2025 ஜூலை 23, புதன்கிழமை

விமர்சையாக அனுஷ்டிக்கப்படவுள்ள ரவீந்திரநாத் தாகூரின் 150 ஆவது ஜனன தினம்

Kogilavani   / 2011 மே 04 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.கோகிலவாணி)
நோபல் பரிசுப்  பெற்ற இலக்கியவாதியான ரவீந்திரநாத் தாகூரின் 150 ஆவது ஜனன தினம் எதிர்வரும் 7 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதை முன்னிட்டு கொழும்பிலுள்ள இந்திய கலாசார நிலையம் பல்வேறு   நிகழ்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம், கொழும்புப் பல்கலைக்கழகம்,  ஸ்ரீஜயவர்தனபுர  பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், இலங்கை தாகூர் சங்கம், கலாசார மற்றும் கலைகள் விவகார அமைச்சு, தபால் சேவைகள் அமைச்சு, இந்திய-இலங்கை மன்றம் மற்றும் சர்வோதய அமைப்பு ஆகியனவற்றுடன்  இணைந்து இந்நிகழ்ச்சிகளை இந்திய கலாசார நிலையம் ஒழுங்கு செய்துள்ளது.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை இந்திய கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.

அங்கு கருத்து தெரிவித்த இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஸ்ரீ விக்ரம், 'இலக்கியவாதியான ரவீந்திரநாத் தாகூரின் ஜனன தினம் உலகலாவிய ரீதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இலங்கை இந் நிகழ்விற்கு மிகவும் முக்கியத்துவம் வழங்குகின்றது. ஏனெனில், ரவீந்திரநாத் தாகூரின் இதயத்தில் இலங்கைக்கென ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் இலங்கைக்கு 1922, 1930, 1934 ஆம் ஆண்டுகளில் 3 தடவைகள் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரின் ஜனன தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதியளித்த இலங்கை அரசிற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்' என்றார்.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் கவுன்ஸுலர் அதிகாரி மீர் அக்ரம் அஹமட், இந்திய கலாசார நிலையத்தின் பணிப்பாளர் எம். ராமச்சந்திரன், இந்திய உயர் ஸ்தானிகராலய கவுன்ஸுலர் பிரேந்தர்சிங், டாக்டர் சன்டகோமி கோப்பரஹேவ, இலங்கை தாகூர் சங்கத்தின் தலைவர் எச்.கமல் பிரேமதாஸ, பேராசிரியர் கே.எம்.என்.ஓ.தர்மதாஸ, ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

எதிர்வரும் 7 ஆம் திகதி, பிரித்தானிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந் நிகழ்வுக்கு  இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தலைமை தாங்கவுள்ளார். இதன்போது இலங்கை தபால்சேவைகள் அமைச்சினால் ரவிந்திரநாத் தாகூரின் நினைவாக தபால் முத்திரையொன்று வெளியிடப்படவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கை தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க  5 ரூபா பெறுமதியான  தபால் முத்திரையையும் தபால் உறையையும் வெளியிட்டு வைக்கவுள்ளார்.

அத்துடன்,  இந்திய மற்றும் இலங்கை எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய ரவிந்திராநாத் தாகூர் குறித்து கட்டுரைகளைக் கொண்ட  நினைவு மலர் ஒன்றினை  தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது. கலை, கலாசார விவகார அமைச்சர் டீ.பி.ஏக்கநாயக்க இந்த நினைவு மலரை வெளியிட்டு வைக்கவுள்ளார்.

மேலும் ரவீந்திரநாத் தாகூரின் நினைவாக இசை நிகழ்ச்சியொன்றை  பிரபல இசையமைப்பாளர்களான தயாரத்ன ரணதுங்க, பேராசிரியர் அமர ரனதுங்க ஆகியோர் இணைந்து நடத்தவுள்ளனர்.

அதேவேளை மே 6 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகம்  ரவீந்திரநாத் தாகூர் தின நிகழ்வை நடத்தவுள்ளது. இதன்போது, கலை நிகழ்ச்சிகளும் விவரணத் திரைப்படமொன்றும் காண்பிக்கப்படவுள்ளது.pix by:Indratna Balasooriya


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .