2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

'அரச விருதுகளில் பக்கச்சார்பும் முதுகுசொறிதலுமே காணப்படுகின்றது' : கவிஞர் அஸ்மின்

Kogilavani   / 2011 நவம்பர் 18 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

'அரசாங்கத்தினால் வழங்கப்படும் விருதுகளில் பக்கச்சார்பும் முதுகுசொறிதலுமே காணப்படுகின்றது. சரியான ஆற்றல்களுக்கு களம் இங்கு வழங்கப்படுவதில்லை. அதனால் புறந்தள்ளப்படுவது சிறந்த படைப்பாளிகளே. விருதுகளால் எதையும் சாதித்துவிட முடியாது. போட்டி நிகழ்வொன்றில் 3ஆம் இடம்பெற்ற மகாகவி பாரதியின் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' கவிதை காலத்தை வெல்லவில்லையா? அப்போட்டியில் முதலாமிடம் பெற்றவர் எங்கே..? அவர்தம் கவிதைதான் எங்கே? படைப்பாளியின் படைப்பு எத்தனை நெஞ்சங்களின் மனதில் நிலைக்கின்றதோ அதுதான் அவனுக்கான சரியான அங்கீகாரம். ஒரு வாசகனின் வாழ்த்துக்கு முன்னால் நோபல் பரிசும் தலைகுனிந்து நிற்கும்' என்கிறார் கவிஞரும் பாடலாசிரியருமான கவிஞர் பொத்துவில் அஸ்மின்.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் கிராமத்தை தமது பிறப்பிடமாகக் கொண்டதால் அதனை அவரின் பெயரின் அடையாக இணைத்துக்கொண்டுள்ளார் கவிஞர் அஸ்மின். ஹைகூ, நவீனம், பின்நவீனம் என்ற பாணியில் தமக்கான கவிதை தளத்தை தேர்ந்தெடுத்துச் செல்லும் இளையோருக்கு மத்தியில் மரபை தமக்கே உரிய பாணியாக தேர்ந்தெடுத்து அதில் கவிதை வடித்து, கவிதை படித்து மூத்தோர், இளையோர் என பலரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்டிருக்கிறார் பாடலாசிரியர் அஸ்மின்.

அண்மையில் வெளிவந்த 'எங்கோ பிறந்தவளே' பாடல் இவரது மற்றுமொரு திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது. இப்பாடல் தனது பல அரிய சந்தர்ப்பங்களுக்கு அச்சாணியாய் அமைந்தது என மார்தட்டிகொள்கின்றார் கவிஞர்.

'விடைதேடும் வினாக்கள்' (2002), 'விடியலின் ராகங்கள்' (2003)  என்பன இவரின் கவியாற்றலை வெளிப்படுத்தி நிற்கும் இரு கவிதை தொகுப்புகள். தேசிய மட்ட கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு ஜனாதிபதி விருது (2001), பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் (2003), சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010, 2011), அகஸ்தியர் விருது (2011) என 10 இற்கும் மேற்பட்ட விருதுகளை இவர் தனது தனித்திறமையினூடாக பெற்றுக்கொண்டுள்ளார்.

இதைவிட இவர் தனது இலக்கிய பணிக்காக 'கலைத்தீபம்', 'கலைமுத்து' ஆகிய பட்டங்களையும் தனதாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்மிரரின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் இவரை நேர்கண்ட போது, அவர் பகிர்ந்துகொண்டவை...

கேள்வி: இன்னும் அதிகமானவர்களின் மனதில் நீங்கள் இடம்பிடிப்பதற்கு 'எங்கோ பிறந்தவளே' பாடல் ஓர் அச்சாணியாய் அமைந்திருந்தது. அப்பாடல் உருவான விதம் குறித்துக் கூற முடியுமா?

பதில்: எனக்கு நல்லதொரு அடையாளத்தை தந்துகொண்டிருக்கும் பாடலென்றால் அது எங்கோ பிறந்தவளே பாடல்தான். அப்பாடல் உருவான விதமே மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தது. இப்பாடல் எழுதும்போது இத்தகைய வரவேற்பை அது எனக்குப் பெற்றுத்தருமென்று நினைக்கவில்லை. இந்தப்பாடல் சர்வதேசம் வரை எனக்கு நல்லதொரு அடையாளத்தை பெற்றுத்தந்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட 'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியில் தேர்வாகி இந்தியாவிற்குச் செல்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. 16 ராகங்களுக்கு ஏற்ப 16 குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தோம். எமது குழுவின் பெயர் 'ஹம்ஸத்வனி' எமது குழுவில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், பாடகி என நான்குபேர் அடங்கி இருந்தோம். எமக்கு தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்களை, இசைதுறை சார்ந்த கலைஞர்களை நேரிலே சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

அந்தவகையில் எமது குழுவுக்கு இயக்குநர் ஏ.வேங்கடேஷ் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர் எமக்கு பாடல் எழுதவேண்டிய கதைச்சூழலை மிகவும் அழகாக விபரித்தார். அவர் சொன்ன கதையை உள்வாங்கிய இரண்டு மணிநேரத்துக்குள் பாடல் முழுவதையும் நான் எழுதிவிட்டேன். எமது 16 பாடலாசிரியர்களுக்குள்ளும் நான் முதலில் பாடல் எழுதியதை எண்ணி மகிழ்வுற்றேன். கவிஞர் பா.விஜய் அவர்களை நாங்கள் அவரது இல்லத்தில் சந்தித்தோம். அவரிடம் நான் எழுதிய 'எங்கோ பிறந்தவளே' பாடலை பாடியே காட்டினேன். பாடல் வரிகளை வெகுவாக பாராட்டிய அவர் என்னுடைய சக பாடலாசிரியர் ஒருவரின் 'ஒரு பாடல் எவ்வாறு அமையவேண்டும்?' என்ற கேள்விக்கு எங்கோ பிறந்தவளே பாடலை உதாரணமாக கூறினார். இருப்பினும் அப்பாடல் வரிகளில் இடம்பெற்ற 'டாவின்ஸி பார்வையாலே' என்ற வரியை மட்டும் மாற்றிவிட கூறினார். வளர்ந்து வரும் பாடலாசிரியர் என்ற வகையில் ஆங்கில சொல்லை கலக்காமல் தமிழிலே அந்த பாடல் வரியையும் எழுதக் கூறினார்.

பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் கணவன் மனைவிக்கிடையிலான உறவே இருக்கவேண்டும். 'செம்புலப்பெயல்நீர் போல' என்று சங்கப்பாடல் சொல்வதற்கு இணங்க அது அமைதல் வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தாழ்வு மனப்பான்மையை தூக்கியெறிந்து ஒரு புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். ஆனால் எனது குழுவிற்கு கிடைத்த இசையமைப்பாளர் அவ்வாறு இருப்பதற்கு தவறிவிட்டார். எமது குழுவின் இசையமைப்பாளர் பாடல்வரிகள் நன்றாக அமையவில்லையென்று என்னோடு வாதிட்டார். நான் எவ்வளவு எடுத்துக்கூறியும் தனது இசையில் பாடலை எழுதவேண்டும் என்றே அடம்பிடித்தார். என்னுடைய பாடல்களை அன்று அவர் இதயத்தால் படம்பிடித்திருந்தால் இன்று முகவரியில்லாது போயிருக்க மாட்டார். அதன்பின் இந்தப்பாடலை விட்டு வேறு ஒரு பாடலை எழுதவேண்டியேற்பட்டது.

ஆனால் அந்த பாடல் சிறப்பாக வரவில்லை. இதற்காக நான் மிகவும் மனம் வருத்தப்பட்டேன். 16 பாடலாசிரியர்கள் மத்தியில் தனித்துவமாக ரசிகர்களாலும் இனங்காணப்பட்ட நான் சிறப்பாக பாடல் எழுதுவேன் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டேன். ஆனால் அது பொய்த்துப்போனது.

கேள்வி:- இந்தப் பாடலினூடாக நீங்கள் பெற்றுக்கொண்ட வரவேற்பு குறித்துக் கூற முடியுமா?

பதில்: முகப்புத்தகத்திலும் 'யூடியூப்' இணையத்தளத்திலும் எனது பாடலை முதலில் பதிவேற்றினேன். புலம்பெயர்ந்தவர்கள் பலர் எனது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக்கொண்டு இந்தப்பாடல் மிகவும் அருமையாக இருப்பதாக பாராட்டினார்கள். அவர்களது வாழ்த்துக்களை கேட்டு நான் மெய் சிலிர்த்துப்போனேன். இன்னும்கூட இப்பாடலை புதிதாக கேட்கும் நண்பர்கள் பலர் தொலைப்பேசி மற்றும்  மின்னஞ்சலினூடகவும் என்னை தொடர்புகொண்ட வண்ணம் இருக்கின்றனர். இதைவிட இப்பாடலானது பல அரிய வாய்ப்புக்களை எனக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. இயக்குநர் சு.ப.தமிழ்வாணன் தனது 'கருப்புச்சாமி உத்தரவு' படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பை எனக்கு தந்துள்ளார். இதைவிட 'பனைமரக்காடு' படத்தில் ஒரு பாடலை நான் எழுதியுள்ளேன்.

'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியில் இசை இளவரசனாக முடிசூடிக்கொண்ட இசையமைப்பாளர் வவுனியாவை சேர்ந்த கந்தப்பு ஜெயந்தன் - இறந்து கிடந்த என்னுடைய பாடல்வரிகளுக்கு   இசையமைத்து தன்னுடைய குரல்மூலம் மீண்டும் உயிர்த்தெழ செய்திருந்தார். அவரை இந்த இடத்தில் நினைவு கூர்ந்தேயாகவேண்டும்.

என்னைப் பொறுத்தவரை எனது அனைத்து வாய்ப்புகளுக்குமான அறிமுக அட்டை இப்பாடல் என்றே கூறுவேன்.

கேள்வி:- இந்த பாடலுக்கு ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது?

ஊடகங்களின் உள்ளங்கையில்தான் இன்றைய உலகபந்து உருண்டு கொண்டிருக்கிறது. பத்து இருகைகளால் செய்ய முடியாததை பத்திரிகையால் செய்ய முடியும். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, இணையம் போன்ற ஊடகங்கள் எமது கலைஞர்களின் படைப்பாளிகளின் திறமைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்ற வள்ளங்கள். இங்கு வள்ளங்கள் நிறையவே இருக்கின்றன. நல்ல உள்ளங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. கடையில் இருக்கும் கடதாசி பூக்களுக்கு காசு கொடுக்கும் எம் ஊடகங்கள் முற்றத்தில் இருக்கும் மல்லிகைப் பூக்களுக்கு முகம் கூட கொடுப்பதில்லை. உள் நாட்டின் அசல்களை காட்டிலும் வெளிநாட்டின் நகல்களுக்குத்தான் அதிகம் கிராக்கி இங்கு.

ஊடகங்கள் உண்மையாக, நேர்மையாக, நீதியாக, நடக்குமானால் இலங்கையின் இசைத்துறை எப்போதோ உச்சத்தை எட்டியிருக்கும். எமது கலைஞர்கள் பலருக்கும் வாய்ப்புக்கள் பல கிட்டியிருக்கும். நமது சகோதர மொழி கலைஞர்கள் இசைத்துறையிலும் சினிமா துறையிலும் வளர்ச்சிப்பாதையை காண்பதற்கு அவர்களது ஊடகங்கள்தான் காரணம். அவர்கள் அவர்களுக்கேயுரிய தனித்துவ பாதையில் செல்கின்றனர்.

சகோதர மொழி பாடகர் ஒருவர் இசை இறுவட்டுக்களை வெளியிட்டால் அது அனைத்து சகோதர ஊடகங்களிலும் வெளியிடப்படுகின்றன. ஆனால் நமது தமிழ் மொழி ஊடகங்கள் அவ்வாறு இல்லை. நமது ஊடகங்கள் நமக்கேயுரிய தனித்துவத்தை காட்ட முனைவதில்லை. ஆனால் எமது துரதிஷ்டம் ஒரு ஊடகத்தின் மூலம் முதலில் வெளியாகும் பாடலை இன்னொரு ஊடகம் வெளியிட தயக்கம் காட்டுகின்றன. தென்னிந்திய படைப்புக்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை எமது படைப்புக்களுக்கும் கொடுக்க முனைவதில்லை. தென்னிந்தியாவில் ஒரு திரைப்படம் வெளியாக போகின்றதென்றால் உடனடியாக அந்தப் படத்தில் இடம்பிடித்த பாடல்களை எங்கிருந்தாவது பதிவிறக்கம் செய்து முந்திக்கொண்டு கொடுக்க முன் வருகின்றார்கள். ஆனால் இலங்கையில் உருவாக்கப்படும் எந்தப் படைப்பையும் இவ்வாறு முந்திக்கொண்டு கொடுக்க முன்வருகின்றார்களா? நாம் நமக்கான தனித்துவத்தை காட்ட முனையும்போதே நமது திறமைசாலிகள் வெளிக்கொணரப்படுவார்கள், எமது இசைத்துறை வளர்ச்சியடையும். எமக்குள் ஓர் இளையராஜாவையும் ஏ.ஆர்.றஹ்மானையும் எதிர்பார்ப்பவர்கள் அதற்கான சரியான களத்தை முதலில் வழங்க முன்வரவேண்டும்.

ஊடகமொன்று 'எங்கோ பிறந்தவள்..' பாடலை பாடிய கந்தப்பூ ஜெயந்தனை நேர்காணல் செய்திருந்தது. அந்நிகழ்ச்சியின்போது இந்தப்பாடலை முன்னோட்டமாக ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பாடலை நிகழ்ச்சியின்போது ஒலிபரப்புவார்கள் என நான் நினைத்து எனது நண்பர்களுக்கும் கூறினேன். அந்நிகழ்ச்சியில் சுமார் 10 பாடல்களுக்கு மேல் ஒலிபரப்பியிருந்தார்கள். இடைக்கிடையில் இரண்டு தென்னிந்திய திரைப்பட பாடல்களையும் ஒலிபரப்பியிருந்தார்கள். ஆனால் எங்கோ பிறந்தவள் பாடலை ஒலிபரப்பவேயில்லை. இது என் மனதை மிகவும் புண்படுத்தியது. நான் நிகழ்ச்சி முடிவில் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டேன், அவர்கள் பாடலை ஒலிபரப்ப மறந்துவிட்டோமென இலகுவாக கூறி முடித்துவிட்டார்கள்.

இதைவிட இன்னுமொரு ஊடகத்திடம் இந்தப்பாடலை வழங்கியபோது அந்தப்பாடல் மிகவும் சோகமாக இருப்பதாகவும், குத்துப்பாடல்களை தரும்படியும் கேட்டார்கள். இந்தவேளையில் எனது பாடலுக்கு களம்கொடுத்த வசந்தம், பிறை, வெற்றி, தென்றல், லண்டன் ஐ.பிஸி, இணைய வானொலிகள் அனைத்தையும் நினைவுகூற விரும்புகின்றேன்.

எமது நாட்டின் பாடல்களுக்கு தனியான நிகழ்ச்சியை ஒழுங்குப்படுத்த தேவையில்லை. வழமையான நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பும் பாடல்களுடன் பாடலாக இதனையும் ஒலிபரப்பலாம். அப்போது அது ரசிகர்கள் மத்தியில் சென்றடையும்.
ஊடகங்கள் இப்போது தமக்கென பிரத்தியேகமான இசைக் குழுக்களை கொண்டுள்ளன. எந்த நிகழ்வுக்கும் அந்தக் குழுக்களே பங்குபற்றுகின்றனர். இதனால் மற்றக் கலைஞர்களுக்கான வாய்ப்புகள் கை நழுவி போய்விடுகின்றன. இதனால்தான் இலங்கையின் தமிழ் இசைத்துறை ஓடும் இடத்திலேயே ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த வரட்டு நிலையிலிருந்து வளர்ச்சி நிலைக்கு செல்ல எமது ஊடகங்கள் முன்வரவேண்டும். எமது நிலத்தில் நாம் விதைகளை தூவாமல் அடுத்தவர் பழத்தில் பல்லைப்பதிப்பதை நாங்கள் நிறுத்தவேண்டும்.

வெளிச்சத்துக்கு மட்டும் விளக்கு பிடிக்க முனையும் ஊடகங்கள் - காய்த்தல், உவத்தல், குத்தல், வெட்டல் இன்றி 'இருட்டின்' மீது தமது வெளிச்சத்தை பாய்ச்ச முயன்றால்தான் வளர்ந்துவரும் இளைய தலைமுறை கலைஞர்களுக்கு விமோசனம் கிட்டும். அவர்கள் குரல்களும் எட்டுத்திக்கும் எட்டும். இல்லாவிட்டால் எமது நிலத்தில் வெங்காயம் நட்டால் வெடிகுண்டுதான் முளைக்கும்.

கேள்வி: மரபுக் கவிஞராக அறியப்பட்ட நீங்கள் நவீன கவிதைகளையும் முயன்று பார்க்க வேண்டுமென்று எப்போதேனும் எண்ணிய சந்தர்ப்பம் உண்டா?

பதில்: என்னைப் பொறுத்தவரை மரபுக்கவிதையென்பது அழகிய பொட்டு வைத்து பூச் செருகி சேலையுடுத்திய கலாசாரப் பெண். புதுக்கவிதை என்பது சுடிதார் அணிந்த பெண். நவீனம், நவீனத்துவம் என்பது ஆடைகளின்றிய அம்மண உலகம். மறைக்கும் பொருளுக்கே மதிப்பதிகம் என்பார்கள். எனவே அம்மணமாய் இருப்பதற்கு சம்மதமில்லை.

கேள்வி: இப்படி கூறுவதற்கு காரணமென்ன?

எனக்கு ஒன்றோடு ஒன்பதாகிப்போவதில் உடன்பாடில்லை. அதனால்தான் புதுமையென்னும் கவசத்தை அணிந்துகொண்டு மரபென்னும் போர்வாளை கையிலெடுத்தேன். நான் மரபோடு கைகுலுக்கிக்கொள்வதால்தான் இன்று இருக்கின்ற இளையதலைமுறைக் கவிஞர்களில் இருந்து என்னால் வேறுபட்டு நிற்கமுடிகின்றது.

அரசியல்வாதிகளில் இலக்கியவாதிகள் இருந்திருக்கின்றார்கள், இருக்கின்றார்கள். ஆனால் இப்போது இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளாக மாறிவிட்டார்கள்.

இலக்கிய ரீதியில் பல குழுக்கள் உருவாகியுள்ளன. அக்குழுக்களுக்கு அவர்களது பாணி முக்கியப்படுகின்றது. புதிதுபுதிதாக கவிதைகளை கண்டுபிடிக்கின்றார்கள். தாங்கள் பிதாமகன் என தம்பட்டமடிக்கின்றார்கள். இத்தகைய இலக்கிய விஞ்ஞானிகளை கண்டால் வாசகர்கள் ஓடி ஒழிகின்றார்கள். இலட்சணம் என்ற சொல்லிலிருந்து இலக்கணம் என்ற சொல்லும், இலட்சியம் என்ற சொல்லிலிருந்து இலக்கியம் என்ற சொல்லும் தோன்றியது. எனவே இலட்சியம் இல்லாத எந்தவொரு படைப்பும் நீடித்து நிற்கப்போவதில்லை.

கவிதையென்பது காலத்தின் கண்ணாடி. அதில் வாசகன் தனது முகத்தை பார்க்கிறான். அது சமூகத்திற்கு போய் சேரவேண்டும். அதனால் படிப்பவர்கள் பயன்பெறவேண்டும். இன்று நவீனம், நவீனத்துவம் என்ற பெயரில் கலாசாரத்தை சீரழிக்கும் கவிதைகள் எழுதப்படுகின்றன. அவை குறித்து உங்களிடம் கூறுவதையே அவமானமாக கருதுகிறேன்.

உதாரணத்திற்கு ஓரு பெண் கவிஞரின் 'முலைகள்' என்ற கவிதை தொகுதியை எடுத்துக் கொள்ளலாம். அதிகமான பெண்ணிய கவிஞர்கள் தமது கவிதைகளில் பாலியல் சொற்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறான பாலியல் சொற்களை கவிதைகளில் கூறுவதனூடாக அவர்கள் பிரச்சினையை கூற முனையவில்லை, பிரபல்யம் அடையவே முனைகின்றனர்.

சமூகத்தில் சர்ச்சைக்குரிய விடயங்களை பேசும் ஒருவர் அதனூடாக இலகுவாக புகழடைந்துவிடுவார். பெண்ணியம் குறித்து பேசும் போது ஆபாசக் கருத்துக்களை கூற வேண்டியதில்லை.

என்னைப் பொறுத்தவரை கவிதை என்று வரும் போது அதற்குள் அருவருப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபாச வார்த்தைகளை உட்புகுத்த கூடாது. ஆனால் இலங்கையில் ஒருசிலர் அதனை செவ்வனே செய்துகொண்டு செல்கின்றனர். இதனூடாக அவர்கள் பிரபல்யம் அடைய எண்ணுகின்றார்களே தவிர அதனூடாக அவர்கள் கொடுக்கும் செய்தி எதுவும் இல்லை. பின்நவீனத்தும் என்ற பெயரில் வெளிவரும் இத்தகைய ஆபாச கவிதை புத்தகங்களையும் கவிதைகளையும் முதலில் தடை செய்ய வேண்டும்.

என்னைப்பொறுத்தவரை நான் எல்லாவற்றையும் வாசிப்பேன். எல்லா கவிஞர்களையும் வாசிப்பேன். அதேபோல் திட்டமிட்டு கவிதைகளை எழுதியதில்லை. எனக்குள் கவிதை முளைத்து என்னை எழுது என்று அழைக்கும். அந்த கவிதை வாசகனை சென்றடையும்போது அந்த கவிதை மரபுக் கவிதையா? நவீன கவிதையா? என வாசகர்களே அதற்கு அடையாளமிடுகின்றார்கள். என்னைப் பொறுத்தவரை மரபுக் கவிதை, நவீன கவிதை, பின்நவீனத்துவ கவிதை என தேடிப்போகாமல் கவிதைகளில் கவிதையை தேடவேண்டும்.

கேள்வி: மரபு மருவி வரும் இக்காலத்தில் இன்னும் மரபுக் கவிதையே எழுத வேண்டுமென்று எண்ணுகின்றீர்கள். ஆனாலும் அந்த மரபுக்கவிதை தற்கால சந்ததியினரை முழுமையாக போய்ச் சேரும் என்று நினைக்கின்றீர்களா?

பதில்:- முதலில் மரபு மருவி வருகின்றது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். மரபு என்பது அடித்தளம். இலக்கியத்தின் எத்தளத்திற்கு செல்வதாயினும் இத்தளத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும். அகரம் அறியாதவன் உகரத்தை உச்சரிக்கவே கூடாது.

எட்டயபுரத்து கவிஞன் தொடக்கம் எங்கள் தேசத்தின் மூத்தகவிஞர்கள் வரை மரபு தெரியாமல் புதுமைக்குள் புகுந்தவர்கள் அல்லர். அவர்கள் தம்முன்னோர்களைக் கற்று முத்துக் குளித்தவர்கள். அதனால்தான் அவர்களால் முத்தமிழிலும் பிரவாகிக்க முடிந்தது. இற்றைவரை முழுநிலவாக பிரகாசிக்க முடிந்தது. வைரமுத்து எழுதிய 'காதலித்துப்பார்' புதுக்கவிதையை தெரியாத இளைஞர்கள் இல்லையென்றே சொல்லலாம். அதற்காக அவர் புதுக்கவிஞராக சிலர் நினைக்கலாம். ஆனால் அவர் யாப்பிலக்கணத்தை துறைபோக கற்ற மரபுக் கவிஞர். அதிலும் பல புதுமைகளை புகுத்தியவர் என்று எத்தனை இளைஞர்களுக்கு தெரியும்? வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் பழந்தமிழ் இலக்கியங்களை தேடி படிக்க வேண்டும். அவற்றின் தன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். வார்த்தைகள் நடந்தால் வசனம் நடனமாடினால் கவிதை. எனவே புதுக்கவிதையில் சொல்கின்ற படிமம், குறியீடு என்பவற்றை ஓசை நயத்தோடு நான் எனது மரபுக் கவிதையில் கொடுக்கின்றேன்.

கேள்வி: நவீனம், பின்நவீனத்துவம் என்ற பாணியிலிருந்து இலக்கியம் படைப்பவர்கள் காலச்சுனாமியில் மூழ்கிப்போய்விடுவதாக கூறியிருக்கின்றீர்கள்? இவ்வாறான கருத்துக்கள் உங்கள் மனதில் எழுவதற்கு என்ன காரணம்?

பதில்: நவீனம், பின்நவீனம் இன்று நேற்று உருவானதல்ல. அது நாகரீக மனிதன் உருவாகிய காலம்தொட்டு உருவாகிவிட்டது. துருப்பிடித்ததை தூசுதட்டியெடுத்து அதை தாம் முதலில் கண்டுபிடித்ததாக பலரும் உரிமை கோருகின்றனர். வேட்டையாடி திரிந்த மனிதன் என்று வெட்கப்பட ஆரம்பித்தானோ, என்று ஆடை உடுத்து அழகு பார்த்தானோ அன்று அவன் நவீனமாகிவிட்டான்.

சங்க காலத்தில் தோன்றிய கவிதை அக்காலத்தில் நவீன கவிதையாக பேசப்பட்டது. அது தற்போதைய யுகத்தில் செய்யுளாக, மரபுக் கவிதையாக பேசப்படுகின்றது. தற்காலத்தில் நவீன கவிதையாக பேசப்படும் கவிதை இன்னும் ஒரு யுகம்போக அது மரபுக் கவிதையாக அக்கால சந்ததியினரால் பேசப்படும். இன்றைய நவீனம் நாளைய மரபாக தெரியலாம். எனவே, படைப்பு நிலைப்பதென்பது படைப்பாளனின் கையில் இருக்கிறது. படைப்பாளி படைப்புக்கான வார்த்தையை வாழ்க்கையிலிருந்து பெறவேண்டும். ஒரு படைப்பை வாசிக்கும் வாசகன் அந்த படைப்பு தன் வாழ்க்கையுடன் ஒத்துப்போவதாக உணரும்போதே ஒரு படைப்பு வெற்றிபெறுகின்றது. ஒன்றுக்கும் உதவாத வெறும் வெற்று கற்பனைகள் அழகியலாக இருக்கும். காலப்போக்கில் அது அழுகியங்கு கிடக்கும்.

கேள்வி: உங்களது மலேசிய பயணம் குறித்து கூறமுடியுமா?

பதில்: 6ஆவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு அண்மையில் மலேசியாவில் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. அதில் இலங்கையிலிருந்து 200இற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். 5 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் நிறைவுநாள் நிகழ்வாக மாபெரும் கவியரங்கு கவிக்கோ அப்துல்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தியா என பல நாட்டிலிருந்து வருகை தந்த 10 கவிஞர்கள் அக்கவியரங்கில் கவிதை பாடினார்கள். அவர்கள் அனைவருமே 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள்.

அவர்களில் மிகவும் இளையவன் நான் மட்டுமே. எல்லோரும் கவிதை பாடி முடிய இறுதியாக நான் கவிதை பாடினேன்.
தூங்கிக்கொண்டிருந்த சிலரையும் எழுப்பிவிட்டேன். கவிதை பாடி முடியும் போது கரகோச வெள்ளம் கரைபுரண்டெழுந்தது. அப்துல்ரஹ்மான் என் தோள்களை தட்டிக்கொடுத்து அருமையாக இருந்ததாக கூறினார். இன்னும் பல கவிஞர்கள், பேராசிரியர்கள் வந்து கை கொடுத்து சிறப்பாக இருந்தது என கூறி என்னை பாராட்டினார்கள். இந்தியாவிலிருந்து வந்த ஒரு பத்திரிகை ஆசிரியர் அந்த மேடையிலே அந்த கவிதையை வாங்கிவிட்டு இதை தனது நாட்டின் சஞ்சிகையொன்றில் பிரசுரிப்பதாக வாங்கிச்சென்றார்.

மலேசியாவின் தேசிய தமிழ் பத்திரிகை உட்பட இன்னும் பல பத்திரிகைகள் எனது கவிபாடலை பற்றி சிலாகித்து எழுதியிருந்தார்கள். அதைவிட நீதியமைச்சர் றவூப் ஹக்கீம் இலங்கைக்கு பெருமை தேடி தந்துவிட்டதாக என்னை கைகுலுக்கி பாராட்டினார். அல்ஹம்துலில்லாஹ்!

கேள்வி: மலேசியப் பயணத்திலும் கூட அதிகமான திறமைமிக்கவர்கள் தட்டப்பட்டு அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் உள்வாங்கப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. இதுக் குறித்து நீங்கள் கூறவிரும்புவது?

பதில்: எந்தவொரு நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் அதற்கு இவ்வாறான விமர்சனங்கள் எழுப்பப்படுவது பொதுவான ஒன்று. இந்த மலேசிய மாநாட்டு நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் இலங்கையைச் சேர்ந்த இரு கவிஞர்களுக்கு வாய்ப்புகிடைத்தது. இந்த கவியரங்கில் பங்குகொள்வதற்காக நாங்கள் போட்டியின் அடிப்படையிலே தெரிவுசெய்யப்பட்டோம்.

இக்கவியரங்கிற்கான தலைப்புகளாக பொறுமை, எளிமை என்ற இரு தலைப்புகள் வழங்கப்பட்டன. நான் நபிகளாரின் பொறுமை பற்றியே எழுதியிருந்தேன். இந்தப் போட்டி குறித்த விளம்பரத்தை கூட பல பத்திரிகைகளில் பிரசுரித்திருந்தார்கள். அதன்மூலமாகவே நான் இதில் போட்டியிட்டேன். விண்ணப்பதாரர்களின் பெயர்களைக்கூட டிபெக்ஸ் செய்துவிட்டே நடுவர்கள் குழுவிற்கு அனுப்பியிருந்தார்கள் என்பது பின்னர் எனக்கு தெரியவந்தது. அப்போட்டியில் போட்டியிட்டவர்களில் நானும், கவிஞர் நஜுமுல் ஹுசைனும் தெரிவு செய்யப்பட்டோம். அதன்பின் என்னை அழைத்து நான் எழுதிய கவிதையை பாடிக்காட்ட சொன்னார்கள். நான் எழுதிய கவிதை சிறப்பாக இருப்பதாகவும் பாடும் விதமும் அழகாக இருப்பதாகவும் கூறி என்னை தெரிவு செய்தார்கள்.

நான் திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படாமல் பின்கதவால் சென்றிருந்தால் நான் பாடிய கவிதைக்காக இத்தனை பாராட்டுதல்களை பெற்றிருக்க மாட்டேன். கவிக்கோ அப்துல்ரஹ்மான் என் தோள்களை தட்டிக்கொடுத்திருக்க மாட்டார். மலேசிய ஆசிரியர்கள் எனது கவிதையை புகழ்ந்து தமது பத்திரிகைகளில் எழுதியிருக்க மாட்டார்கள். என்னை பொறுத்தவரை கவியரங்கத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் திறமையின் அடிப்படையிலே தெரிவு செய்யப்பட்டார்கள்.

கேள்வி:- விருதுகள் வழங்கப்படும் நிகழ்வுகளில் கூட அரசியல் கலந்துபோயுள்ளதே. இதனால் திறமையானவர்கள் தட்டப்பட்டுப் போகின்றார்கள் இதுக் குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்:- இதற்கான எனது பதிலை நான் எனது 'விருதுகள் பெறும் எருதுகள்' என்ற கவிதையில் 2007ஆம் ஆண்டே கூறிவிட்டேன். அதனை வாசித்தால் இதற்கு நான் கூறபோகும் பதில்கள் குறித்து விளங்கிக்கொள்ள முடியும்.
இதைவிட ஒன்றை குறிப்பிடவேண்டும். அரசாங்கத்தினால் வழங்கப்படும் விருதுகளில் பக்கச்சார்பும் முதுகுசொறிதலுமே காணப்படுகின்றது. சரியான ஆற்றல்களுக்கு களம் இங்கு வழங்கப்படுவதில்லை. அதனால் புறந்தள்ளப்படுவது சிறந்த படைப்பாளிகளே. விருதுகளால் எதையும் சாதித்துவிட முடியாது. போட்டி நிகழ்வொன்றில் 3ஆம் இடம்பெற்ற மகாகவி பாரதியின் 'செந்தமிழ் நாடடெனும் போதினிலே' கவிதை காலத்தை வெல்லவில்லையா? அப்போட்டியில் முதலாமிடம் பெற்றவர் எங்கே..? அவர்தம் கவிதைதான் எங்கே? படைப்பாளியின் படைப்பு எத்தனை நெஞ்சங்களின் மனதில் நிலைக்கின்றதோ அதுதான் அவனுக்கான சரியான அங்கீகாரம். ஒரு வாசகனின் வாழ்த்துக்கு முன்னால் நோபல் பரிசும் தலைகுனிந்து நிற்கும்.

கேள்வி:- கவிஞர், பாடலாசிரியரென படிப்படியாக உங்களது வளர்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. உங்களது அடுத்த இலக்கு என்ன?

பதில்:- இலங்கையில் மட்டுமல்ல தமிழ்பேசும் உலகமெங்கும் போற்றப்படும் தலைசிறந்த கவிஞராக, பாடலாசிரியராக மிளிரவேண்டுமென்பதே எனது அடுத்த இலக்கு. நான் என்னை என்னுடைய வயதையொத்த சக படைப்பாளிகளோடு ஒப்பிட்டுப்பார்த்து கவிதைகளை எழுதுவதில்லை. காலத்தை வென்று நிற்கும், பேசப்படுகின்ற தலைச்சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தே கவிதைகளை எழுதுவேன். அப்போதே எனது திறமையையும் சரியாக வடிவமைத்துக்கொள்ள முடியும். முதலில் நானே எனது கவிதைக்கு நல்ல வாசகனாகவும் விமர்சகனாகவும் இருக்கின்றேன். அப்படி இருக்கும் போதே அந்தக் கவிதை நீண்டு நிலைத்திருக்கும்.

நேர்காணல்:- க.கோகிலவாணி
படங்கள்:-வருண வன்னியாராச்சி


You May Also Like

  Comments - 0

  • ananthika Sunday, 08 January 2012 04:56 AM

    திறமையான கவிஞர் நீங்கள்.. ஆனால் அளவுக்கதிகமாக உங்களை நீங்களே சுயவிளம்பரம் செய்துகொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.... சும்மா ஒரு விருதை வாங்கிவிட்டு அதற்கு நீங்களே தேசிய விருது என்று பெயர் சூட்டிகொள்வது கண்டிக்கத்தக்கது. விருதுகளையும் சுயவிளம்பரங்களையும் பாராட்டுகளையும் விட்டு சிறந்த படைப்புகளில் மட்டுமே உங்கள் கருத்தை செலுத்தினால் இன்னும் உயர்வடைவீர்கள்.

    Reply : 0       0

    a.m.askar Tuesday, 22 November 2011 01:31 AM

    வாழ்த்துகள் மிக அருமை, உங்கள் பணி தொடரட்டும்

    Reply : 0       0

    கே.எஸ்.செண்பகவள்ளி Tuesday, 22 November 2011 11:57 AM

    வணக்கம்.
    நண்பர் அஸ்மினுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
    இன்னும் பல அற்புத படைப்புகளைப் படைத்து வெற்றியின் சிகரத்தை எட்டுவீர்கள் என்று நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.

    Reply : 0       0

    meenavan Tuesday, 22 November 2011 03:05 PM

    மாற்றின சகோதரர்கள் வழங்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உங்களது கவித்துவதிற்கும் உங்களது இலக்கிய பயண வெற்றிக்கான அங்கீகாரங்களாகும். வாழ்த்துகள். தமிழ் கூறும் நல்லுலகு மேலும் உங்களிடமிருந்து எதிர்பார்கிறது.

    Reply : 0       0

    Pottuvilan Wednesday, 23 November 2011 03:23 AM

    உங்களின் துணிச்சலான செவ்விக்கு பாராட்டுகள் பல. துணிந்து நில், நிமிர்ந்து செல்.

    Reply : 0       0

    mansoor a. cader Friday, 25 November 2011 01:14 PM

    தம்பி, உங்களுக்கு அழகிய வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் அற்புத வளத்தை அல்லாஹ் தந்துள்ளான். கவனமாக முன்னேறுங்கள். புகழ் ஊக்க மருந்து மட்டுமே. அது மயக்க மருந்தாகிப் போனோர் நல்ல கவிதைகளை எழுதி இருக்கவும் கூடும். ஆனால் நல்ல மனிதர் என்ற எல்லை கோட்டை தாண்டி உள்ளனர். சமகால வரலாற்றிலும் உதாரணங்களை காணலாம். எதிர் விழுமிய சிந்தனைப்போக்கு புகழுடன் சேர்ந்து வந்து உங்களை குறுக்கிட முயலும். கவனமாக நடந்து கொள்ளுங்கள். மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    khan Friday, 25 November 2011 11:47 PM

    My most Honored Poet Laureate Salams to you.
    I am regularly reading all your poems on the web site and I am greatly exhilarated to read them. I discussed about your poems with some of my friends in Yangon, Myanmar. There are a few Tamil magazines, all mostly Jothidam (astrological) but that's the only magazines published here. I wish to publish a few of your poems. I request your permission to publish them. If you agree, I will select some poems that I copied from your web site. Or you may send me a poem which you want we Myanmar Tamil community to read and appreciate.
    I am greatly honored to be your friend. It is also a proud fact that you are a fellow Muslim.
    Regards and vassalam
    SS Kh

    Reply : 0       0

    sureshharan Sunday, 04 December 2011 11:17 PM

    மலேசிய பயணம் தொடர்பான கேள்விக்கு நல்ல பதிலை கொடுத்திருந்தீர்கள்.

    Reply : 0       0

    kunaal Friday, 16 December 2011 06:55 AM

    என்ன ஆனாலும் பொத்துவிலான் பொத்துவிலான் தான் சிற்றூர் சிற்றூர்தான் பிறப்பை மாற்றேவே முடியாது

    Reply : 0       0

    kamalini Friday, 16 December 2011 09:58 PM

    பாரதி-எட்டயபுரம்
    பாரதி தாஸன்-பாண்டிச்சேரி
    கண்ணதாஸன்- சிறுகூடல்பட்டி
    வாலி-ஸ்ரீரங்கம்
    மு.கருணாநிதி-திருக்குவளை
    வைரமுத்து -வடுகபட்டி
    அறிவுமதி-சு.கீணணூர்
    இளையராஜா- பண்ணைப்புரம்
    சுரதா -பழையனூர்
    மேலே சொன்ன அனைவருமே சிற்றூர்களில் பிறந்து சிகரத்தை தொட்டவர்கள். உலகத்தின் ஆரம்பமே நகரமல்ல கிராமம்தான். எனவே மனநோயாளிகளின் கல்லெறிகளுக்கு கவனத்தில் கொள்ளவேண்டாம் கவிஞர் அஸ்மின். உங்களை எத்தனையோ தமிழ் உள்ளங்கள் வாழ்த்தியுள்ளன. அதுவே உங்களுக்கான அங்கீகாரம். உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Paranitharan Friday, 16 December 2011 10:10 PM

    அஸ்மின் பதில்கள் யாவும் நிறைவை தருகிறது. கலைஞர்கள் பகுதியில் பல கலைஞர்களின் நேர்காணல்கள் காணப்படுகின்றன. அதில் பீ.எச்.அப்துல்ஹமீது அவர்களின் நேர்காணலை மிக அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக உங்களது காணப்படுகின்றது. அத்தோடு அதிகமான ரசிகர்கள் உங்களை பாராட்டியுள்ளார்கள். மிகவும் சிறுவயதில் இதனை நீங்கள் சாதித்திருப்பது உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றியே. வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    ameerudeen from Pottuvil Monday, 21 November 2011 06:38 PM

    தம்பி அஸ்மின், வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    கலாநெஞ்சன் ஷாஜஹான் Monday, 09 January 2012 12:29 AM

    அஸ்மின் உங்கள் கவிதை ஆற்றலும் இலக்கிய ஆர்வமும் நிச்சயம் உங்களை சிகரங்களை தொடச் செய்யும். உங்களை நான் நேரில் சந்தித்த பின்னர் என்னைபோல் ஒருவரை சந்தித்ததாக நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Arivazhagan Venkatachalam Monday, 09 January 2012 04:46 PM

    அஸ்மின் அருமையான நேர்காணல். பதிலில் உங்கள் தனித்துவம் தெரிகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் எனக்கு உங்களது சுயவிளம்பரம்தான் இங்கு தேடிவரவைத்து. முதன் முதலாக இந்த இணையத்தளத்தை உங்கள் மூலமாகவே நான் பார்வையிட்டேன். முகநூலில் உங்களது திறமையை எண்ணி அடிக்கடி வியந்திருக்கிறேன்
    . பொதுவிடயங்களில் ஈடுபடுபவர்கள் கல்லெறிகளை தாங்க முன்வரவேண்டும். இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது. மிகவும் இளவயதில் பல விருதுகளை நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். பொதுவாக படைப்பாளிகள் கலைஞர்கள் விளம்பரத்தை விரும்பக்கூடியவர்கள். தங்களது படைப்புக்களை மற்றவர்கள் பார்த்து பாரட்டவேண்டும் என்று எதிர்பார்பார்கள். சுயபுராணம் பாடாத படைப்பாளிகள் கலைஞர்கள் எவருமில்லை என்றே சொல்லலாம். நான் சந்தித்த பல எழுத்தாளர்களிடம் இதனை கண்டிருக்கின்றேன். ஒருவனின் மகிழ்ச்சியை ஒருவன் தனது கவலையாக கருதுகின்ற காலகட்டத்தில் உங்களது நல்ல விடயங்களை யாரும் சுமக்கப்போவதில்லை. எனவே உங்களது திறமையை நீங்கள் அறிவிப்பது தவறில்லை என்பது எனது கருத்து.

    Reply : 0       0

    shanthini chandran Friday, 11 May 2012 03:50 PM

    நேர்மையான தாக்கமான .. உண்மையான ஒரு நேர் காணல்..
    நீங்கள் திறமையானவர் .. திறமைகளை மடமைகளால் மறைக்க முடியாது கவிஞரே. உங்களுக்கான சிகரம் நோக்கி நீங்கள் செல்வதை எந்த சில்லறைகளும் தடுக்க முடியாது.

    உங்கள் கவிதைகளை காலம் உலகமெல்லாம் கொண்டு சேர்க்கும்.நீங்கள் உச்சத்தில் நிற்கும்போது இவுலகம் இருகை
    கூப்பும்.
    உங்கள் பாடலும் கவிதைகளும் ஆற்றலும் தெரிவுகளும் ஆதங்கமும் உங்கள் குரல் போல் கம்பீரமானவை... உங்கள் உருவம் போல் அழகு நிறைந்தவை.

    நீங்கள் தொடும் உயரத்தை காலம் கணித்து வைத்திருக்கிறது.
    இறைவனின் ஆசீர்வாதம் கொண்டவர். நீங்கள் எழுதுங்கள். கடவுள் ஒருநாள் எழுந்து வந்து உங்கள் கவிதை தமிழை படிப்பான்.

    Reply : 0       0

    meera Saturday, 26 May 2012 01:20 PM

    வணக்கம் நண்பா அஸ்மின் நான்அண்மைகாலமாக உங்களுடைய பாடல்கள் கேட்டுகிடு வருக்றேன் உங்களுடைய வரிகள் வெகு பெறுமதி வாய்ந்தவை என்றுதான் சொல்லணும்.அத்தோடு உங்களுடைய துணிச்சலான இந்த பேட்டிக்கு எனது குடும்பம் சார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடைய பாடல்களில் மிகவும் ஒரு அருமையான மேட்டோடும் லண்டன் பாடகருடைய இனிமையான வளத்தோடும் இந்திய தரத்துக்கு நிகராக லண்டனில் தயாரிக்க பட்ட "எந்தன் காதலி" பாடலும் மிகவும் சிறப்பான பாடல் என்றுதான் கூறலாம். அதை எவளவு பேர் கேட்டார்கள் என்று எனக்கு தெரியாது....உங்களுடைய தென்னிந்திய பயணம் பற்றி அறிந்தேன் வாழ்த்துக்கள் அஸ்மின்.

    Reply : 0       0

    gowsika Saturday, 26 May 2012 02:05 PM

    உங்கள் கவிதைகளும் ஆற்றலும் கவித்துவமும் கம்பீரமாக இருப்பது போல்.. நேர்காணல் பதிலும் தனித்துவமாக தெரிகிறது........வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    sabeena Sunday, 27 May 2012 04:50 PM

    துணிச்சலான ஒரு பேட்டிகொடுதிருக்ரீங்க அஸ்மின்....2012 உங்களுடைய சிறந்ததும் தரமான பாடல் என்றால் எந்தன் காதலி பாடல்தான். முடிந்தால் அந்த பாடலின் முழு வரிகளை தரவும். அந்த பாடல் பற்றி ஏன் எதுவும் கூறவில்லை? நன்றி

    Reply : 0       0

    ரிஷ்வ்ன் Sunday, 03 June 2012 06:07 AM

    அஸ்வின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், தங்களுடன் சேர்ந்து கவி பாட ஆவலாக உள்ளேன்...
    - ரிஷ்வன்,

    Reply : 0       0

    Ravi Sunday, 14 April 2013 07:55 AM

    துள்ளுகிறமாடு பொதி சுமக்கும்...

    Reply : 0       0

    Fawas Addalachenai Sunday, 21 April 2013 04:34 PM

    ஓவரா சீன் காட்டாம முதல்ல நல்ல மனுசனா இருங்க..

    Reply : 0       0

    கே. மீனா Monday, 27 May 2013 03:39 PM

    பேட்டி குடுக்கறதற்கு முதல்ல நல்ல நடத்த வேணும். -கே.மீனா

    Reply : 0       0

    Kathafy Saturday, 19 November 2011 04:16 AM

    Salaam
    Dear Azmin

    Alhamdulillah i am always proud of you. I am appreciated your talent. And Sure you will come a world popular artist i am praying for that.

    Reply : 0       0

    AISHWARYA SAMPATH KUMAR Friday, 18 November 2011 10:25 PM

    அண்ணா உண்மையில் எங்குமே திறமைக்கு மதிப்பு இல்லை.. தாங்கள் சொல்வது போல் முதுகு சொரிதலும் காக்காய் பிடிப்பதுமே வெற்றி கொள்கிறது...

    Reply : 0       0

    நளின் Friday, 18 November 2011 11:06 PM

    நெற்றியடி!
    வழிமொழிகிறேன்!!

    Reply : 0       0

    k.jeyaroopan Friday, 18 November 2011 11:43 PM

    ஒரு கலைஞனுக்கு விருதுகளைவிட மக்களின் அங்கீகாரம்தான் தேவை. அந்த அங்கீகாரம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது ... இதற்கு மேல் ஒரு விருதுகளும் தேவையில்லை... விருதுகள் கிடைப்பவர்கள் தான் திறமை இருக்கும். கலைஞர்கள் என்றும் விருது கிடைக்காதவர்கள் திறமை இல்லாதவர்கள் என்று சொல்ல முடியாது... எனவே உங்கள் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்...

    Reply : 0       0

    niroja Saturday, 19 November 2011 12:07 AM

    அண்ணா மென்மேலும் வெற்றி பெற்று இன்னும் பல சாதனைகளை படைத்தது வளர வாழ்த்துக்கள்.....

    Reply : 0       0

    Tharishiny Saturday, 19 November 2011 12:44 AM

    அழகான கவிதை நடைகள், வாழ்த்துக்கள். இதுபோன்ற படிக்கத்தக்க கவிதைகளை எழுத வேண்டுமென வாழ்த்துகிறேன்.

    Reply : 0       0

    nilan Saturday, 19 November 2011 01:06 AM

    முதலில், கவிஞர் என்று பெயருக்கு முன் போடும் பழக்கத்தை நிறுத்துங்கள்.

    Reply : 0       0

    Mohamed Naleem from Pottuvil Saturday, 19 November 2011 01:09 AM

    மிகப் பெருமையாக இருக்கிறது அஸ்மின் .... வாழ்க வளமுடன்..... நன்றி....

    Reply : 0       0

    dyena Saturday, 19 November 2011 01:59 AM

    கவிஞர் அஸ்மினுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். ஒரு கவிஞனுக்குரிய அனைத்து ஆளுமையும் உங்களிடம் அதிகமாகவே இருக்கின்றது. ஓநாய்களின் ஊளைகளுக்கு செவி கொடுக்காது உங்கள் பணியை தொடருங்கள்.

    Reply : 0       0

    Tharishiny Saturday, 19 November 2011 02:46 AM

    உங்கள் கவிதைகள் அழகான வரிகளுடன் படிபதற்கு எளிதாக இருக்கிறது.

    Reply : 0       0

    nila Saturday, 19 November 2011 03:18 AM

    வாழ்க நிரந்தரமாய்.

    Reply : 0       0

    kandappujeyanthan Friday, 18 November 2011 10:23 PM

    வாழ்த்துக்கள் இளைய கவி அரசர் பொத்துவில் அஸ்மின் அவர்களுக்கு. உங்கள் திறமைக்கு நிச்சயம் சரியான களம் கிடைக்கும் .
    உங்களுடன் இணைத்து பாடல் உருவாக்கியதில் பெருமையடைகிறேன். நன்றி.
    அன்புடன் கந்தப்பு ஜெயந்தன்.

    Reply : 0       0

    Najmasajida Saturday, 19 November 2011 07:13 AM

    GOOD - ALL THE BEST FOR YOUR FUTURE SIR.

    Reply : 0       0

    imamdeen Saturday, 19 November 2011 02:46 PM

    நான் பல கவிஞர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வாறு தமது செவ்வி காணல்களில் பட்டென உண்மைகளை கூச்சம், அச்சம் எதுவும் இன்றி நேரடியாக எந்த கலக்கமும் இல்லாதவாறு சர்வதேசத்துக்கே எடுத்துரைத்த ஒரே ஒரு உண்மைக் கவிஞர் நீங்கள் தானப்பா வாழ்த்துக்கள். நீங்கள் நிச்சயம் மேலும் வளம் பெறுவீர்கள்.

    Reply : 0       0

    jes Saturday, 19 November 2011 04:56 PM

    வாழ்த்துக்கள் அஸ்மின்

    Reply : 0       0

    Thayanithy Thambiah Saturday, 19 November 2011 05:25 PM

    வாழ்த்துக்கள் அஸ்மின். விருதுக்கே விருதா! நீங்கள் எங்கள் தமிழுக்கு வாய்த்த பெரும் விருதல்லவா!

    Reply : 0       0

    Kalaimahel Hidaya Risvi Saturday, 19 November 2011 05:28 PM

    நல்ல கருத்துக்களை முன் வைத்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்...

    Reply : 0       0

    ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா Saturday, 19 November 2011 05:29 PM

    ஆழ வேரோடி!! அகன்று விழுதுகள் பரப்புக!! வாழ்த்துகிறேன்!!

    Reply : 0       0

    msmfashry Saturday, 19 November 2011 09:40 PM

    அருமை அஸ்மின் .... பெருமையாய் இருக்கிறது நண்பா .... நானும் உன் நண்பன் என்பதை எண்ணுகையில் .... என்றும் என் வாழ்த்துக்கள் உன்னுடன் இருக்கும் உயிருள்ளவரை .... வாழ்க வளமுடன் .... வளர்க வையகம் போற்ற ......

    Reply : 0       0

    risly samsad Sunday, 20 November 2011 05:38 PM

    இந்த நாளில் எனது வாழ்த்து வர நீங்கள் கொடுத்து வைத்தவங்க. ஏன்னா இன்றைய நாள் மீண்டும் வராதுப்பா அதத்தான் சொன்னம்.

    Reply : 0       0

    chandran shanmugam Sunday, 20 November 2011 07:00 PM

    வணக்கம் கவிஞர் அஸ்மின், உங்களை நானும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன் மிகவும் சிறந்த கவிதைகளையும் பாடல்களையும் தருகிறீர்கள். நேர்காணல்களில் பதில் வழங்கும் போதும் நல்ல நடையைக் கையாளுகிறீர்கள் பாராட்டுக்கள்.
    ஆவூரான்.

    Reply : 0       0

    thillai Monday, 21 November 2011 02:10 AM

    வணக்கம் அஸ்மின் அடர்த்தியான ஆளுமை
    வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .