2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

சிவராம் நினைவு விருது விழா

Princiya Dixci   / 2015 மே 27 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமரர் மாமனிதர் சிவராமின் பத்தாவது நினைவு தினத்தையொட்டி சிவராம் நினைவு விருது விழா என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா ஜூன் 20 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சுவிஸ் தலைநகர் பேர்ணில் நடைபெறவுள்ளது.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க சுவிஸ் கிளை, சுவிட்சர்லாந்து சிவராம் நினைவுப் பணிமன்றத்துடன் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. 

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஈ. சரவணபவன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமரர் சிவராமின்; பாரியார் யோகரஞ்சினி சிவராம் கலந்து கொள்ளவுள்ளார்.

விருது விழாவில், சிரேஷ்ட ஊடகவியாலளர் திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். 

எழுத்து, வானொலி மற்றும் தொலைக்காட்சி  துறைகளில் சாதனை படைத்த 9 பேர் சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர். 

ஊடக சாதனையாளர்களான எஸ். திருச்செல்வம், ஈ.கே. ராஜகோபால், ஞா. குகநாதன், பி. விக்னேஸ்வரன், விமல் சொக்கநாதன், வி.என். மதியழகன், இளையபாரதி, இளையதம்பி தயானந்தா, பூபாலரத்தினம் சீவகன் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

சமூகத்துக்கும் தேசியத்துக்கும் உழைத்த ஊடகவியலாளர்கள் வாழும் போதே கௌரவிக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் சகோதர மொழி ஊடகவியலாளர்கள் மூவரும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட உள்ளனர்.

தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் அயராது உழைக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சுனந்த தேஷப்பிரிய, பாஷண அபேவர்தன மற்றும் சந்தன கீர்த்தி பண்டார ஆகியோர் இந்தக் கௌரவத்தைப் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .