Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
A.P.Mathan / 2011 டிசெம்பர் 10 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையில் சமூக விஞ்ஞான கற்கை வட்டத்தின் ஏற்பாட்டில் பௌர்ணமி நாளில் கவிதையின் தூறலாய் அமைகின்ற “பாடிப்பறை“ நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இளைய தலைமுறையினருக்கு இலக்கிய உலகின் தடங்களை தடங்கலின்றி தெளிவுற ஏதுவாக இந்த தேசிய கலை இலக்கியப் பேரவை விளங்குகின்றது. ஒவ்வொரு மாத்தின் பௌர்ணமி தினத்தின் காலைப் பொழுதில் “பாடிப்பறை“ என்றும் கவியரங்கு இடம்பெறுவது வழமை. அதனடிப்படையில் இன்றும் கவியரங்கு நடைபெற்றது.
கவியரங்கிற்கு முன்பாக - ஈழத்து புரட்சிக் கவிஞன் சு.வில்வரத்தினத்தின் (சுவி)5ஆம் ஆண்டு மறைவுதினத்தினை நினைவுகூருமுகமாக அவரது கவிதைகள் பற்றிய தெளிவுரைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வினை ஆரம்ப உரையுடன் மு.மயூரன் தொடக்கி வைத்தார். சுவி அவர்களின் “யாருடைய கால்கள்“ என்னும் அழகிய உணர்ச்சிக் கவிதையினை எடுகோலாய்க் கொண்டு சோ.முரளி நயவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கவிஞர் சடாகோபன் - “விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்“ என்ற சுவியின் கவிதையினை தனது கம்பீர குரலினால் கவியாற்றுகை செய்தார். சுவியோடு நீண்டநாள் ஒன்றாக உறவாடிய சி.கருணாகரன் “சுவியைக் கண்டடைதல்“ என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். ஓட்டோ ரெனோ கஸ்ட்டிலோ எழுதிய ஆங்கிலக் கவிதையினை தெ.மீநிலங்கோ மொழிபெயர்த்திருந்தார். அந்த “அரசியல் சாரா புத்திஜீவிகள்“ என்ற அழகிய கவிதையினை மிதுன் ராகுல் அழகாக வாசித்துக் காட்டினார்.
சு.வில்வரத்தினத்தின் கவிதைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியதன் பின்னர் அவர்பற்றிய அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து கவியரங்கு ஆரம்பமாயிற்று.
கவிஞர் ந.காண்டீபன் தலைமைக் கவிபாடி கவியரங்கை அதிரவைத்தார். கம்பீர கவிதையில் நிகழ்கால காவியம் படைத்தார் கவிஞர் காண்டீபன். கவிஞரின் காண்டீபத்தை கையிலெடுத்த பெண் கவிஞர் ரா.வைஷ்ணவி “மழையின் பொழிவில் நனையும் பொழுதுகள்“ என்று கவிமழை பொழிந்தார். கவிமழை ஓய்ந்தபின்னால் “நீண்டெரித்த கோடையில்“ என்ற கவிதையூடாக சுடுபட்ட நினைவுகளை மீட்டெடுத்தார் இளம் கவிஞர் பவித்திரன். அனல் பறந்த கவியோந்த பின்னாலே “உயிர்த்தெழும் காலத்திற்காக” என அமைதியாக கவிபாடினார் மார்க்ஸ் பிரபாகர்.
அந்த இனிமையான கவிதைகளுடன் இன்றைய பாடிப்பறை நிகழ்வு இனிதாய் நிறைவுற்றது. இன்றைய பாடிப்பறை நிகழ்வினை செல்வி சே.மாளவிகா தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025