2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கலைகளுக்கென செய்தியாளர்கள் தேவை: சி.ஜெயசங்கர்

Kogilavani   / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஊடகங்கள் மிகப்பெரும்பாலும் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் அல்லது பாரம்பரிய கலைகளென்று ஏற்கனவே உள்ள பழைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றதே தவிர, இன்றும் உயிர்ப்புடன் நடக்கும் விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தயாராக இல்லை. ஏனென்றால் அரசியல் செய்தியாளர், வணிகச் செய்தியாளர் போன்று கலைகளுக்கென செய்தியாளர்கள் இல்லை' என்கிறார் நாடக நடிகரும் எழுத்தாளருமான சி.ஜெயசங்கர்.

எழுத்தாளர், நாடக நடிகர், சமூக செயற்பாட்டாளர், கூத்து மீளுருவாக்க செயற்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர் என பல தளங்களில் தமது கலைப்பணியை ஆற்றிவரும் இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை  தலைவராகவும் விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

கோண்டாவிலை பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பிரிவில் சிறப்புப் பட்டம் பெற்றுள்ளதுடன் கிழக்குப் பல்கலைக்கழத்தில் சுதேசிய சமுதாய அரங்காக கூத்தின் மீளுருவாக்கம் என்ற தலைப்பில் முதுகலைமாணி பட்டமும் பெற்றுள்ளார்.

'நாடகம், கூத்து இரண்டும் எனது இருகண்கள் போன்றன' என்று கூறும் இவர், கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டு வரும் மூன்றாவது கண் அமைப்பின் இணைப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார்.

கூத்து மீளுருவாக்கச் செயற்பாடுகளில் தன்னை மும்முரமாக ஈடுப்படுத்தி வரும் இவர் பாரம்பரிய கூத்துக்கலையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்காக எங்களுடன் அவர் பகிர்ந்துகொண்டவை...

கேள்வி:- எமது பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றதாக ஒரு கூற்று சமூகத்தில் நிலவி வருகிறது. இதைப்பற்றி உங்களது கருத்து என்ன?

பதில்:- இலங்கையில் தமிழர்கள் வாழும் இடங்களான வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பகுதிகளில் இன்றும் பாரம்பரிய கலைகள் உயிர்ப்புடன் இருந்து வருகின்றன. பல இடங்களில் சிறு அளவிலான உதவிகள் கிடைக்கும் நிலையில் அக் கலையினை பயிலக்கூடிய நிலையிலும் அதற்கான ஆர்வத்துடனும் கலைஞர்கள் இருந்து வருகின்றனர்.

வெளியில் கூறப்படுவதைப் போன்று தமிழில் பாரம்பரிய கலைகள் அருகிவருகின்றன என்ற கருத்தானது சமூகத்திற்குள் சென்று கிராமங்களின் உள்ளார்ந்த நிலைகளை அறியாதவர்களின் கூற்றாகும். ஆனால் அதுதான் அறிவு பரப்பிலும் ஊடகங்களிலும் கடந்த 50 வருடங்களாக மீண்டும் மீண்டும் கூறப்பட்டும் வருகிறது.

தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கு பயணித்து அங்கு வாழும் கூத்து கலைஞர்களுடன் வேலை செய்து அதனூடாக பெற்ற அனுபவத்துடன் கூறுகின்றேன் இன்றும் இந்த பாரம்பரிய கலைகள் இவ்விடங்களில் மிகவும் வலுவாக உள்ளன.
போர், இடம்பெயர்வுகள், பொருளாதார பிரச்சினை என்ற விடயங்கள் இதற்கு சவால்களாக இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அந்த சமூகங்கள் இந்த பாரம்பரிய கலைகளை பயின்று வருகின்றன.

பாரம்பரிய கலைகள் அருகி வருகிறது என்ற கூற்றின் பின்னால் அக்கலைகளை பாதுகாப்பவர்களாக, அதனை மீட்பவர்களாக சிலர், சில நிறுவனங்கள் தம்மை அடையாளப்படுத்துகின்றனர். எனவே இதற்கென ஒதுக்கும் நிதிகளை பெற்றுக்கொள்வது, அரசினால் வழங்கப்படும் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கான ஒரு பொய்யான வழிமுறையாக இந்தக் கூற்றுக்கள்; பயன்படுகிறதே தவிர யதார்த்தம் அவ்வாறானது அல்ல.

கேள்வி:- கலைகள் பயன்பாட்டுக் கலைகளாக சமூகத்தில் உள்ளன என்று ஒரு பொதுவான கூற்று உண்டு. இந்தக் கூத்துக்கலை எவ்வாறு சமூகத்திற்கு பயன்பாடுடைய கலையாக அமைந்து வருகின்றது என்பது பற்றி கூறமுடியுமா?

பதில்:- கலை ஆர்வலர்கள் இவ்வாறான கலைகளை பயில்வதற்கு பல காரணங்கள் உள்ளன. போர், இடப்பெயர்வு இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து விடுப்பட்டு ஒரு குழுவாக இருந்து இயங்குவதற்கு அல்லது பார்த்து மகிழ்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக இந்த பாரம்பரிய கலைகளை பயில்வது குறிப்பிடத்தக்கதாகும்.
உதாரணமாக சுனாமி அனர்த்தத்திற்கு பின்பு பல இடங்களில் கூத்தாடல் அதிகமாக நடைபெற்று வருகிறது. 'வீட்டினுள் இருப்பதற்கு அச்சமாகவுள்ளது. இவ்வாறு கூத்தாடுவதனூடாக பொது இடத்தில் ஒன்று கூடியிருக்கமுடியும். இது கலைகட்டிய ஒரு செயற்பாடாக எல்லோரது மனங்களையும் அந்த அச்ச நிலையிலிருந்து விடுவிக்கும். எனவே இங்கு அச்சமென்ற உணர்வே இல்லாமல் போகும்;' என்று அம்மக்கள் இதற்குக் காரணம் கூறுகின்றனர்.

இதேபோல் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் தமது இடத்திற்கு வந்தவுடன் அவர்கள் முதல் வேலையாக பாரம்பரிய கலைகளை பயில்வது, கூத்துக்கள் ஆடுவது என்பதைதான் தொடர்ந்து செய்து வருகின்றனர். சிதைவடைந்த இடங்களுக்குள் இருக்கும்போது இருக்கும் பயம், இழப்பு போன்ற பல உணர்வுகளிலிருந்து தம்மை விடுவித்துக்;கொள்வதற்காக இந்த கலைகளை ஒரு சாதனமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.

எனவே போர்க்காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் போரிற்கு பின்பட்ட காலப்பகுதியிலும் கலைகள் ஒரு சாதனமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

அதேபோல வன்னி பேரழிவிற்கு பின்னர் முகாம்களில் உள்ள மக்கள் இழப்புகள் சோகங்களை மறப்பதற்கு கூத்துக்களை ஆடியுள்ளனர். இங்கு உளவியலாளர்கள் இல்லாத சூழலில் கூத்தர்களும் அண்ணாவியர்களும் இருந்துள்ளனர். இவர்கள் ஒன்று கூடி இந்த கூத்துகளை ஆடியுள்ளனர்.

பாரம்பரியம் என்பது பேணப்படுவதற்கு பதிலாக அது ஓர் ஆக்கபூர்வமான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான ஊடகமாக தொழிற்பட்டுள்ளது.

கேள்வி: எத்தகையதோர் சந்தர்ப்பத்தில் கூத்து மீளுருவாக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது?

பதில்:- கூத்து அருகிவருகிறது, கூத்து பேணப்படல்வேண்டும், கிராமங்களில் ஆடப்படும் கூத்துக்கள் செம்மையில்லை, செம்மைப்படுத்தப்பட வேண்டும் என்ற உயர்வகுப்பு, பல்கலைக்கழ கற்பித்தல் ஊடாக நாம் வரத்தொடங்குகின்றோம். கூத்தென்பது பாட்டும் ஆட்டமும் மட்டுமல்ல. அதை ஆடுகின்ற மனிதர்களும் சேர்ந்ததுதான் கூத்து என்று கூறியது மட்டுமல்லாமல் பல கூத்தர்களுடன் பீக்கிங் சின்னத்தம்பி என்னை அறிமுகப்படுத்தினார்.

கூத்து என்பது சமூகம் சார்ந்த ஒன்றாக இருக்கு என்ற அறிவை அவரது வழிப்படுத்தலும் ஏற்படுத்தித் தந்த தொடர்பும்; தந்தது. கூத்து என்பதை நான் ஒரு செயல்திறனாக பார்க்கிறேன். ஏனென்றால் நாங்கள் நவீன அறிவு காரணமாக நாடகத்தை, ஓர் அரங்கை செயல்திறனாக பார்க்கிறோம். நாடகமென்றால் மேடையில், கூத்தென்றால் வட்டக்களரியில் அரங்கேற்றப்படுவதை மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் தமிழ் அரங்கு என்று கூறும் போது செயல்திறன் என்பது ஒரு பகுதி. ஒரு மூன்று மாதகால தொடர் செயற்பாடுகள் எல்லாம் நிரம்பியதுதான் பாரம்பரிய அரங்கு.

நவீன நாடகம், நவீன அரங்கு என்ற சிந்தனைக்குள் கட்டுப்பட்டிருக்கும்போது இவ்வாறான முழு இரவு கூத்துக்களை பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது. ஆனால் ஊரில் உள்ளவர்கள் பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆனால் இவ்வாறான முழு இரவுக் கூத்துக்களை தொடரந்து பார்த்துக்கொண்டு வரும்போது அந்த கூத்துக்களின் மீது ஓர் ஆர்வம் பிறந்தது.

கூத்து முழு சமூகமும் பார்க்கக்கூடிய ஆற்றுகையாக இருக்கும்போது அவற்றை விட்டு அதில் உள்ள சில பகுதிகளை எடுத்து சுருக்கி படச்சட்ட ஆற்றுகைப்படுத்தும்போது இதுதான் நவீனமானது செம்மையானது என்று கூறுவதில் எழும் பிரச்சினைகள் குறித்து விளங்க தொடங்கியது. செம்மை என்பதும் நவீனம் என்பதும் ஒன்றல்ல. செம்மை என்பது ஒரு வடிவம் சார்ந்த விடயம். நவீனம் என்பது கருத்தியல் சார்ந்த விடயம். ஆனால் இவை இரண்டும் மாறி மாறி பயன்படுத்த பட்டுகொண்டு வருகிறது. இவை சார்ந்தும் கேள்விகள் எழுந்தன.

நாங்கள் பாரம்பரிய விடயங்களை எடுத்துகொண்டு நவீன நாடகங்களை உருவாக்குவது தேவையான ஒன்று. கூத்து என்பது ஆடப்படும் ஒரு சமூகத்தினுடைய வளத்தையும் வலுவையும் வெளிப்படுத்தும் விடயமாக இருக்கும்.

கேள்வி:- இந்த கூத்து மீளுருவாக்கத்தின் பின்பு அதனது தாக்கம் சமூகத்தில் எவ்வாறு பிரதிபலித்துள்ளது?

பதில்:- கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சீலாமுனை கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டில் ஈடுப்பட்டு வந்ததில் அந்த கூத்தர்களுக்குள் இருந்தே பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளை கொண்டு ஆண்களின் செயல்வாதத்தை முன்னெடுக்கின்ற ஒரு குழுவொன்று உருவாகியுள்ளது.

பாடசாலை இடைவிலகலாக இருந்து மாணவர்கள் இன்று கூத்து மீளுருவாக்க செயற்பாட்டின் வளவாளர்களாக, கல்வியல் அரங்கின் வளவாளராக எந்த பாடசாலையில் இருந்து விலகினார்களோ அதே பாடசாலையில் கல்வியல் அரங்க செயற்பாட்டு வளவாளர்களாக உருவாகியிருப்பது என்பது கூத்து மீளுருவாக்க செயற்பாட்டினுடைய தேவையையும் அதனது முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்ற ஒன்றாக உள்ளது.

இது ஒரு குழு நிலையில் முடிவெடுத்துவிட்டு செயற்படுத்தும் விடயமல்ல. ஒவ்வொரு விடயமும் திறந்தவெளியில் கலந்துரையாடுவதனூடாக அதனை செயற்படுத்துவதனூடாக முன்னெடுக்கப்படுகின்ற விடயமாகும். ஒவ்வொரு விடயமும் அணு அணுவாக நிகழ்ந்தேறுகின்ற விடயமாகும்.

கேள்வி:- மட்டக்களப்பு சீலாமுனை கிராமத்தை கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டுக்குரிய பிரதான களமாக தேர்ந்தெடுத்தமைக்கு விசேட காரணம் ஏதும் உள்ளதா?

பதில்:- எமது கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டை முதன் முதலில் மட்டகளப்பு சீலாமுனை கிராமத்தில் ஆரம்பித்தோம். இதற்கு பிரதான காரணம் சீலாமுனை நகரத்திற்கு அண்மையில் இருக்கின்ற ஒரு சிறிய கிராமம். எமக்கு அந்த கிராமத்தில் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஓர் இணைப்பாளராக கௌரீஸன் இருந்தவர் என்பது முக்கியமான விடயமாகும்.

கூத்துக் கலைஞர்களுடன் தொடர்ச்சியாக நடத்திய உரையாடல் எமக்கு கூத்து மீளுருவாக்கத்தை முன்னெடுப்பதற்கு உதவியது. நான் இரவு பகலாக தொடர்ந்து நிற்;பதற்கும் போய்வருவதற்காக இலகுவான கிராமமாக சீலாமுனை கிராமம் இருந்தது.

கேள்வி:- சிறுவர் கூத்தரங்கு குறித்து கூறுங்கள்?

பதில்:- குருக்கள் மடத்தில் சிறுவர் கூத்தரங்கு என்று தொடங்கியிருக்கோம். சிறுவர்களுக்கான அரங்கு என்பது நவீன அரங்கில் மிகமுக்கியமாக உள்ளது. பாரம்பரிய கூத்தரங்கில் சிறுவர்களுக்கான இடங்கள் ஓர் எடுபிடி, உதவியாளர்கள் என்ற வகையில்தான் உள்ளது. கட்டிய காரனுக்கு ஆடுவது மட்டுமே சிறுவர்களாக இருந்தனர்.

சேர்ந்து வேலை செய்தல். அதனூடாக கற்றல், சமூகத்தில் ஒன்றிணைந்து இயங்குதல் என்ற வகையில் சிறுவர்களுக்கும் அத்தகைய அரங்கு உருவாக்கப்படுமானால் அது பலமான விடயமாகும்.

சிறுவயதிலே ஆண்களையும் பெண்களையும் ஒன்றிணைத்து வேலைசெய்வதனூடாக ஏற்கனவே சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் காலப்போக்கில் வலுக்குன்றி போவதற்கு இதுவும் பங்களிப்புச் செய்யும். சிறுவர்களால் சிறுவர்களுக்கான பூங்காவனமாக அதனை வடிவமைத்துக்கொண்டு வருகின்றோம்.

கேள்வி:- பாரம்பரிய கலைகளை ஒலி வடிவத்திற்குள் உள்ளடக்கி அதனை அடுத்த சந்ததிக்கு ஆவணமாக வளங்கும் திட்டம் ஏதும் உண்டா?

பதில்:- பாரம்பரிய கலைகள் உயிர்நிலையில் ஆற்றுகை செய்யப்படும்போதுதான் அதனுடைய பேணுகை உள்ளது. அதனுடைய முழுமையான பரிமானத்தை ஆற்றுகை செய்யப்படும்போதே காணலாம். வீடியோவில் பார்ப்பது என்பது ஓர் உயிரற்ற சடலத்தை பார்ப்பது போன்று. அந்த ஆற்றுகை, ஆற்றுகைச் செய்யப்படும் சூழல், அதில் பங்கெடுப்பவர்கள் எல்லாம் சேர்ந்த உயிர்நிலைதான் பாரம்பரிய கலையினுடைய பேணுகைக்கு அவசியானது.

சில விடயங்களை ஆவணம் என்ற வகையில் செய்துகொண்டு வருகின்றேன். ஆனால் அதனை ஆற்றுகை நிலையில் வைத்திருப்பதுதான் எமது முழுமையான நோக்கம்.

கேள்வி:- இதிகாசம், புராணங்கள் இவற்றிலிருந்து கூத்துக்கான கதைகளை எடுக்காமல் தற்போதைய காலத்திற்கு ஏற்ப புதிய கதைகளை உற்புகுத்தினால் அந்தக் கூத்து ஆற்றுகை சாத்தியப்படக்கூடிய ஒன்றாக இருக்குமா?

பதில்:- 'மழப்பழம'; என்ற கூத்து புதிய ஒரு கிராமிய கதையை எடுத்து சிறுவர்களுக்கான கூத்தாக எழுதப்பட்டுள்ளது. 'நந்திப்போர'; என்ற கூத்தும் கூட மட்டக்களப்பிலிருந்த வாய்மொழி கதையை வைத்துதான் கூத்தாக மாற்றியுள்ளோம். கூத்து என்ற வடிவத்துக்குள் சமகால விடயங்களை பேசக்கூடிய புதிய கதைகளை நாங்கள் உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம்.

அரங்கு என்ற வகையில் அந்த பாரம்பரிய தன்மைகளையும் அத்துடன் இந்த காலவிடயங்களை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

கேள்வி:- திரைப்பட இயக்குநர்களுக்கு கொடுக்கும் அந்தஸ்து கூத்துக்களின் இயக்கத்துக்கு காரணமான அண்ணாவியர்களுக்கு ஏன் வழங்கப்படுவதில்லை..?

பதில்:- காலனித்துவ ஆட்சியில் அறிமுகப்படுத்துகின்ற நவீன அறிவு அதன் காரணமான நவீனமயமாக்கம் என்பது எங்களுடைய பாரம்பரியமான பல விடயங்கள் தொடர்பில் மூடத்தனம், பாமரத்தனம் என்று பள்ளிக்கூடங்களில் கற்பித்துக்கொடுக்கப்பட்டது. எமது மனதில் பாரம்பரிய கருத்துக்கள் குறித்து பதியவைக்கும்போதுதான் நாம் புதிய ஆதிக்க கருத்துக்களை பற்றிக்கொள்வோம். அந்த நோக்கில் காலனித்துவ சிந்தனை எமது மனதில் விதைத்ததுதான் இந்த எமது பாரம்பரியமான விடயங்களை பிற்போக்குத்தனமானது நாகரீகமற்றது, பாமரத்தனமானது, மூடத்தனமானது என்ற விடயங்களாகும்.

அண்ணாவியரென்று பெயரெடுப்பது ஒரு சாதாரண விடயமல்ல. தமிழ் மரபில் அண்ணாவிக்குரிய மதிப்பு மிக முக்கியமானது.

கேள்வி:- வீதி நாடகங்கள் குறித்து கூறுங்கள்?

பதில்:- வீதி நாடகம் என்பது ஒரு குறிப்பிட்ட விடயத்தை மக்களிடம் போய் அவர்களிடம் கலந்துரையாடுவதற்கான வடிவம். இலகுவாக தொடர்புகொள்ளக்கூடிய விடயங்களை எடுத்துக்கொண்டு அரங்கக் கூறுகளை உருவாக்குவார்கள். மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டுமென்றால் உடனடியாக கிராமத்திற்குதான் செல்வார்கள். விழிப்பூட்டல் என்றதிற்குள்தான் இந்த வீதி நாடகங்களும் வருகின்றது.

நகரத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும். வீதி நாடகங்கள் என்பது வேறு வேறு சிந்தனைகளுடன் பயணித்துக்கொண்டிருப்பவர்களை சில சமயம் தரிக்க வைத்து குறித்த விடயத்தில் கவனம் செலுத்தி கலந்துரையாடுவதற்கான ஓர் ஊடகம்.

எளிமையாக, இனிமையாக, வலிமையாக தொடர்புகொள்ளும் வகையில் வீதி நாடகங்கள் உருவாக்கப்படல் வேண்டும். 

கேள்வி:- வேலைப்பளு அதிகம் நிறைந்த சூழலில் நீண்ட நேர கூத்துக்கள் என்பது முழுமையாக மக்கள் மத்தியில் போய் சேரப்படுகிறதா?

பதில்:- வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற எல்லா இடங்களிலும் இந்த நீண்ட நேர கூத்துக்கள் உள்ளன. கூத்து ஆடப்படும் இடத்தில் பார்த்தால் தெரியும் முழு இரவுக் கூத்து, இரண்டு இரவு கூத்து என நடைபெறுகின்றது. இதனை நவீன அரங்க விளக்கத்தினூடாக விளங்கிக்கொள்ளக் கூடாது.

நாம் நவீன நாடகம், நவீன அரங்கு என்பவற்றுடன் சென்று பார்ப்பதுதான் எமது பிரச்சினை. அதிலிருந்து விடுப்பட்டு இந்த பாரம்பரிய அரங்குகள் எவ்வாறு இயங்குகின்றன என்று விளங்கிக்கொண்டால் எமக்கு இந்த பிரச்சினையில்லை. நவீன நாடகம் போன்று இரண்டு மணித்தியாலம் பார்த்துவிட்டு எழும்பி வரும் விடயமல்ல பாரம்பரியக் கூத்துக்கள். ஒரு பக்கம் கூத்து நடைபெற்றுக்கொண்டிருக்கும், மற்றைய பக்கத்தில் காட்ஸ் விளையாடுவார்கள், மற்றொரு பக்கம் ஐஸ்கீரீம் வியாபாரிகள், இன்னொரு பக்கத்தில் நல்ல பாட்டும் சந்ததியுமாக இருக்கும். கலைகட்டிய அந்த இடத்தில் படுத்து உறங்குவதற்கு மிகவும் நன்றாக இருக்கும். கூத்து என்பது பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய முழுமையான அரங்கு.

வருடத்தில் ஒவ்வொரு நாளும் கூத்தாடப்படுவதில்லை. ஒரு கிராமத்தில் கூத்து என்பது 3 மாதத்திற்கு பழகுவார்கள். ஒருநாள் ஆற்றுகை செய்வார்கள். வருடத்தில் கோயில் திருவிழா நடப்பது போல்தான் இந்த கூத்தும்.

இந்த தொழில்நுட்ப காலத்தில் தினம் வேலைப்பளுவால் அவதியுறும் மனிதன் தன்னுடைய ஒய்வுக்கும் தன்னை விடுவிக்கவும் எல்லோரையும் சந்தித்து கொண்டாடுவதற்கான ஒரு விழாவாக இந்த பாரம்பரிய கூத்தரங்கு உள்ளது. நாங்கள் அதற்குள் செயற்பாடுகளை மட்டும் பார்த்துவிட்டு இவர்கள் இரவு முழுதும் ஆடுகின்றார்கள். சாஸ்த்தான உலகில் இது இரண்டு மணித்தியாலங்கள் மட்டும்தான் பார்க்க முடியும் என்று கூறிக்கொள்கிறோம்.

இந்த சாஸ்தான உலகத்தில்தானே புதிய புதிய விழாக்களை கண்டுபிடித்து வைக்கிறார்கள். பொழுதை  போக்கவும் வேலைப்பளுவிலிருந்து விடுபடுவதற்காக ஹோட்டல் வழியே நடக்கும் களியாட்டங்களில் கலந்துகொள்கின்றனர்.

கேள்வி:- நீங்கள் இச்சமூகத்திற்கு சொல்ல விரும்பும் செய்தி...?

தமிழர்கள் மத்தியில் பல்வேறு ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த  விடயங்களை தேடிச் சென்று அதனை மக்கள் மயப்படுத்தவதென்பது ஊடகங்களின் மிக்பெரிய  செயற்பாடாகும்.

ஊடகங்கள் மிகப்பெரும்பாலும் பரதநாட்டியம் கர்நாடக சங்கீதம் அல்லது பாரம்பரிய கலைகளென்று ஏற்கனவே உள்ள பழைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றதே தவிர இன்றும் உயிர்ப்புடன் நடக்கும் விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு ஊடகங்கள் தயாராக இல்லை. ஏனென்றால் அரசியல் செய்தியாளர், வணிகச் செய்தியாளர் போன்று கலைகளுக்கான செய்தியாளர்கள் இல்லை.

கலை, பண்பாட்டு செயற்பாடுகள் அனைத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்று நாங்கள் கருதுகின்றோம். இதற்கு பின்னால் ஒரு சமூக அரசியல், பொருளாதாரத்துடன் தொடர்புடையக்கூடியதாகதான் இந்த கலைகள் அமைந்துள்ளன.

உதாரணத்திற்கு வெங்கல பாத்திரங்களின் உருவாக்கம் என்பது பண்பாட்டு பாரம்பரியம் மட்டுமல்ல. அது உள்ளூர் கைத்தொழில்துறையாகவும் உள்ளது. இதேபோன்றுதான் பாரம்பரிய வாத்தியக்கருவிகள் செய்வது அதனை திருத்துவது என்பதும் உள்ளூர் கைத்தொழில்துறையாகவும் பண்பாட்டு பாரம்பரியமாகவும் உள்ளது.

இந்த விடயங்களில் இன்றும் மிகவும் துறைபோனவர்கள் வேலைசெய்துகொண்டு இருக்கின்றார்கள். அந்த விடயங்களை வெளிக்கொண்டு வருவது, அதற்கு ஊக்கமளிப்பது என்பது ஒரு சமூகத்தை வலுப்படுத்துவதற்கும் வளப்படுத்துவதற்குமான முக்கியமான விடயமாகும். ஆகவே இந்த விடயங்களில் பயிற்சியும் பரீட்சையமும் உடையவர்களை உருவாக்கி அதற்கூடாக இந்த விடயங்களை ஊடகங்களுக்கூடாக கொண்டு வருவது என்பது முக்கியமான தேவையாகும்.

ஆனால் அதற்கு மாறாக நகர மையங்களில் இருந்துகொண்டு பாரம்பரிய கலைகள் அருகிபோய்விட்டது, இப்போது இல்லை என்று கூறிக்கொண்டு அதற்காக வரும் நிதிகளை பெறுபவர்களின் கருத்துக்களை இந்த ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. இந்த இடைத்தரகர்களை தாண்டி நேரடியாக அந்த கலைஞர்களை தேடிச் செல்ல வேண்டிய தேவையொன்று உள்ளது. எனவே இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

நேர்காணல்:- க.கோகிலவாணி

படங்கள்:- நிஷால் பதுகே


You May Also Like

  Comments - 0

  • y.yarlini Wednesday, 29 February 2012 06:42 PM

    நன்றிகள். நிச்சயமாக, மக்கள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டியவை.

    Reply : 0       0

    V.Jeyantharuban Friday, 02 March 2012 02:02 PM

    ஆரோக்கியமான கருத்துப்பதிவு , இன்று மிக அவசியமானதும்கூட ....

    Reply : 0       0

    R.Lavanya Sunday, 31 July 2016 03:36 AM

    அருகி வரும் கலைக்கு அவசியமான ஒரு கருத்து பதிவே.. வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .