Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 பெப்ரவரி 13 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
'நமது நாட்டிற்கென தனித்துவமான கலையொன்றை பிரசவிக்க வேண்டும். அந்தக் கலை எமது சமூகத்தின் பண்பாட்டு கலாசார, விழுமியங்களை பிரதிபலிக்கக் கூடியதாக அமையவேண்டும். அதற்கு நல்ல உள்ளங்களின் கூட்டு முயற்சியென்பது அவசியமாகும். பரதமானது புனிதமானது. அதை களியாட்ட நிகழ்வாக மாற்றிவிட்டார்கள். பரதத்தின் புனிதம் கெட்டு அது எங்கோ சென்று கொண்டிருக்கின்றது. அந்தஸ்துக் கலையாக மாற்றி அதனது நோக்கத்தையே இல்லாமல் செய்து நோக்கமற்ற கலையாக உருவாக்கி விட்டார்கள். இந்த நிலைமைகள் மாறவேண்டும்' என்கிறார் நாட்டிய தாரகை பவாணி குகப்பிரியா.
சிறுவயதிலே துருதுருவென அனைத்துக் கலைகளையும் பார்க்க வேண்டும், பார்த்து பழக வேண்டும் என்ற எண்ணத்தில் அருகில் இடம்பெறும் கலை நிகழ்வுகளில் பங்குபற்றுவது இவரது இயல்பாக காணப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த ஆர்வமே அவரை நல்லதொரு நடனத் தாரகையாக உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டிய கலைமணி, பட்டப் பின் படிப்பு ஆகியன இவரது கல்வித் திறமையை பரைசாற்றுகின்றவையாக காணப்படுகின்றன. கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றும் இவர், கலையில் மாணவர்களை அதிகமாக உள்வாங்க வேண்டும் என்பதற்காகவும், கலையில் மாணவர்கள் தங்களது ஆர்வத்தை முழுதாக செலுத்த வேண்டும் என்பதற்காகவும் கூத்துப் பட்டறைகள், செயலமர்வுகள் என்பவற்றை நிகழ்த்தி வருகிறார்.
தனது நாட்டிய வல்லமையால் கனடா, ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார். 'தியாகராஜா கலைக் கோயில்' நாட்டிய பள்ளியை குறுகிய காலமாக நடத்தி வருகின்றார். இதில் 20 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள். ஆரம்பத்தில் திருகோணமலையில் இந்த நாட்டிய பள்ளியை நடத்தி வந்த இவர் தற்போது கொழும்பில் அதனை பிரதானமாக செய்து வருகின்றார். இதில் பயின்று வெளியேறிய மாணவர்கள் நாட்டிய கலாசேஷ்த்திராவிலும், பல்கலைகழகங்களிலும் சென்று நாட்டியத்தை பயின்று வருகின்றார்கள்.
இனி அவருடனான நேர்காணலை பார்ப்போம்.
கேள்வி:- பரதக் கலையின் தற்போதைய நிலை குறித்து கூறுங்கள்?
பதில்:- இறைவனை அடைவதற்கு சிறந்ததொரு வழியாகவே கலைகளென்பது உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பரதக் கலையென்பது மிகவும் தூய்மையான கலையாக ஆரம்பக் காலங்களில் காணப்பட்டது. இறைவன் லயித்திருக்கும் இடமான ஆலயத்தில் இறைவனுக்கு முன்பாக ஆடப்பட்டதே இந்தக் கலை. உள்ளத்தில் உறைந்திருக்கும் இறைவனை அடைவதற்காக அன்று தேவனுடைய அடியார்களால் இறைவனின் பாதங்களில் இந்தக் கலை சமர்பிக்கப்பட்டது.
ஆரம்பக்காலத்திலே இருவேறு விதமானவர்கள் இந்தக் கலையை ஆடினார்கள். ஆலயங்களில் இறைவனின் திருவுருவத்திற்கு முன்பாக ஒருசாராரும், தனது வயிற்றுப் பிழைப்பிற்காக இன்னொரு சாராரும் இந்தக் கலையை ஆடினார்கள். கால மாற்றத்திற்கேற்ப இந்தக் கலையிலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
ஆலயங்களில் புனிதம் காத்தவர்களும், வயிற்றுப் பிணியை நோக்க பிழைப்பிற்காக இந்தக் கலையை கையிலேந்தியவர்களும் ஒன்றாக கலந்துபோக இந்தக் கலை களியாட்டக் கலையாக மாறிப்போனது. இந்தக் கலையின் நோக்கம் பிழைத்துப்போனது.
வெறும் கவர்ச்சிக் கலையாகவும், ஆடவர்கள் முன் ஆடும் கலையாகவும் இந்தக் கலையை மாற்றிவிட்டனர். தற்போது எதற்காக பரதத்தை ஆடுகின்றோம் என்ற நியதிகள் இல்லாமலேயே பரதத்தை ஆடுகின்றவர்கள்தான் எம்மில் அதிகம். பரதம் பயிலும் மாணவர்களிடம் பரதம் குறித்து ஒரு கேள்வியை கேட்டாலும் விழி பிதுங்க முழிக்கின்றார்கள்.
எதற்காக இந்தக் கலையை கற்றுக்கொண்டீர்கள் என்று வினவினால் 'எனது அம்மாவிற்கு விருப்பம், எனது பெரியம்மாவிற்கு விருப்பம், அதனால் கற்றுக்கொண்டேன்' என்று கூறுகின்றார்கள். பெற்றோர்களோ 'எனது பிள்ளை பரதம் பயில்கின்றாள், அரங்கேற்றம் முடித்து விட்டாள்' என்று சமூகத்துக்கு கூறிக்கொள்வதனூடாக தமது அந்தஸ்தை வெளிப்படுத்துபவர்களாக காணப்படுகின்றார்கள். எனவே அந்தஸ்தை வெளிப்படுத்தவும், களியாட்டக் கலையாகவும் இந்த புனிதமான பரதக் கலை மாறிப்போனது. முற்றுமுழுதாக விழுமியங்கள் மழுங்கடிக்கப்பட்ட கலையாக தற்போது எம் முன் இந்த பரதக்கலை விளங்குகின்றது. இது இன்றைய காலகட்டத்தில் பரதத்தின் நிலையாக காணப்படுகின்றது.
கேள்வி :- பரதம் என்பது நம் நாட்டினது பாரம்பரியக் கலையல்ல. அது பாரதத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கலை என்று ஒரு மேடைப் பேச்சில் கூறியிருந்தீர்கள். அப்படியென்றால் நம் நாட்டிற்குரிய கலையெது?
பதில் :- ஒவ்வொரு பிரதேசத்தவர்களும் தமது சமூகத்திற்கு ஏற்ப, தமது கலாசார விழுமியங்களுக்கேற்ப ஒவ்வொரு கலையை உருவாக்கிக்கொண்டார்கள். அந்தக் கலைகள் அந்த பிரதேசத்தின் விழுமியங்களை, கலாசாரங்களை, பண்பாடுகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்தவகையில் பாரதத்தை எடுத்துக்கொண்டால் அங்குள்ள ஒவ்வொரு மாநிலத்தவர்களும் தமக்கென ஒரு கலையை உருவாக்கிக் கொண்டார்கள். தாங்கள் நீண்ட காலமாக பின்பற்றி வந்த சமயம், சடங்கு, கலாசாரம் என்பவற்றை உள்ளடக்கி தமக்கென தனித்துவமான ஒரு கலையை உருவாக்கிக்கொண்டார்கள்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கேரள மாநிலம்தான். ஏனெனில் கேரளா மாநிலமானது கலையை பாதுகாப்பதிலும், ஒரு கட்டுக்கோப்புடன் அதனை வழங்குவதிலும், பல புதிய கலைகளை அறிமுகப்படுத்துவதிலும் பெயர்போன மாநிலமாகும். இந்த மாநிலம்தான் கதகளி, மோகினி ஆட்டம் போன்ற ஆட்டவகைகளை உருவாக்கியது. அண்மையில் கூட 'கூடி ஆட்டம்' என்ற ஓர் ஆட்டவகையை இந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது. உண்மையை கூற வேண்டுமென்றால் ஒரு சிறிய மணற்பரப்பைக் கொண்டதுதான் இந்த மாநிலாம். அவர்களால் இத்தனை கலைகளையும் அவர்களுக்கே உரிய கலாசாரஇ, பண்பாட்டு, விழுமியங்களுடன் அமைத்துக்கொள்ள முடியும் போது ஏன் எம்மால் முடியவில்லை? நமக்கே உரிய தனித்துவமான கலையெங்கே?
எமக்கென்ற நீண்ட பாரம்பரியத்தை கொண்ட கலைதான் இந்த நாட்டுக் கூத்து மரபு. இந்தக் கலைகூட ஆரம்பக் காலகட்டத்தில் பாரதத்திலிருந்து இங்கு எடுத்து வரப்பட்டதுதான். ஆனால் அந்தக்கலையை நம் மூதாதையர்கள் எமக்கே உரிய தனித்துவமான கலையாக வடிவமைத்து எடுத்துக்கொண்டார்கள். அதற்கென ஆட்டமுறைகள், மேடை வடிவமைப்புகள், ஆடையமைப்புகள் என்ற பல அம்சங்களை கொடுத்து அதனை எமக்கே உரிய கலை வடிவமாக அமைத்துக்கொண்டார்கள்.
இதேபோல பரதக் கலையும் அங்கிருந்து கொண்டு வரப்பட்டாலும் அந்தக் கலை இங்கு மிக வேகமாக வளர்ச்சி கண்டது. எனவே இந்த இரு கலைகளையும் அடிநாதமாக வைத்துக்கொண்டு அவை இரண்டிலும் இருந்து ஒரு புதிய கலைவடிவத்தை பிரசவிக்க வேண்டும்.
உண்மையில் பாரதத்தவர்கள் பரத சாஸ்திரம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டுதான் பல ஆட்டவடிவங்களை உருவாக்கியுள்ளனர். எனவே நாமும் நமக்குள்ள வளங்களை பயன்படுத்திக்கொண்டு எமக்கான ஆட்டவடிவத்தை பிரசவிக்க வேண்டும்.
கேள்வி:- இவ்வாறு புதிதாக பிரசவிக்கப்படும் அந்த ஆட்ட வடிவம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்:- நாம் உருவாக்க போகும் அந்த ஆட்ட வடிவமானது எமது தமிழர்களின் சமய, பண்பாட்டு, கலாசார, விழுமியங்களை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கக் கூடியக் கலையாக இருக்கவேண்டும். இந்தக் கலைக்கு பொதுவாக நாம் 'ஈழத்து ஆடல்' எனும் நாமத்தை சூட்டிக்கொள்வோம்.
இலங்கையில் எம் தமிழர்கள் பரந்துபட்டு வாழ்கின்றார்கள். வடக்குத் தமிழர், கிழக்குத் தமிழர், மலையக தமிழர், கொழும்பு தமிழர் என ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழும் எமது இனத்தவர்கள் தமக்கென ஒரு கிராமிய கலை வடிவத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். மலையகத்தில் 'காமன் கூத்து', கிழக்கில் 'தென்மோடி', வடக்கில் 'வடமோடி', மன்னாரில் 'காத்தவராயன் கூத்து' என ஒவ்வொருவரும் தமக்கான கிராமிய ஆட்ட வகைகளை கொண்டுள்ளனர்.
இவற்றுக்கென ஆட்ட வடிவங்களையும் அவர்களே உருவாக்கியுமுள்ளனர். எனவே இவற்றை பிரதிபலிக்க கூடிய வகையில் நாம் புதிதாக உருவாக்கும் ஆட்டவடிவம் அமையவேண்டும். பரதத்தில் அதிகமாக கர்நாடக இசையையே பயன்படுத்துகின்றார்கள். நாங்கள் அப்படியில்லாமல் முற்றுமுழுதாக தமிழிசையை பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற சிறிய சிறிய விடயங்களில் கூட முற்றுமுழுதாக நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த கோரிக்கை வெற்றியடைய நிச்சயமாக கூட்டு முயற்சியே தேவைப்படுகின்றது.
கேள்வி:- பரதக்கலை கவர்ச்சிக் கலையாக மாறிவிட்டது. அதற்கு ஊடகங்கள் முக்கிய பங்கெடுக்கின்றன என்று மேடை பேச்சொன்றில் கூறியிருந்தீர்கள். எதனை அடிப்படையாக வைத்து இந்த கருத்தை நீங்கள் முன்வைத்தீர்கள்..?
பதில்:- கலையுணர்வென்பது ஆடும் பிள்ளைக்கு மட்டும் இருக்க கூடாது. அதை பார்ப்பவர்களுக்கும் இருக்க வேண்டும். ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளனுக்கும் இருக்க வேண்டும். நாங்கள் என்னதான் பயிற்சிகள் எடுத்துக்கொண்டு வந்து மேடையேற்றினாலும் அதனை பார்ப்பது ஒளிப்பதிவாளனின் ஒளிப்பதிவு கருவியினூடாகதான். ஓளிப்பதிவாளன் எதனை எண்ணுகின்றானோ அதனையே காட்டுகின்றான். ஒளிப்பதிவாளன் என்பவன் கலைத்துவமிக்க ரசிகனாக இருக்க வேண்டும். வெறும் ரசனையாளனாக மட்டும் இருந்துவிடக்கூடாது. நல்ல கலையென்பது நல்ல ரசிகர்கள் இருக்கும்போதே வெற்றியடைகின்றது.
ஒளிப்பதிவாளன் எதை ரசிக்கின்றானோ அங்கே ஒளிப்பதிவு கருவியை பிடிப்பானென்றால் அந்த படைப்பு வெற்றியளிக்காது. ஜதி செய்யும் போது முகத்தை காட்டுவார்கள். இன்னொரு மாணவி நன்கு ஆடுவாள். அவளைக் காட்டாது அவள் அருகில் ஆடிக்கொண்டிருக்கும் வேறொரு மாணவியை காட்டுவார்கள். அல்லாவிட்டால் அவர்களது ஒளிப்பதிவுக் கருவி ஆடையமைப்பை அப்படியே போகஸ் செய்து காட்டும். முகத்தில் பாவனை செய்வதை முறையாக காட்டமாட்டார்கள். எனவே இவற்றை இனிவரும் காலங்களில் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி:- கிராமிய கலையென்பது பொதுவாக இழிவுநிலைக்குட்படுத்தப்பட்ட கலையாகவே சமூகத்தில் பார்க்கப்பட்டு வந்தது. பரதத்தின் வருகையுடன் அந்தக் கலை முற்று முழுதாக வீழ்த்தப்பட்டு போய்விட்டது. ஏன் இவ்வாறான ஒரு நிலை இந்தக் கலைகளுக்கு ஏற்பட்டது?
பதில்:- ஆரம்ப காலம் தொட்டே இந்த கிராமியக் கலைகள் என்பது சாதியத்துடன் பின்னப்பட்டே காணப்பட்டது. கிராமியக் கலைகளில் பாத்திரமேற்கும் வாத்திய கலைஞர்கள் கீழ் சாதி மட்டத்தினரை சேர்ந்தவர்களாகவே காணப்பட்டார்கள். உதாரணத்திற்கு பறையடிப்பவர்கள்.
உயர்சாதியினர் இவ்வாறான பாத்திரங்களை ஏற்றால் அது உயர் சாதிக்கு இழிவை ஏற்படுத்துவதாகவே காணப்பட்டது. காலப்போக்கில் இவ்வாறான இந்த கிராமிய கலைகளில் பாத்திரமேற்பவர்கள் தம்மை சமூகம் இழிவாக கருதி விடும் என்பதற்காகவே தமது உயிர் கலைகளை விட்டுக்கொடுக்க தொடங்கினார்கள். பாடத்திட்டத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட கல்வி முறையில் இவ்வாறான தாழ்த்தப்பட்ட சாதியமைப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் என்னதான் கஷ்டபட்டாலும் தங்களது பிள்ளைகளையாவது பல்கலைகழகத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கில் அதற்காக உழைக்கத் தொடங்கினார்கள்.
ஒரு பிழைப்பாக இதனை மேற்கொண்டவர்கள் காலப்போக்கில் வருமானம் பற்றாமல் போக முற்றுமுழுதாக இந்தக் கலையை கைவிட்டார்கள். அந்தஸ்துக்குரிய கலையாக சமூகத்தில் மாறிபோன பரதக்கலையை தமது பிள்ளைகளும் பயில வேண்டும் என்று எண்ணத் தொடங்கினார்கள். 'என் மகள் வெளிநாட்டில் சென்று அரங்கேற்றம் முடித்திருக்கிறாள்'; என்று கூறுவதை அவர்கள் பெரும் அந்தஸ்தாக கருதினார்கள். இது கிராமியக் கலைகளுக்கு பெரும் சவாலாக அமைந்துபோனது. சாதிப்பிரச்சினையே இந்தக் கலைகள் அழிவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கேள்வி:- கிராமியக் கலை வடிவங்களான கூத்துக்களை தற்போதைய இளம் சந்ததியினர் ஏன் உள்வாங்கிக்கொள்ள மறுக்கின்றனர்?
பதில்:- உண்மையில் கூத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரியதொரு வரவேற்பை பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வளர்ந்த சமுதாயம் அந்த கிராமிய அளிக்கைகளை சரியான முறையில் அவர்களது கைகளில் ஒப்படைக்க தவறிவிட்டது. ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் தீயது காணப்படுமாயின் அது பெற்றோரின் வளர்ப்பில் தங்கியுள்ளது. பெற்றோர் எதனை வெளிப்படுத்துகின்றார்களோ அதனையே பிள்ளையும் உள்வாங்கும். அதேபோன்றுதான் வளர்ந்த சமுதாயம் எந்தவிதத்தில் கூத்தை இளைஞர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியதோ அதைதான் கூத்துக் குறித்து பிரதிபலிப்பவர்களாக இன்றைய இளம் சமுதாயத்தினர் காணப்படுகின்றனர்.
மற்றுமொரு விடயம் கூத்தில் நிபுணத்துவம் அற்ற கலைஞர்கள் உள்வாங்கப்பட்டிருப்பது. பொதுவாக கூத்தை நெறிப்படுத்தி நடத்தி செல்பவர் மது அருந்திவிட்டு கூத்தை அளிக்கைச் செல்வது, பொருத்தமற்ற வேஷக் கட்டு போடுவது, சமூகத்தில் நல்ல ஒழுக்க நெறியை பின்பற்றாதது, இவை காலங்காலமாக கூத்தை நெறிப்படுத்தியவர்கள் விட்ட பிழைகளாக காணப்படுகின்றன. மீண்டும் மீண்டும் குருமார்கள் செய்த பிழை மாணவர்கள் மத்தியில் தாக்கம் செலுத்த தொடங்கியது. கூத்துக்கு மரியாதை கொடுக்கப்படுவதில்லையென்றால் அங்கு கூத்து முறையாக வழங்கப்படவில்லையென்றே அர்த்தம்.
கேள்வி:- ஓவியம், நாடகம் போன்ற காண்பிய கலைகள் புதிய பரிமாணங்களை நோக்கிச் வேகமாக சென்றுகொண்டிருக்கின்றன. ஆனால் பரதம் இன்னும் அதே நிலையில்தான் இருக்கின்றது. எந்த மேடை நிகழ்வுகளிலும் - பார்த்து சுவைத்தவற்றையே மீண்டும் மீண்டும் நிகழ்த்துகின்றார்கள். இந்த நிலை மாறாதா? பரதம் மாற்றத்திற்குட்படுத்தக் கூடாது என்று ஏதேனும் நியதிகள் உண்டா?
பதில்:- உண்மையைக் கூறப்போனால் பரதம் இன்னும் முழுமைத்துவமே அடையவில்லை. பரதத்தில் 03 பிரிவுகள் உள்ளன. நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்பன அந்த மூன்று பிரிவுகளாகும். நாங்கள் என்ன செய்கின்றோம் என்றால் மீண்டும் மீண்டும் நிருத்தத்தையும், நிருத்தியத்தையும் செய்கின்றோம். ஆனால் நாட்டியத்தின் விஸ்தாரணத்தையே செய்வதில்லை. மித மிஞ்சிப்போனால் ஒரு நாட்டியத்தினுடைய எழுத்துருவை எடுத்து அதனை நிருத்தியத்தை போன்று செய்துவிட்டு வருகின்றோம்.
எனவே, காட்சியில் வெறுமை மட்டுமே காண்பிக்கபடுகின்றது. பாத்திரத்தின் முழு வெளிப்பாடுமே காண்பிக்கப்படுவதில்லை. எனவே பரதம் இலங்கையில் முழுமையாக வளர்ச்சியடையவில்லை.
இந்தியாவில் எல்லாம் பரத நிகழ்வுகளை மேற்கொள்பவர்கள் பாத்திரபடைப்புகளை உணர்ந்து வெளிப்படுத்துவார்கள். பார்ப்பதற்கே மெய் சிலிர்த்துப்போகும். நாம் ஒரு கட்டத்தை தாண்டி பயணிக்கின்றோம் இல்லை. வழமையாக கொடுப்பதையே மீண்டும் மீண்டுமாக வழங்குகின்றோம். இன்னும் நாட்டியத்தினுடைய இடத்தை நாம் தொடவில்லை. நம்மிடம் திறமையானவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் ஏன் இன்னும் புது முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்றுதான் தெரியவில்லை.
இங்கு இன்னுமொன்றை குறிப்பிட்டேயாக வேண்டும். நமக்கு வளம் குறைவு என்பதும் பெரியதொரு சவாலாகவே இருந்து வருகின்றது.
கேள்வி:- பரதக்கலையை ஆர்வமாக பயில்வதற்கு வசதிகள் இல்லாமல் பாடசாலை மட்டத்தில் மட்டும் பயின்றுவிட்டு இருக்கும் மாணவர்களுக்கு இந்தக் கலையின் மீதான ஆர்வத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்? குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள்.
பதில்:- உண்மையில் பாடசாலை மட்டத்தில் பரதத்தை பயில்வது சாத்தியமற்ற ஒன்று. கொடுக்கும் காலவேளையில் பரதத்தையும் சொல்லிக்கொடுத்து ஒப்படைகள், கணிப்பீடுகள் என்பவற்றையும் செய்துகொள்வது கடினமான ஒன்று. இதற்காகவே பிரத்தியேக வகுப்புகளை காலம் காலமாக ஏற்படுத்தி வருகின்றார்கள்.
கிராமபுற மட்டங்களில் வாழும் மாணவர்கள் முன்பைவிட அதிகமான ஆர்வத்துடன் இருக்கின்றார்கள். இந்த பரதத்தை அவர்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களை பரதத்தில் ஈடுப்பட வைப்பதற்கு நல் உள்ளங்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது.
அதைவிட பல சமூகசார் நிறுவனங்கள் இணைந்து செயலமர்வுகள் போன்றவற்றை வறிய பிரதேச மாணவர்களுக்கு வழங்குகின்றார்கள். நடன சென்னெறி குறித்து கற்றுத்தேர்ந்த கலைஞர்களின் அறிமுகம் இல்லாமலிருப்பது அந்த சமூக சார் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பெரியதொரு சவாலாக அமைந்துள்ளது. நடனம் குறித்து நன்கு கற்று தேர்ந்தவர்களால் மட்டுமே அந்த மாணவர்களுக்கு முழுமையான கலை வடிவத்தை வழங்க முடியும். பரதக்கலை முழுமையாக அந்த மாணவர்களுக்கு சென்றடைய நல்ல ஆசிரியர்கள் தேவைப்படுகின்றார்கள். தரமான ஆசிரியர்களை உள்வாங்கும் நிலைமை இந்த சமூக சார் நிறுவனங்களுக்கு இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனங்களின் முயற்சியும் வெற்றியளிக்கும்.
கேள்வி:- கலைகளை வளர்ப்பதற்கு இதுவரை நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்துக் கூறுங்கள்.
பதில்:- பாடசாலைகளில் கூத்துப்பட்டறைகளை நடத்துகின்றேன். இதில் நல்ல விழுமியங்களை, பண்பாடுகளை அந்த மாணவர்களுக்கு வழங்குகின்றேன். பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். அதனை எதிர்வரும் கலைவிழாவின் போது மேடையேற்றவுள்ளேன். வேலானந்தன் ஆசிரியருடன் இணைந்து வெளிநாட்டில் சென்று செய்வதற்கு எனக்கு ஒரு செயலமர்வு கிடைத்தது. அந்த செயலமர்வில் நமது நாட்டில் காணப்படும் புகழ்பெற்ற தளங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட பாடலுக்கு பரதமும் இல்லாமல் கூத்தும் இல்லாமல் ஒருவகை நடனத்தை மேடையேற்றினேன். கனடாவிற்கு சென்றபோது இந்த நடனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே புதிய நடன வகையை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சி 5 வருடங்களுக்கு முன்பிலிருந்தே நாங்கள் ஆரம்பித்துவிட்டோம்.
கேள்வி:- இறுதியாக நீங்கள் கூற விரும்புவது?
பதில்:- தமிழ்நாட்டில் எமது பரதநாட்டிய நிகழ்வுகளை எடுத்துக்கொண்டு அரங்கேற்றினால் எங்கே உங்களது கலையென்று கேட்கின்றார்கள்? அப்போது நாம் வாயை மூடிக்கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இந்த நிலை மாறவேண்டும். எமக்கான , எமது கலாசார விழுமியங்களை வெளிப்படுத்தும் கலையை நாம் பிரசிவிக்க வேண்டும். அதற்கு அறிவு, ஆற்றல் மிக்க அறிஞர்கள் எங்களது பின்புலமாக இருக்க வேண்டும்.
நாங்கள் தொலைந்துபோகும் கட்டத்தில் இருக்கின்றோம். நல்ல உள்ளங்கள் தங்களது திறமையை மறைத்து களமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நல்ல பின்புலமுள்ள நிறுவனங்கள் மலையகத்தில் இருக்கின்றன. எனவே இவ்வாறான அமைப்புகள் கிராமம் கிராமமாக, ஊர் ஊராகச் சென்று பயிற்சி பட்டறைகளை எடுத்து நடத்தும்போது நான் விடுத்த கோரிக்கைகள் சாத்தியமாகும். இல்லையென்றால் இது குருடன் கண்ட கனவாகவே அமைந்துவிடும்.
நேர்காணல் :- க.கோகிலவாணி
படங்கள் :- குஷான் பதிராஜ
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
sathiya Friday, 18 February 2011 05:26 PM
மிகவும் உண்மையான கருத்துகள் ,
Reply : 0 0
tksureshkumar Monday, 03 December 2012 04:13 PM
ஒரு சிறந்த கலை வடிவத்தை வளர்த்தெடுக்க வேண்டிய நாம் இன்னும் மொனமாகவே இருப்பது வருத்தத்தை தரும்...எதிரகால மக்களுக்கு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago