2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பரதத்தினை நான் இழிவுபடுத்தவில்லை : பரத நாட்டிய தாரகை ரங்கனா

A.P.Mathan   / 2011 மார்ச் 14 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கலை என்பது இதயத்துக்கும் மூளைக்கும் வழங்கப்பட வேண்டிய விருந்தாக அமைய வேண்டும். கலையின் மூலம் ரசிகர்களின் மனங்கள் அமைதியடைய வேண்டும். அதுவே ஒரு கலைஞர் வழங்கும் சிறந்த படைப்பாகும். அந்தவகையில் பரத நாட்டியம் அந்த படைப்பினை வழங்குகின்றது எனக் கூறுகிறார் பரத நாட்டிய தாரகை ரங்கனா நவோதினி ஆரியதாச.

பரதம் என்ற கலைப் பாதையில் வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கும் ரங்கனா, கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவராவார். பூட்டன், பாட்டன், பாட்டி, அம்மா என்ற கலைக்குடும்பத்தில் இணைந்துகொண்டுள்ள அவர் பரதத்தை தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கொண்டு வாழ்ந்து வருகிறார்.

சுமார் நான்கு வயது முதலே நடனத்தில் ஆர்வம் காட்டி வந்த அவர் தனது தாய் பத்மினி ஆரியதாசவின் பரதத் துறையையே தனக்கெனவும் தெரிவுசெய்துகொண்டுள்ளார். கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் மாணவியான அவர், பரதக் கலையை தென்னிந்தியா, கலாஷேத்ராவில் முறையாகப் பயின்றுள்ளார்.

பின்னர், நாடு திரும்பிய அவர் மஹரகமவில் அமைந்துள்ள இளைஞர் மன்றத்தில் நடன ஆசிரியையாகவும் ஆலோசகராகவும் செயற்பட்டதுடன் முப்படையினரின் கலாசார நிகழ்வுகளுக்கான போதனாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். தற்போது கடவத்தையில் ஸ்ரீ பத்மரங்க நிருத்தனகேதனய என்ற நடனாலயத்தை நடத்தி வரும் அவருடனான நேர்காணலை இங்கு தருகிறோம்.

கேள்வி :- ஒரு சிங்களவராக பரதம் பயில்வதில் நீங்கள் எதிர்நோக்கிய சவால்கள் என்ன?

பதில் :- இந்த விடயத்தில் நான் எந்தவிதமான சவால்களையும் எதிர்நோக்கவில்லை என்றே கூற வேண்டும். காரணம், பரதம் படிப்பதற்கோ அல்லது படிப்பிப்பதற்கோ கட்டாயம் தமிழ் மொழியை அறிந்திருக்க வேண்டும். அந்தவகையில்; நான் தமிழ் படித்துள்ளேன். என்னுடைய இந்தியக் கல்வியின் போது தமிழ் ஒரு பாடமாகவே இருந்தது. அதனால் மொழி என்ற சவாலை நான் வெற்றிகொண்டேன்.

அத்துடன், பரதம் என்பது தமிழ் மக்களின் கலாசார நடனமாகும். இது தமிழர்களால் பூஜிக்கப்படும் நடனம். அதனால் அதற்குரிய மரியாதையை நான் வழங்கி வருகின்றேன். ஒருபோதும் நான் அதை இழிவுபடுத்தவில்லை. அதன் தன்மையை நான் இப்போதும் பாதுகாத்து வருகின்றேன். சிங்களவர் என்ற முறையில் அதனை நாம் எமது கலாசாரத்துக்கு ஏற்றவகையில் மாற்ற முயற்சித்திருக்கலாம். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. நினைக்கப்போவதுமில்லை.

கண்டிய நடனத்தை ஏனையவர்கள் மாற்றத்துக்கு உட்படுத்துவதை நாம் ஒருபோதும் விரும்புவதில்லை. அது போலவே பரதத்தை மாற்றத்துக்கு உட்படுத்துவதில் தமிழர்கள் விரும்பமாட்டார்கள். அவர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். அத்துடன் கலாஷேத்திராவிலிருந்து நாம் வெளியேறும்போது இந்த நடனக் கலைக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது அதன் தன்மையைப் பாதுகாப்போம் என்று சத்தியப்பிரமாணம் செய்துவிட்டே வெளியேறுவோம்.

அத்துடன், பரதத்தை நான் உணர்வுபூர்வமாகவே பயின்றேன். அதனால் அதன் தன்மையைப் பாதுகாக்கும் அளவுக்கு இந்தத் துறையில் நீடித்திருக்க முடியும். பலர் இந்த நடனத்தைப் பயின்று அதனை இப்போது கொச்சைப்படுத்தி வருகின்றனர். அந்த நிலைமைக்கு நான் செல்லவில்லை. மேலும், தமிழ் மக்களுடன் நாம் சமாதானமாகவே வாழ்ந்து வருகின்றோம். தமிழ் மக்களுடன் பின்னிப்பிணைந்த நடனமே பரதம். அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதில் தான் எங்களுடைய திறமையை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். அதனால் மொழி தொடர்பிலோ அல்லது போட்டி குறித்தோ நான் எவ்வித சவாலையும் எதிர்நோக்கவில்லை.

கேள்வி:- இலங்கையில் பரதத்தை பயிற்றுவிப்பதற்கு தற்போது போட்டி நிலவுகின்ற நிலையில் ஒரு சிங்கள பரத ஆசிரியராக எவ்வாறான சவால்களை எதிர்நோக்கினீர்கள்?

பதில்:- பரதம் பயில்வதற்கு உள்ள தகுந்த இடம் தென்னிந்தியாவிலுள்ள கலாசேத்திரா. இதன் நிறுவுனர் ருக்மனி தேவி அருண்டேல். அவரால் உருவாக்கப்பட்டவர்களிடமிருந்தே நான் நடனம் பயின்றேன். எனது தாய் பத்மினி, நேரடியாகவே ருக்மனி அருண்டேலிடம் நடனம் பயின்றவர். அதனால் பரதம் என்பது தொடர்பில் எங்களுக்கு நல்லதொரு அனுபவ அறிவு உள்ளது.

அதனால் ஒரு நடன ஆசிரியராக எனக்கு சவாலிட எவரும் இல்லை என்றே நான் கூறுவேன். அத்துடன் இலங்கையில் எனக்கு எவரும் சவாலிடவுமில்லை. இது பிழை, அது பிழை என்று எவரும் சுட்டிக்காட்டும் அளவுக்கு நான் இடமளிக்கவுமில்லை. பரதம் என்னும் போது அதைப்பற்றி தமிழர்களை விடவும் சில விடயங்கள் எனக்கு தெரியும். அதை நான் தைரியமாக கூறுவேன்.

கேள்வி:- சிங்கள மாணவர்களிடையே பரதம் தொடர்பான ஆர்வம் எவ்வாறுள்ளது?

பதில்:- பரதம் பயில்வதில் மாணவர்கள் மத்தியில் மாபெரும் ஆர்வம் உள்ளது. பரதத்தில் உபயோகப்படுத்தப்படும் ஆபரணங்கள், முழு உடலையும் மறைக்கும் வகையில் அமையப்பெற்றுள்ள ஆடை வடிவமைப்பு போன்றனவே அவர்களின் ஆர்வத்தைக் கவர்ந்திழுத்துள்ளது எனலாம். அதைவிட பரதம் என்பது தெய்வங்களுடன் முற்றும் முழுதாக தொடர்புபட்டது. அதனால் இது பெண்களுக்கு மிகவும் பொருத்தமான நடனமாகும்.

இந்தியாவின் மிகவும் தொன்மைவாய்ந்த நடனமாக பரத நாட்டியம் விளங்குகின்றது. கதக், கதக்களி, மணிப்புரி மற்றும் பரத நாட்டியம் என்ற இந்திய கலாசார நடன வரிசையில் பரதமே பழமைவாய்ந்தது. அத்துடன் அழகானதும் கடினமானதுமான நடனம் என்றாலும் அது பரதம் தான். அதனால் பரத நாட்டியம் தெரிந்த ஒருவர் எந்தவொரு நடனக் கலையையும் இலகுவில் அறிந்துகொள்ள முடியும்.

அதனால் பரதத்துக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. சிங்கள மாணவர்களிடையேயும் அதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. அத்துடன் இலங்கையைப் பொறுத்தவரையில் கதக், கதக்களி போன்றன பிரபல்யமடையாத நடனங்கள். ஆனால் பரதம் அவ்வாறில்லை. இளைஞர்கள் மத்தியில் இது மிகவும் பிரபல்யமடைந்துள்ளது.

கேள்வி:- கதக், கதக்களி, மணிப்புரி ஆகிய நடனங்களிலிருந்து பரதம் எவ்வாறு வேறுபடுகின்றது?

பதில்:- நடனத்தில் இரு வகைகள் உள்ளன. ஒன்று தாண்டவம், அடுத்தது லாஸ்யம். கதக் என்பது லாஸ்ய வகையைச் சார்ந்தது. லாஸ்யம் என்பது மென்மையானது. அதனால் கதக் நடனமும் மிகவும் மென்மையானது. மணிப்புரி நடனமும் லாஸ்ய வகையையே சாரும். ஆனால் கதக்களி மற்றும் பரத நாட்டியம் ஆகிய இரண்டும் தாண்டவ நடன வகையைச் சாரும். அத்துடன் கதக், மணிப்புரி ஆகிய நடனங்கள் வியாபித்த நடனங்களாக காணப்படுவதில்லை. ஓரிடத்திலிருந்தே மேற்கொள்ளப்படும் மிகவும் மென்மையான நடனங்கள் அவை. அத்துடன் அவை வரையறுக்கப்பட்டளவில் மாத்திரமே ஆடப்படுகின்றன.

இதேவேளை, கதக்களி நடனம் பெரும்பாலும் ஆண்களுக்கே உகந்ததாகக் காணப்படுகின்றது. அதிலுள்ள பாவங்களை ஆண்களுக்கே எடுக்க முடியும். இந்நிலையில் பரதம் பெரும்பாலும் பெண்களுக்கே உரித்தானதாகக் கருதப்படுகிறது.

கேள்வி:- அரங்கேற்றம் என்பதால் விளக்கப்படுவது யாது?

பதில்:- அரங்கேற்றமானது பெருமளவு பணத்தை செலவிட்டு செய்யப்படுவது. இருப்பினும் ஒரு பிள்ளையின் நிதி இயலுமையைக் கொண்டே அது செய்விக்கப்பட வேண்டும். அத்துடன் எந்தவொரு ஆசிரியரும் தனது மாணவரை அரங்கேற்றம் செய்துதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

அதனை பெற்றோரும் மாணவருமே தீர்மானிக்க வேண்டும். முக்கியமாக மாணவர் விரும்ப வேண்டும். இல்லாவிடின் ஏனையோரின் தேவைக்காக மாணவரை அரங்கேற்றத்துக்காக மேடையேற்ற முடியாது. மாணவரின் திறமையைப் பொறுத்து அவரை மேடையேற்றுவதா? இல்லையா? என்பது குறித்து ஆசிரியர் இவ்விடத்தில் தீர்மானம் எடுக்க முடியும்.

கேள்வி:- கலை என்பது வர்த்தகப் பொருளாகிவிட்ட நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்:- பணம் என்பது வாழ்க்கைக்கு முக்கியமானது தான். ஆனால் பணம் முதலிடம் பெறக்கூடாது. கலையே முதலிடம் பெற வேண்டும். பணத்தால் கலையை அடிபணிய வைக்க முடியாது. காரணம் கலை, பணம் என்பவை இரண்டு வகையானவை. முன்னொரு காலத்தில் கலைஞர்கள் ஏழைகளாகவே காணப்பட்டனர். ஆனால் தற்போது அப்படியில்லை. பெரும்பாலானோர் பணத்துக்கே முதலிடம் வழங்குகின்றனர். முதலிடம் வழங்குவதற்காக கலையை விற்கக் கூடாது.

லக்ஷ்மி உள்ள இடத்தில் சரஸ்வதி இருக்க மாட்டார். சரஸ்வதி உள்ள இடத்தில் லக்ஷ்மி இருக்க மாட்டார். பணம் என்பது இன்று எனக்கு - நாளை மற்றொருவருக்கு. ஆனால் கலை என்பது அப்படியில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஒரு கலைஞராவதற்கு போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் நிறைய கலைஞர்கள் உருவாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெயரில் மட்டுமே கலைஞர்கள். நடனமொன்றை ஆடிவிட்டார், அல்லது பாடலொன்றைப் பாடிவிட்டார் என்பதற்காக அவர் கலைஞராகிவிட முடியாது. கலைஞர் என்பதை அவருடைய அடிப்படையை வைத்தே அறிந்துகொள்ள முடியும். கலைஞர் என்பவர் எந்நேரமும் சந்தோஷமாக இருக்க வேண்டியவர். மற்றொருவரின் மனதை புண்படுத்துபவராக இருக்கக் கூடாது. மற்றொருவரை தாழ்த்திப் பேசவும்கூடாது.

கலைஞர்களாகிய நாங்கள் மக்களுக்காக வாழ்கிறவர்கள். எங்களுக்கு ஜாதி, மதம், குலம் என்ற பேதமில்லை. பொதுமக்களை சந்தோஷப்படுத்துபவர்களாகவே நாம் வாழ வேண்டும். அதனால் பெறப்படும் திருப்தியே எமது வெற்றி. ஒரு கலைஞர் எங்கும் எப்போதும் தனிமைப்படுத்தப்படமாட்டார். அவர்களைச் சுற்றி பாரியதொரு சமூகமொன்றே உள்ளது.

காலம் வரையறுக்கப்பட்டது. அந்த காலத்துக்குள் நாம் எமது திறமையை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக கலையை விற்கக்கூடாது.  அத்துடன் கலைக்குள் ஒருவரால் நிலைத்திருக்க முடியவில்லையாயின் எவ்வளவு பெரிய கலைஞராக இருந்தாலும் அதனால் எவ்வித பயனும் இல்லை. அத்துடன் ஒரு கலைஞர் என்ற நட்சத்திரமாக மின்ன வேண்டுமாயின் அதற்கு அதிர்ஷ்டம், நல்லதொரு குடும்ப பின்னணி என்பவற்றோடு திறமையும் காணப்பட வேண்டும். அதனால் கிடைக்கும் பிரபலத்தை பணத்தால் வாங்கிவிட முடியாது.


கேள்வி:- இவ்வாறானதொரு நிலைமையை எவ்வாறு மாற்றியமைக்க முடியும்?

பதில்:- அதற்கு ஒரு கலைஞர் சாந்தமானவராக இருக்க வேண்டும். அத்துடன் பொறுமை கூடவே இருக்க வேண்டும். காரணம் ஒரு கலைஞர் அவரது துறையில் உயர்ந்து செல்லச் செல்ல மனித குணங்களும் அதேபோல் சிறந்த முறையில் விருத்தியடைய வேண்டும். மனிதாபிமானமற்ற ஒருவராக அவரது துறையில் உயர்வாரானால் அவரை எவரும் மதிக்க மாட்டார்கள்.

கேள்வி:- ஒரு நடன ஆசிரியர் கொண்டிருக்க வேண்டிய இயல்புகள் எவை?

பதில்:- நடனக் கலைஞம் ஆசியரும் வேறுபட்டவர்கள். எவ்வளவு பெரிய கலைஞராயினும் ஓர் ஆசிரியர் என்ற வகையில் தனது மாணவர்களுக்கு முறையான கற்பித்தலை வழங்க முடியாவிட்டால் அவர் ஆசிரியராக தோற்றுவிடுவார். ஒரு மாணவர் தனது ஆசிரியரையே தனது முன்னோடியாகக் கொள்கிறார். அதனால் ஓர் ஆசிரியர் தனது திறமையை எவ்வளவுதான் மேடையேற்றினாலும் தனது மாணவர்களுக்கு முறையாக அவற்றைச் சொல்லிக்கொடுக்க முடியாவிட்டால் அவர் அங்கு தோற்றுப்போய்விடுவார். அதனால் ஓர் ஆசிரியர் கற்பிப்பதிலும் கலையை வெளிப்படுத்துவதிலும் சிறந்தவராக இருக்க வேண்டும்.

கேள்வி:- இலங்கையில் பரத நாட்டியக் கலையை மேலும் வளர்க்க, முன்னெடுக்க எதிர்ப்பார்க்கப்படும் நடவடிக்கைகள் எவை?

பதில்:- பரதம் தொடர்பில் மாணவர் மத்தியில் ஆர்வம் அதிகமாகியுள்ள இந்த தருவாயில், அதனை பாடசாலை ரீதியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழி மூல பாடசாலைகளில் பரதம் படிப்பிக்கப்படுகின்ற போதிலும் சிங்கள மொழி பாடசாலைகளில் அவ்வாறானதொரு நிலைமை இல்லை. அதனால் பாடசாலை மட்டத்தில் பரதம் படிப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் உரிய தகுதி இல்லாது பரதம் தொடர்பான பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதிலிருந்து ஆசிரியர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தனது பிள்ளையை படிக்க அனுப்புவதற்கு முன்னர் பிள்ளையின் ஆசிரியர் குறித்த பின்னணியை பெற்றோர் அறிந்திருக்க வேண்டும். அந்த ஆசிரியர் தொடர்பில் பெற்றோர் அவதானமாகவும் இருக்க வேண்டும்.

இதேவேளை, நாம் மேடையேற்றும் நடனம் இதயங்களுக்கும் மூளைக்கும் வழங்கப்பட வேண்டியனவே தவிர கண்களுக்கு அல்ல. கலையைப் பார்ப்பவர்களின் மனங்கள் அமைதியடைய வேண்டும். அதுவே ஒரு கலைஞர் வழங்கும் சிறந்த படைப்பு. இதைவிடுத்து அரைகுறை ஆடைகளுடன் தோற்றமளித்து கலையை வெளிப்படுத்தும் பட்சத்தில் அது கண்களுக்கே விருந்தாக அமையும். அதனால் பார்வையாளர்களின் சிந்தனை வேறு திசையை நோக்கிப் பயணிக்கும். இவ்வாறான நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும்.

பரத நாட்டியத்தைப் பொறுத்தவரையில் இவ்வாறானதொரு நிலைமை இன்னமும் உருவாகவில்லை. அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதுமில்லை.

கேள்வி:- எதிர்கால பரதக் கலைஞர்களுக்கான உங்களின் ஆலோசனைகள் என்ன?

பதில்:- பரதம் மாத்திரமன்றி அனைத்து கலைத்துறைக்கும் பிரவேசிப்பவர்கள் தாங்கள் கற்பதை முறையாகக் கற்ற வேண்டும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை அவர்கள் விரும்பும் துறைகளை நோக்கிப் பயணிக்க இடமளிக்க வேண்டும். அன்றி, இதைத்தான் நீ கற்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. எந்தத் துறையாயினும் ஓர் இலக்கு வேண்டும். அதற்கான வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். ஒரே இரவில் நட்சத்திரமாக மின்னுவதென்பது கலைக்கு சிறந்ததல்ல. அதனால் எமது எதிர்கால சந்ததியானது, சிறந்த ஆசிரியரைத் தெரிந்தெடுத்து முறையாகக் கற்று கலையை விருத்தி செய்ய வேண்டும்.

நேர்காணல் : எம்.தாக்ஷாயிணி
படங்கள் : இந்திர ரத்தின பாலசூரிய


You May Also Like

  Comments - 0

  • siva Thursday, 17 March 2011 02:40 AM

    மிகவும் சந்தோசம்

    Reply : 0       0

    Anuradha Weerawansa Friday, 25 March 2011 05:42 AM

    அக்கா நல்ல சூப்பர். அக்காவின் நடனம் Youtube என்ற இணையத்தளத்தில் ஏற்றி விட்டால், இன்னும் நன்றாக இருக்கும். ஒரே ஒரு கேள்வியை நீங்கள் கேட்கவில்லை - armed forces முன் ஆடும் போது அவர்கள் "இது என்னடா ஆட்டம்" என்று சிரித்தார்ககளா அல்லது "இது அல்லவா கலை" என்று கை தட்டினார்களா?

    எதற்கும் கனடா தேசத்தின் டொரோண்டோ மாநகரில் ஆடி பழந்தமிழ் மக்களின் பாராட்ற்றை பெற்ற பின் தான் இவர் உயர முடியும். இல்லாவிட்டால் எல்லாரும் சும்மா "anE harima lassanai" என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.

    Reply : 0       0

    illankai Saturday, 26 March 2011 02:33 AM

    மேடம் சூப்பரா பேசுறாங்க , ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்
    பாராட்டுகள்.

    Reply : 0       0

    Rahm Tuesday, 31 May 2011 09:58 PM

    இது வல்லவோ கலை, இதனை ரசிக்காமல் எப்படி இருப்பது. கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருகின்ற தாரகையே உங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் கலையும் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதற்கு வாழ்த்துகிறேன். உங்கள் நாட்டியங்களை Youtube இல் பதிங்களேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X