கைத் தூதுவராக ஓய்வுநிலை நீதியரசர் லபார் தாஹிர் கடமையேற்பு

Editorial   / 2026 மே 13 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 றிபாஸ்

 சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கான இலங்கைத் தூதுவராக (Consul General) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுநிலை நீதியரசர் எம்.ரி. மொஹமட் லபார் தாஹிர், கடந்த திங்கட்கிழமை (11) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நீதித்துறை அனுபவம்: நீதியரசர் லபார் தாஹிர் நீதித்துறை சேவையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அனுபவத்தைக் கொண்டவர். பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ள இவர், அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராகவும் பணியாற்றியிருந்தார். மேலும், நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராகவும், இலங்கை சட்டக் கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

நீதித்துறையில் நிலவும் காலதாமதங்களைக் குறைப்பதற்காகப் பல்வேறு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்த இவர், கடந்த 2007ஆம் ஆண்டில் ஒரே நாளில் 120 வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கி, நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

கல்விப் பின்னணி: கவுன்சில் ஜெனரல் லபார் தாஹிர், கொழும்பு விவேகானந்தா தேசிய பாடசாலை மற்றும் மல்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (B.A.) பட்டத்தையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் (LL.B) பட்டத்தையும் பெற்றுள்ளார்.

விசேட உரை: கடமையேற்பு நிகழ்வில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:

“ஜித்தா மற்றும் சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்குத் தூதரகம் ஊடாகத் திறமையான மற்றும் பயனுள்ள நலன்புரி சேவைகள் வழங்கப்படும். அத்துடன், இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதற்குத் தூதரகம் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும்.”

இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .