2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நோர்வே அனுசரணையில் 'யாழ்ப்பாண இசை விழா 2011'

Super User   / 2011 ஜனவரி 26 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.கோகிலவாணி)

 நோர்வேயின் அனுசரணையுடன், யாழ்ப்பாண இசை விழா 2011 என்னும் தொனிப்பொருளில் கலாசார ரீதியான நாட்டுப்புறக் கலைகளின் கொண்டாட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 25 முதல் 27 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

 இவ்விழா குறித்து  விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது.

இம்மாநாட்டில், இந்நிகழ்வின் இணைப்பாளர் ஜான் ரமேஷ் டீ சேரம், சேவாலங்கா மன்றத்;தை சேர்ந்த தமிழகன் தனபாலசுந்தரம், இலங்கை ரூவாஹினி கூட்டுத்தாபன அதிகாரி பிரசன்ன ஜெயசுந்தர, ஆலோசகர் லக்ஸ்மன் ஜோசப் டீசேரம், கலை இயக்குநர் அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் ஆகியோர் இவ்விழா குறித்து விளக்கமளித்தனர்.

 வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் கிராமியக் கலைகளுக்கு மீண்டும் உயிரோட்டத்தை ஏற்படுத்துவது,  மறைந்து கிடக்கும் கலைஞர்களை இக்கலைகளை மேடையேற்றுவதனூடாக வெளிக்கொணர்வது, இளைஞர்களுக்கு கலாசார பண்பாட்டுத் தோன்றல்கள் தொடர்பான அறிவினை ஏற்படுத்துவது, ஊடகங்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் நாட்டுப் புறக் கலைகளை ஆவணப்படுத்தி அவற்றினை பாதுகாக்கச் செய்தல், இனிவரும் சந்ததிக்கு இந்தக் கலைகளை எடுத்துச் செல்லல் போன்றவற்றை அடிப்படை நோக்கமாக கொண்டு இந்த இசைவிழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய கிராமிய பண்பாட்டு நாட்டுப்புறக் கலை நிகழ்வுகள் இதன்போது மேடையேற்றப்படவுள்ளன.

அத்துடன் இந்தியா நேபாளம், பலஸ்தீனம், நோர்வே, தென்ஆபிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கலைஞர்களும் தங்களுடைய பாரம்பரிய கலைகளையும் இவ்விழாவில் மேடையேற்றவுள்ளனர்.

இவ்விழாவில் பங்குபற்றும் நாட்டுப்புறக் கலைக்குழுவினர் அவர்களின் பண்பாட்டிற்கு அமைவாக தனித்தனி மேடையமைத்து தினமும் காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணிவரை தமது நிகழ்ச்சிகளை நடத்துவர். அதன்பின் மாலை 4 மணியிலிருந்து  10 மணிவரை பிரதான மேடையில் நிகழ்வுகள் நடைபெறும்.

இந்நிகழ்ச்சிகளை பார்வையிட வருவோருக்கு நாட்டுப்புறக் கலைகள் தொடர்பான அறிவினையும் ஈடுபாட்டினையும் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு நாட்டுப்புறக் கலைகளினதும் வரலாறு மற்றும் வளர்ச்சிப் படிகள் குறித்த பயிற்சிப்பட்டறைகளும் கலைஞர்களால் நடத்தப்படவுள்ளன.

 காலியில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற காலி இசைவிழாவின் ஒரு சகோதர நிகழ்வாகவே யாழ்ப்பாண இசை விழா 2011 இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.  இவ்விழா ஒவ்வொரு வருடமும் காலி அல்லது யாழ்ப்பாணத்தில் மாறி மாறி நடத்தப்படவுள்ளது.

இலங்கை - நோர்வே நாடுகளுக்கிடையிலான இசைக் கூட்டுறவின் ஒரு பகுதியாக, இவ்விழாவுக்கான நிதி நோர்வே தூதரகத்தினால் வழங்கப்படுகின்றது. இலங்கையில் அரு சிறி கலைத் திரையரங்கின் வழிகாட்டலுடன் சேவாலங்கா மன்றத்தினால் இந்நிகழ்ச்சித் திட்டம் அமுலாக்கப்படுகின்றது. இந்நிகழ்வுக்குரிய பிரதான ஊடக அனுசரணையை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தானம் வழங்குகின்றது.  (Pix  by: Indraratne Balasuriya)


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X